பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், இந்த புதிய வரிகள் ஐபோன்களுக்குப் பொருந்துமா?
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது 50 சதவீத இறக்குமதி வரி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் யுக்ரேன் போருக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என குற்றம் சாட்டி, இதன் காரணமாகவே இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரிவிதிப்படுகிறது என்கிறார் டிரம்ப்.
புதிய வரிகளால் என்ன பாதிப்பு?
இனி வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், இந்தப் புதிய வரி விகிதங்களின்படி அமெரிக்க அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அந்த நிறுவனம் பொருளின் விலையை உயர்த்தி வரிச் செலவை ஈடு செய்தால், இந்தச் சுமை முழுவதும் அமெரிக்க நுகர்வோரின் மீதுதான் விழும்.
அப்படி சுமத்த விரும்பாத நிறுவனங்கள், ட்ரம்பால் வரி விதிக்கப்படாத நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய விரும்பலாம். இதனால், வரி விதிக்கப்பட்ட நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வேலை இழப்பு ஏற்படலாம்.
பட மூலாதாரம், Getty Images
ஐபோன்களுக்கு எந்த அளவுக்கு வரி விதிக்கப்படும்?
தற்போதைய சூழலில் ஐபோன்களுக்கு இந்தப் புதிய வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பெருமளவில் ஆசியாவில்தான் தயாராகின்றன.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து இறக்குமதி வரி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்த நிலையில், ஆகஸ்ட் ஆறாம் தேதி ‘ஆப்பிள்’ வெளியிட்ட செய்திக் குறிப்பில் அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் 600 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிவித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன்களுக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்குப் பெறும் முயற்சியாகவே இந்தத் திட்டத்தை டிம் குக் அறிவித்திருப்பதாக ‘ப்ளூம்பர்க்’ கூறுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தபோது, ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், பிற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
ஜூலை மாத இறுதியில் அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசிய டிம் குக், அமெரிக்காவில் விற்பனையாகும் ஐ போன்களில் பெரும்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகவும் ஐபேட், ஐவாட்ச், மேக்புக் போன்றவை வியட்னாமில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
செமி கண்டக்டர்கள் உள்பட எந்தெந்தப் பொருட்கள் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியமானவை என அமெரிக்காவின் வர்த்தகத் துறை ஆராய்ந்து வருதாகவும் அது நிறைவடையும்வரை அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் ஸ்மார்ட் போன்கள் மீது வரிகள் விதிக்கப்படாது என்றும் ப்ளூம்பர்க் கூறுகிறது.
சீனாவில் பெருமளவில் ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்குப் பிறகு, தனது உற்பத்தியை வேறு பல நாடுகளுக்கும் பரவலாக்கியது. குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இறக்குமதிகள் மீது வரிகளை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்ததையடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் இந்தியா மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்குப் பிறகு வரிகள் அமலுக்கு வந்தபோது, இது 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதாகக்கூறி கூடுதலாக 25 சதவீத வரியை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வந்தது.
எதிர்காலத்தில் ஐபோன்களுக்கு வரி விதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டா?
பட மூலாதாரம், Getty Images
“தற்போதைய கொள்கையின்படி இறக்குமதியாகும் செமிகண்டக்டர்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றுக்கு எவ்வித வரிகளும் கிடையாது. ஆகவே, ஐபோன்களைப் பொறுத்தவரை இந்த வரி விதிப்புப் பிரச்சனை இப்போதைக்குக் கிடையாது. எதிர்காலத்தில் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது” என்கிறார் குளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் நிறுவனரான அஜய் ஸ்ரீ வத்ஸவ்.
ட்ரம்பின் வரி விதிப்பு இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை பாதிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார் கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச்சின் ஆய்வுப் பிரிவு இயக்குநரான தருண். “அமெரிக்காவைப் பொறுத்தவரை, சீனாவிற்கு வெளியிலும் போன்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தேவை. ஆகவே இதற்கு வரி விதிக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன். மேலும் ஐபோன்களைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் விற்பனை இருக்கிறது. ஆகவே வரி விதித்தாலும் பாதிப்பின் அளவு சற்று குறையும்” என்கிறார் தருண்.
இந்தியாவில் ஐபோன்களின் விலைகளில் மாற்றம் இருக்குமா?
பட மூலாதாரம், Getty Images
எதிர்காலத்தில் ட்ரம்ப் ஸ்மார்ட் போன்களுக்கும் வரிகளை விதித்தால் அமெரிக்காவில் நிச்சயம் அதன் விலைகள் உயரும். ஆனால், இந்தியாவில் என்ன ஆகும்?
“இந்தியாவில் விலைகள் உயராது. காரணம், இந்தியாவில் விற்பனையாகும் போன்கள் இங்கேயே தயாராகின்றன. மிக உயர்ந்த ரகம் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் வெளிநாடுகளில் தயாராகிறது. ட்ரம்பின் வரி அந்நாட்டிற்குள் இறக்குமதியாகும் பொருட்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதால் இந்தியாவில் ஐபோன்களின் விலை உயர வாய்ப்பில்லை” என்கிறார் அஜய் ஸ்ரீவத்ஸவா.
ஐபோனின் விலைகளைப் பொறுத்தவரை, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரே விலையிலேயே விற்பனையாகிறது என்பதால், உள்ளுர் வரிகள் மட்டுமே விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் பொருளாதார நிபுணரான பிரபாகர்.
ஐபோன்களுக்கு வரி விதித்தால் என்ன ஆகும்?
பட மூலாதாரம், Getty Images
“ஐபோன்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒருங்கிணைப்பு மட்டும்தான் நடக்கிறது. இதற்கான உதிரி பாகங்கள் சீனாவில் இருந்துதான் வருகின்றன. போன்களுக்கு வரி விதித்தால், ஆப்பிள் நிறுவனம் பெரிய அளவில் பாதிக்கப்படும். அதனால்தான் இப்போதைக்கு வரி இல்லை. ஆனால், உற்பத்தியை அங்கே மாற்றச் சொல்லி அந்நிறுவனத்திடம் சொல்லிவருகிறார் ட்ரம்ப். ஆப்பிள் என்ன செய்யுமெனப் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக, இந்த வரியினால் பெரிய பாதிப்பு என்பது ஜவுளி, நகைகள், வாகன உதிரிபாக உற்பத்தி போன்றவற்றில்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது வேறு சந்தைகளைப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், வேறு சந்தைகள் எதிலும் இவ்வளவு விலை கொடுத்து நம் பொருட்களை வாங்க மாட்டார்கள். ஆகவே இந்தத் துறைகள் குறித்துதான் நாம் பெரிய அளவில் கவலைப்பட வேண்டும்.
இந்தியாவிலும் ஐபோன் உற்பத்தியாகிறது என்ற பெயரும் வேலைவாய்ப்பும்தான் இதனால் கிடைக்கிறது. வேறு பலன்கள் இல்லை” என்கிறார் பிரபாகர்.
அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோனில் புதிய, மேம்படுத்தப்பட்ட ஐபோன் 17 மாடலை வெளியிடவிருக்கிறது. செப்டம்பர் 9ஆம் தேதி இந்த புதிய மாடல் அமெரிக்காவில் வெளியாகவிருக்கிறது. இந்தியாவில் இந்த போனுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐபோன் 17 மாடலைப் பொறுத்தவரை மொத்தம் நான்கு வேரியண்ட்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நான்கு வேரியண்ட்களுமே இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகவிருப்பதாக ஆப்பிள் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘ப்ளும்பர்க்’ இணையதளம் தெரிவிக்கிறது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு