• Tue. Dec 30th, 2025

24×7 Live News

Apdin News

‘அமெரிக்காவின் 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம்’ – டிரம்புடனான சந்திப்புக்குப் பின் ஜெலென்ஸ்கி தகவல்

Byadmin

Dec 29, 2025


காணொளிக் குறிப்பு, “90% உடன்பாடு ஏற்பட்டுள்ளது” – டிரம்பை சந்தித்த பிறகு ஜெலென்ஸ்கி கூறியது என்ன?

‘அமெரிக்காவின் 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம்’ – டிரம்புடனான சந்திப்புக்குப் பின் ஜெலென்ஸ்கி தகவல்

“நாங்கள் உடன்பாட்டை நெருங்கி வருகிறோம்.”

யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு டிரம்ப் சொன்ன வார்த்தைகள் இவை.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, அதிபர் டிரம்ப் இடையே சந்திப்பு நடைபெற்றது. பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பில் நடந்தது என்ன?

ரஷ்யா யுக்ரேன் போர் தொடர்பான இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாக இரு தலைவர்களுமே கூறினர். அதே நேரம் நிலப்பரப்பு தொடர்பான பிரச்னை இன்னும் முட்டுக்கட்டையாக இருப்பதாக டிரம்ப் கூறினார். முன்னர், கூடுதலாக சில நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என ரஷ்யா கூறியிருந்தது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தில் 90% வரை உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். யுக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பான விவகாரம் 95% வரை நிறைவடைந்ததாக டிரம்ப் தெரிவித்தார்.

15 ஆண்டுகள் வரையிலான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். எனினும் இதனை அமெரிக்கா உறுதி செய்யவில்லை.

டான்பாஸ் பிராந்தியம் குறித்த முடிவு என்ன?

மேலும் சுமார் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மற்ற விஷயங்கள் குறித்து அமெரிக்க மற்றும் யுக்ரேன் குழுக்கள் அடுத்த வாரம் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு டெலிகிராம் செயலியில் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து விஷயங்களிலும் நாங்கள் ஆழமான மற்றும் பொருத்தமான பேச்சுவார்த்தையை நடத்தினோம். கடந்த சில வாரங்களில் யுக்ரேன் மற்றும் அமெரிக்க குழுக்கள் எட்டிய முன்னேற்றத்தை பெரிதும் மதிக்கிறோம்.” என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.

2022 பிப்ரவரியில் யுக்ரேன் மீது முழுமையான தாக்குதலை ரஷ்யா தொடங்கியது. தற்போது, யுக்ரேனின் நிலப்பரப்பின் சுமார் 20% பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ரஷ்யா பெரும்பாலும் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிழக்கு யுக்ரேனின் டான்பாஸ் பகுதியை ஆயுதமற்ற மண்டலமாக மாற்றும் முன்மொழிவுவில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை என டிரம்ப் கூறினார்.

தற்போது, டோனெட்ஸ்க் (Donetsk) பகுதியின் சுமார் 75 சதவிகிதத்தையும், அதற்கு அடுத்துள்ள லுஹான்ஸ்க் (Luhansk) பகுதியின் சுமார் 99 சதவிகித பகுதிகளையும் ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த இரு பகுதிகளை உள்ளடக்கியதுதான் டான்பாஸ் என அழைக்கப்படுகிறது.

இந்த பகுதியில் யுக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய பகுதியிலிருந்தும் யுக்ரேன் படைகள் பின்வாங்க வேண்டும் என ரஷ்யா கூறுகிறது. ஆனால், அந்த பகுதியை யுக்ரேன் படைகள் கண்காணிக்கும் ஒரு சுதந்திர பொருளாதார மண்டலமாக மாற்றலாம் என யுக்ரேன் வலியுறுத்துகிறது.

யுக்ரேன் இழந்த நிலப்பரப்புகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நிலைப்பாட்டை பலமுறை மாற்றியுள்ளார். செப்டம்பரில், யுக்ரேன் அந்த பகுதிகளை மீட்டெடுக்கக்கூடும் என்று கூறினார். பின்னர், அந்த நிலைப்பாட்டை மாற்றினார். தற்போது “அது மிகவும் கடினமான விவகாரம். ஆனால் ஒரு கட்டத்தில் தீர்வு காணப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை சாத்தியமா?

யுக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் 95% வரை முடிவடைந்துவிட்டதாக டிரம்ப் கூறினார். அதே நேரம், எதிர்கால தாக்குதல்களிலிருந்து யுக்ரேனைப் பாதுகாக்க படைகள் அல்லது தளவாட ஆதரவு வழங்குவது குறித்து முறையான உத்தரவாதம் எதையும் டிரம்ப் வழங்கவில்லை.

மேலும், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய 3 நாடுகளும் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் எனக் கூறிய டிரம்ப், சரியான நேரத்தில் இது சாத்தியமாகும் என்றார்.

அதே நேரம் பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக தோல்வியடைந்தாலோ அல்லது மிக மோசமாக சென்றாலோ போர் தொடர்ந்து நீடிக்கலாம் என்றும் எச்சரித்தார்.

அமெரிக்காவின் உத்தரவாதம் என்ன?

“பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் இந்தப் போர் உண்மையில் முடிவுக்கு வந்ததாகக் கருத முடியாது. அத்தகைய அண்டை நாடு (ரஷ்யா) இருக்கின்றபோது. ஆக்கிரமிப்பு மீண்டும் தொடங்குவதற்கான ஆபத்து இருப்பதால் இந்தப் போர் முடிந்ததாக நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது,” என ஜெலென்ஸ்கி விளக்கியதாக ஏஎஃப்பி செய்தி முகமை கூறுகிறது.

“அமெரிக்கா 30, 40 அல்லது 50 ஆண்டுகளுக்கான சாத்தியத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்தார்.

கால அளவு பற்றி அமெரிக்கா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாகக் கூடிய டிரம்ப், ஐரோப்பிய கூட்டாளிகள் அமெரிக்காவின் ஆதரவுடன் அந்த முயற்சியின் “பெரும்பங்கை எடுத்துக் கொள்வார்கள்” என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி மூலம் டிரம்ப் உரையாடினார். அந்த உரையாடல் குறித்த விவரங்களை டிரம்ப் அதிகம் வெளியிடவில்லை என்றாலும் யுக்ரேன் வெற்றி பெற வேண்டும் என புதின் விரும்புகிறார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகக் கூறினார்.

அதே நேரம், யுக்ரேன் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வழிவகுக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு அதிக ஆர்வம் இல்லை என்றும் டிரம்ப் கூறினார்.

பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தை இரண்டரை மணி நேரம் நீடித்தது, அதுவே ஒரு குறிப்பிடத்தக்க சாதனைதான். டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இதற்கு முன்ஒருபோதும் இவ்வளவு நேரம் ஒரே அறையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என்கிறார் பிபிசி மானிட்டரிங்கின் ரஷ்ய ஆசிரியர் விட்டலி ஷெவ்சென்கா.

இரு அதிபர்களும் முன்பை விட அதிக நம்பிக்கையுடன் பேசினாலும், முந்தைய பேச்சுவார்த்தைகளைப் போலவே இந்த முறையும் எந்த வெளிப்படையான முன்னேற்றத்தையும் பார்க்க முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

டிரம்பின் அழுத்தம், எரிச்சல் மற்றும் கோபத்தின் சுமையை யுக்ரேன் தலைவரே சுமந்து வருகிறார். புதின் பற்றி டிரம்ப் தொடர்ந்து நேர்மறையாகப் பேசுவது, இது மாற வாய்ப்பில்லை என்பதைக் காட்டுகிறது. டிரம்ப் மற்றும் ஜெலன்ஸிகியிடம் நம்பிக்கை தென்பட்டாலும் யுக்ரேனில் விரைவில் நீடித்த அமைதி நிலவும் என்பதற்கான சிறிய அறிகுறியே தெரிவதாகவும் அவர் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin