30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை, புதிய உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
35 வயதான லிண்ட்சே மற்றும் 34 வயதான டிம் பியர்ஸ் தம்பதிக்கு 2025 ஜூலை 26 சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது. தாடியஸ் டேனியல் பியர்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.
பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் பேசிய டிம் பியர்ஸ், “இது அறிவியல் புனைக்கதை திரைப்படத்தில் நடைபெறும் சம்பவத்தைப் போல் இருக்கிறது” என தனது குடும்பத்தினர் நினைப்பதாகக் கூறினார்.
கருவை உறைய வைத்து பின்னர் அதை பயன்படுத்தி குழந்தை பெறும் தொழில்நுட்பத்தில், நீண்ட காலமாக உறைநிலையில் இருந்து, நேரடி பிரசவம் மூலம் வெற்றிகரமாக பிறந்த குழந்தை இது என்று நம்பப்படுகிறது.
இதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டு உறைய வைக்கப்பட்ட கருவிலிருந்து 2022 ஆம் ஆண்டு பிறந்த இரட்டைக் குழந்தைகள்தான் நீண்ட காலமாக உறைநிலையில் இருந்த கருவில் இருந்து பிறந்த குழந்தைகள் என்ற சாதனையை படைத்திருந்தனர் .
1994ஆம் ஆண்டில் லிண்டா ஆர்ச்சர்டு என்பவர் தனது கணவருடன் இணைந்து உருவாக்கிய கரு இது. தற்போது 62 வயதாகும் லிண்டா ஆர்ச்சர்டு, தனது அப்போதைய கணவருடன் இணைந்து ஐ.வி.எஃப் IVF மூலம் குழந்தை பெறும் முயற்சியில் நான்கு கருக்களை உருவாக்கினார்.
அதில் ஒன்றை பயன்படுத்தி பெண் குழந்தை பெற்றெடுத்தார். அந்த குழந்தை வளர்ந்து தற்போது 30 வயது அடைந்துவிட்டது. மற்ற மூன்று கருக்கள் சேமிப்பிலேயே இருந்தன.
பட மூலாதாரம், Reuters
லிண்டா ஆர்ச்சர்டுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன பிறகும், அவர் தனது கருக்களை அகற்றவோ, ஆராய்ச்சிக்காக தானம் செய்யவோ அல்லது பெயர் குறிப்பிடாமல் வேறு குடும்பத்திற்கு கருவை தானமாக கொடுக்கவோ விரும்பவில்லை.
ஏனென்றால், உறைநிலையில் இருக்கும் கரு, குழந்தையாக பெற்றெடுக்கப்பட்டாலும், அந்தக் குழந்தையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார். ஏனெனில் தன்னுடைய மகளுடன் அந்தக் குழந்தைக்கு தொடர்பு இருக்கவேண்டும் என்று விரும்பினார்.
நைட்லைட் கிறிஸ்டியன் அடாப்ஷன்ஸ் என்ற கிறிஸ்தவ கரு தத்தெடுப்பு நிறுவனத்துடன் தொடர்பு ஏற்படும் வரை, லிண்டா ஆர்ச்சர்ட், தனது கருக்களை சேமிப்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டாலர்களை கட்டணமாக செலுத்தி வந்தார்.
லிண்டா ஆர்ச்சர்ட் தேர்ந்தெடுத்த ஸ்னோஃப்ளேக்ஸ் என்ற திட்டம், நன்கொடையாளர்கள் கருவை தத்தெடுக்கும் ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. அதாவது, கருவை நன்கொடையாக கொடுப்பவர், தத்தெடுப்பவர்களின் மதம், இனம் மற்றும் எந்த நாட்டவராக இருக்கவேண்டும் என்று தங்கள் விருப்பத்தின்படி நன்கொடை பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
திருமணமான, காகேஸியன், கிறித்தவ தம்பதிக்கு தனது கருவை தத்துக் கொடுக்க லிண்டா ஆர்ச்சர்டு விரும்பினார். அந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஏனெனில் தனது குழந்தை “நாட்டை விட்டு வெளியே செல்வதில்” தனக்கு விருப்பமில்லை என்று அவர் எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் தெரிவித்தார்.
லிண்டா ஆர்ச்சர்டின் விருப்பப்படியே நன்கொடையாளர்களாக லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் தம்பதியர் தத்தெடுக்க முன்வந்தனர். லிண்டா ஆர்ச்சர்டின் கருவை தத்தெடுக்க முடிவு செய்வதற்கு முன்பு, பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த தம்பதியர் குழந்தை பெறும் மருத்துவ நடைமுறையை மேற்கொண்ட டென்னசியில் உள்ள ரிஜாய்ஸ் கருத்தரித்தல் மையம் (Rejoice Fertility) என்ற ஐவிஎஃப் மருத்துவமனை, கரு எத்தனை ஆண்டுகளாக உறைநிலையில் இருந்தது அல்லது அதன் நிலைமையை பொருட்படுத்தாமல், கிடைத்த எந்தவொரு கருவையும் பயன்படுத்தி தம்பதிக்கு வெற்றிகரமாக குழந்தை பெறச் செய்வதே தங்களது நோக்கம் என்று கூறியது.
தானும் தனது கணவரும் “எந்தவொரு சாதனையையும் முறியடிக்க” விரும்பவில்லை, மாறாக “ஒரு குழந்தையைப் பெறவே விரும்பினோம்” என்று லிண்ட்சே பியர்ஸ் கூறினார்.
தனது கருவிலிருந்து உருவான குழந்தையை இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்றும், ஆனால் தனது மகளைப் போலவே இருப்பதை காண முடிந்தது என்றும் லிண்டா ஆர்ச்சர்ட் எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் தெரிவித்தார்.