பட மூலாதாரம், FREDERIC J. BROWN/AFP via Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக நியூயார்க், வாஷிங்டன் டிசி, சிகாகோ, மயாமி மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சனிக்கிழமை காலை நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
தெருக்களிலும் மெட்ரோ ரயில் நிலையங்களின் வாசல்களிலும், “மன்னராட்சி அல்ல, ஜனநாயகம்,” மற்றும் “அரசியலமைப்பு விருப்பத்தேர்வு அல்ல,” என்கிற பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள் நிரம்பி வழிந்தனர்.
போராட்டங்களுக்கு முன்பு அதில் ஈடுபடுவர்கள் தீவிர இடதுசாரி ஆன்டிஃபா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என டிரம்பின் கூட்டாளிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தப் பேரணிகள் ‘அமெரிக்க வெறுப்பு பேரணிகள்’ எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால் சனிக்கிழமை பேரணிகள் அமைதியாக நடைபெற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“நோ கிங்ஸ் (மன்னர்கள் இல்லை)” என்கிற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் அடிப்படை கொள்கை என்பது அஹிம்சை தான் என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் சாத்தியமான மோதல்களை தவிர்க்குமாறும் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மேளதாளங்களுக்கு மத்தியில் “இது தான் ஜனநாயகம் போல் இருக்கிறது” என முழக்கங்களை எழுப்பி வந்தனர்.
வானத்தில் ஹெலிகாப்டர்களும் டிரோன்களும் பறந்த நிலையில் காவல்துறையினர் சாலையோரமாக நின்றிருந்தனர்.
நகரின் ஐந்து பகுதிகளில் கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அமைதியான முறையில் போராட ஒருங்கிணைந்திருந்ததாகவும் போராட்டம் தொடர்பாக எந்த கைதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
டைம்ஸ் சதுக்கத்தில் பணியிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு 20,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கிறார்.
பட மூலாதாரம், Stephani Spindel/VIEWpress
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் “ஃபாசிசம் மற்றும் எதேச்சதிகாரத்தை நோக்கிய நகர்வைக்” கண்டு கோபமும் கவலையும் அடைந்ததால் நியூயார்க் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பகுதி நேர எழுத்தாளரும் ஆசிரியருமான பெத் ஜாஸ்லோஃப் தெரிவித்தார்.
“நியூயார்க் நகரைப் பற்றி நான் மிகவும் அக்கறைப்படுகிறேன். இங்கு பலருடன் இருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.” என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Grace Eliza Goodwin/BBC
ஜனவரி மாதம் மீண்டும் அதிபராக பதவியேற்றதிலிருந்து அதிபருக்கான அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளார் டிரம்ப், மத்திய அரசாங்கத்தின் அங்கங்களை நிர்வாக உத்தரவுகளைப் பயன்படுத்தி கலைப்பது மற்றும் மாகாண ஆளுநர்களின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நகரங்களில் படைகளை குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தனது அரசியல் எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளுக்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
தன்னை சர்வாதிகாரி அல்லது ஃபாசிஸ்ட் என அழைப்பதை நகைப்பிற்குரியது எனக் கூறும் டிரம்ப் நெருக்கடியில் இருக்கும் நாட்டை மீண்டும் கட்டமைக்க தனது நடவடிக்கைகள் அவசியமானது எனத் தெரிவிக்கிறார்.
ஆனால் டிரம்ப் அரசின் சில நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்றும் அமெரிக்க ஜனநாயகத்திற்கே ஆபத்தானவை என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
இத்தாலியில் பிறந்து வளர்ந்தவரும் நியூஜெர்சிவாசியுமான 68 வயதான மின்னணு பொறியாளர் மாசிமோ மாஸ்கோலி போராட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த நூற்றாண்டில் அவரின் சொந்த நாடு (இத்தாலி) சென்ற பாதையில் அமெரிக்காவும் செல்வதால் கவலையடைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
“முசோலினியின் ராணுவத்தை உதறித்தள்ளி புரட்சி இயக்கத்தில் சேர்ந்த இத்தாலிய ஹீரோவின் உறவினர் நான். அவர் ஃபாசிஸ்டுகளால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 80 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஃபாசிசத்தைக் காண்பேன் என நான் நினைத்திருக்கவில்லை.” என மாஸ்கோலி தெரிவித்தார்.
பட மூலாதாரம், Grace Eliza Goodwin/BBC
டிரம்பின் நடவடிக்கைகளில் குறிப்பாக புலம்பெயர்ந்தோரை கைது செய்வது மற்றும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கான சுகாதார காப்பீட்டை ரத்து செய்வது கவலையளிப்பதாக மாஸ்கோலி தெரிவிக்கிறார்.
“நாம் உச்சநீதிமன்றத்தை நம்பியிருக்க முடியாது, நாம் அரசாங்கத்தை நம்பியிருக்க முடியாது. நாம் நாடாளுமன்றத்தை நம்பியிருக்க முடியாது. அரசு, நிர்வாகம், நீதித்துறை என அனைத்தும் தற்போது அமெரிக்க மக்களுக்கு எதிராக உள்ளன. எனவே தான் நாங்கள் போராடுகிறோம்,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். “
செனட் சிறுபான்மை பிரிவு தலைவரும் நியூயார்க் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான சுக் ஷூமரும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
“அமெரிக்காவில் சர்வாதிகாரிகள் கிடையாது, டிரம்ப் நமது ஜனநாயகத்தை அழிக்க நாம் அனுமதிக்கமாட்டோம்,” என ஷுமர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருந்தார். போராட்டத்தில் “சுகாதாரத் துறை நெருக்கடியை சரி செய்யுங்கள்” என்கிற பதாகையுடன் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.
வெர்மாண்டைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் வாஷிங்டனில் தலைமை உரையாற்றினார்.
“நாங்கள் அமெரிக்காவை வெறுப்பதால் இங்கு வரவில்லை, அமெரிக்காவை நேசிப்பதால் தான் இங்கு வந்துள்ளோம்,” என தனது உரையில் குறிப்பிட்டார்.
வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் டிரம்பின் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்’ வாசகம் பொறிக்கப்பட்டிருந்த தொப்பி அணிந்த ஒருவரை பிபிசி கண்டது. ஒரு வேலையாக நகரத்துக்கு வந்த அவர், போராட்டத்தைக் காணலாம் என முடிவு செய்திருக்கிறார். தனது பெயரைக் கூற மறுத்த அவர் தனக்கு ஒன்றும் புரியவில்லையென்றும் மக்கள் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். சிறிது நேரத்தில் கூட்டத்தில் ஒரு பெண் அவருக்கு எதிராக அவதூறான கோஷத்தை எழுப்பினார்.
இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவில் மட்டும் நடைபெறவில்லை.
ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேரணிகள் நடைபெற்றன. லண்டனிலும் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடினர்.
கனடாவின் டொராண்டோ நகரிலும் அமெரிக்க தூதரகம் அருகில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது “கனடாவிலிருந்து கையை எடுங்கள்” என்கிற பதாகையை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
பட மூலாதாரம், Wiktor Szymanowicz/Future Publishing via Getty Images
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள நேர்காணலில் டிரம்ப் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் பற்றி பேச இருக்கிறார்.
“மன்னரா! இவை அனைத்தும் நாடகமே. என்னை மன்னர் எனக் குறிப்பிடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா. நான் மன்னர் கிடையாது.” என நேர்காணலின் முன்னோட்டத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
கன்சாஸ் செனட்டர் ரோஜர் மார்ஷல் பேரணிக்கு முன்பாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “படையினரை வெளியேற்ற வேண்டும். அது அமைதியாக நடக்கும் என நம்புகிறேன். ஆனால் எனக்கு சந்தேகம் உள்ளது.” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பொறுப்பில் உள்ள குடியரசு கட்சியின் ஆளுநர்கள் போராட்டங்களுக்கு முன்பாக தேசிய படைகளை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
வியாழக்கிழமை டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரேக் அபாட், ஆஸ்டின் பகுதியில் ஆன்டிஃபா போன்ற போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதால் தேசிய படைகள் தேவைப்படும் எனக் கூறி அவர்களை அழைத்துள்ளார்
இந்த நகர்வை, மாகாணத்தின் மூத்த ஜனநாயக கட்சி தலைவர் ஜீன் வூ உள்ளிட்ட பலரும் நிராகரித்துள்ளனர். “அமைதியான போராட்டங்களை ஒடுக்க ஆயுதமேந்திர ராணுவ வீரர்களை அனுப்புவது என்பதை மன்னர்களும் சர்வாதிகாரிகளுமே செய்வார்கள் – கிரேக் அபாட் தானும் சர்வாதிகாரிகளில் ஒருவர் என்பதை நிருபித்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.
வெர்ஜீனியா மாகாணத்தின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆளுநரான கிளென் யங்கின்னும் தேசிய படைகளை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். ஆனால் போராட்டத்தின்போது படைகள் இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், Reuters
வாஷிங்டனில் டிரம்பின் கோரிக்கைக்கு இணங்க கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் போராட்டம் நடந்த இடத்தில் அவர்கள் இல்லை, சில உள்ளூர் காவல்துறையினர் மட்டும் இருந்தனர்.
வாஷிங்டனில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் “நான் தான் ஆன்டிஃபா” எனக் கூறும் பதாகையை வைத்திருந்தார்.
76 வயதான சுக் எப்ஸ் அது மிகவும் அர்த்தம் பொதிந்த பதம் என்றார். அதன் அர்த்தம், “அமைதி, சுகாதார காப்பீடு, வாழ்வதற்கான ஊதியம், வாழ்வாதாரம், புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற இனக் குழுக்களைச் சேர்ந்த மக்களை ஆதரிக்கிறேன்,” என்பது தான் எனத் தெரிவித்தார்.
“டிரம்ப் அனைவரையும் தூண்டிவிடுகிறார், அல்லது தூண்டிவிட முயற்சிக்கிறார், ஆனால் அது நடக்கவில்லை,” என அவர் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் விவகாரத்தில் அமெரிக்கர்களின் ஆதரவு பிளவுபட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ்/இப்சாஸ் சமீபத்தில் நடத்திய ஆய்வில் டிரம்பின் நடவடிக்கைகளை 40% பேர் மட்டுமே ஆதரவளிப்பதாகவும் 58% பேர் எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பிற்கு முதலாவது ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட ஆதரவு அதிகமாக இருந்தாலும் இரண்டாவது முறையாக பதவியேற்றபோது இருந்ததைவிட (47% ஆதரவு) தற்போது குறைவாகவே உள்ளது.
ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு அதிபர்களுக்கான ஆதரவு குறைவது இயல்பான ஒன்று தான். ராய்ட்டர்ஸ்/இப்சாஸின்படி 2021 ஜனவரியில் ஜோ பைடன் அதிபரானபோது 55% ஆதரவு இருந்தது. ஆனால் அதே ஆண்டு அக்டோபர் மாதம், இந்த ஆதரவு 46% ஆக சரிந்தது.
கூடுதல் செய்தி சேகரிப்பு அனா ஃபாகய்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு