பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த கோபத்தில் இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஸெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் சரியாக நடத்தினார் என்று ரூபியோ சிபிஎஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அதிபர் டிரம்ப் மட்டுமல்ல, பைடனும் ஸெலன்ஸ்கி மீது வருத்தமடைந்ததாகவும், மக்கள் அதை மறந்துவிடக் கூடாது என்றும் ரூபியோ கூறினார்.
அக்டோபர் 2022 இல், அமெரிக்க செய்தி நிறுவனமான என்பிசி செய்தி ஒன்றை வெளியிட்டது.
அதில் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசும் போது கோபமடைந்தார் என்று கூறப்பட்டது.
தொலைபேசி உரையாடலின் போது அதிபர் பைடன், ஸெலென்ஸ்கிக்கு 1 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்குவதாக கூறினார்.
ஆனால், யுக்ரேன் அதிபர் “இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை” என்று புகார் கூறத் தொடங்கியதால், பைடன் கோபமடைந்ததாகவும் அச்செய்தியில் கூறப்படுகிறது.
இதேபோல், ஜூலை 2023-ஆம் ஆண்டில், அப்போதைய பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், “யுக்ரேன் தனது சர்வதேச கூட்டாளிகள் அமேசான் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும், நீங்கள் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படுவதில்லை” என்று எச்சரித்தார். “யுக்ரேன் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
அப்போது பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் இருந்தார்.
டிரம்ப் மீண்டும் அதிபரான பிறகு, வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த ஆறாவது வெளிநாட்டு விருந்தினராக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி இருந்தார்.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இந்த சுற்றுப்பயணங்கள் அனைத்தையும் ஸெலன்ஸ்கி சரியாகப் புரிந்துகொண்டிருந்தால், உலக ஊடகங்களின் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் அவருக்கு என்ன நடந்ததோ அதை அவர் தவிர்த்திருக்கலாம்.
ஆக்ரோஷமான ஸெலன்ஸ்கி
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, யுக்ரேன் தொடர்பாக தனது நிலைப்பாடு பைடனின் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்ற செய்தியையும் வழங்கியிருந்தார்.
இஸ்ரேல் குறித்து அவர் கொடுத்த செய்தியும், அவர் எடுத்த நிலைப்பாடும் ஒன்றே.
ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இந்தியா தொடர்பாகவும் டிரம்ப் மிகத் தீவிரமாக இருந்தார். ஆனால் வெள்ளை மாளிகையில் ஸெலன்ஸ்கி எதிர்கொண்டது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட இந்த நாட்டுத் தலைவர்கள் அனுமதிக்கவில்லை.
டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் இந்தியாவுக்கு எதிராக மிகவும் தீவிரமாக இருந்தார். ஆனால் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வெள்ளை மாளிகைக்குச் செல்வதற்கு முன்பு பிரதமர் மோதி முழுத் தயாரிப்புகளை செய்திருந்தார்.
பொது பட்ஜெட்டில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைத்திருந்தது. எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதாகவும் இந்தியா அறிவித்திருந்தது.
மோதி வாஷிங்டனை அடைந்தவுடன் டிரம்பும் பரஸ்பர வரியை அறிவித்தார். ஆனால் டிரம்பின் எந்த அறிவிப்பையும் இந்தியா விமர்சிக்கவில்லை. டிரம்பின் ஆக்ரோஷத்திற்கு இந்தியாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இது டிரம்பை கையாள்வதற்கான ஒரு தயாரிப்பு மற்றும் உத்தியாகக் கருதப்பட்டது.
“ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் ஒரு கேலிப்பொருளாக மாறினார். ஏனெனில் அவர் தயாரிப்பின்றி அங்கு சென்றார். ரஷ்ய அதிபர் புதினுடன் நல்ல உறவைக் கொண்ட அதிபரை சந்திக்க ஸெலன்ஸ்கி எந்த தயாரிப்பும் இல்லாமல் சென்றார். ஸெலன்ஸ்கி , புதினுடன் அமைதி ஒப்பந்தத்திற்கு பதிலாக பாதுகாப்பு உத்தரவாதங்களை கேட்டார். ஆனால் பிரதமர் மோதி, டிரம்பின் எந்த கோரிக்கையையும் மறுப்பதில்லை” என்று வெளியுறவு நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான நிருபமா சுப்பிரமணியன் பதிவிட்டார்.
“சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் அந்தஸ்தை பலவீனமடையச் செய்ய முயற்சிப்பதாக பிரிக்ஸ் அமைப்புகளை டிரம்ப் தாக்கிய போது, டாலருக்கு மாற்று நாணயத்தை ஆதரிக்கவில்லை என்று இந்தியா கூறியது.
வரிகள் தொடர்பாக டிரம்ப் இந்தியாவை வெளிப்படையாக விமர்சித்து வந்தார். ஆனால் மோதி அவருடன் வாக்குவாதம் செய்யவில்லை. மூடிய கதவுகளுக்குப் பின்னால் இவற்றைக் கூறுவது சிறந்தது என்று இந்தியா நினைத்தது.
இந்தியாவுக்கான சேதி என்ன?
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளார். இது இந்தியாவிற்கும் ஒரு தெளிவான செய்தியாகும்.
கடந்த வாரம், புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, சீனா தைவானை வலுக்கட்டாயமாக இணைக்க முயன்றால் அமெரிக்கா அதை ஆதரிக்குமா என்று கேட்கப்பட்டது.
இதுகுறித்து டிரம்ப், “இந்த சர்ச்சையில் நான் என்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பாததால், இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.
பைடன் போல தைவான் மீது தனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அமெரிக்கா யாருக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தை இலவசமாக வழங்கப் போவதில்லை என்று கூறி வருகிறார்.
தைவானின் சிப் தொழில்நுட்பம் அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனங்களை பாதிக்கிறது என்று அவர் குற்றம் சுமத்தினார்.
ஸெலன்ஸ்கியுடன் டிரம்ப் இவ்வாறு நடந்து கொண்ட பிறகு, சீனா தைவானைத் தாக்கினால் அமெரிக்கா உதவுமா இல்லையா என்ற கவலை தீவிரமாகியுள்ளது.
அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரப் பேராசிரியர் முனைவர் கான் கூறுகையில், “ஸெலன்ஸ்கி தனது தவறுக்கு விலை கொடுப்பார். ஒரு வல்லரசுக்கு எதிராக இன்னொரு வல்லரசை சார்ந்து போரிட முடியாது. யுக்ரேனுக்கு ரஷ்யா ஒரு வல்லரசாகவே உள்ளது. அமெரிக்காவோ அல்லது ஐரோப்பாவோ போரில் உங்களுக்கு உதவுகின்றன என்றால், அவர்களுக்கும் சொந்த நலன்கள் உள்ளன. அவர்களின் நலன்களை நிறைவேற்ற நீங்கள் போராடினால், நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பேராசிரியர் கான், “அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற டிரம்பின் கொள்கை இந்தியாவிற்கு ஒரு பாடம். அமெரிக்காவின் கட்டளைப்படி நீங்கள் சீனாவுடன் போருக்குச் செல்ல முடியாது. அமெரிக்க வெள்ளையர்களின் மரபணு ஐரோப்பாவிலிருந்து வந்தது. டிரம்ப் ஐரோப்பாவையே விட்டு விட்டால், இந்தியாவின் ஆதரவாளராக எப்படி இருப்பார்? டிரம்பால் கனடாவையே மண்டியிட வைக்க முடியும் போது, அவருக்கு ஏன் இந்தியா மீது அனுதாபம் இருக்க வேண்டும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் சேதி என்னவென்றால், ஒருவரின் ஆதரவை நம்பி, போரின் ஒரு பகுதியாக நீங்கள் மாறக்கூடாது என்பது தான்” என்றார்.
மோதியின் அமெரிக்க வருகைக்கு முன்பு, டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங்கைப் பாராட்டியிருந்தார்.
மோதியுடனான செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப், சீனா உலகில் ஒரு முக்கியமான நாடு என்று கூறியிருந்தார்.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் முன்வந்தார். ஆனால் இந்தியா எந்த மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தத்தையும் தெளிவாக மறுத்துவிட்டது.
குறைவான நண்பர்கள்
பட மூலாதாரம், Getty Images
“டிரம்ப் வழங்கிய ஒரே சலுகையாக இது இருக்கலாம், இந்தியா பகிரங்கமாக அதனை ஏற்க மறுத்துவிட்டது” என்று நிருபமா சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
“அமெரிக்கா யுக்ரேனுக்கு பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தால் அதற்கு இழக்க எதுவும் இல்லை, ஆதாயங்கள் மட்டுமே உள்ளன. பாதிக்கப்பட்டவர் தன்னைத் தாக்கியவரிடம் சரணடைய வேண்டும் என்று டிரம்ப் கூறுகிறார். இது நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. நாம் அனைவரும் இப்போது ஸெலன்ஸ்கி தான்.”
“பழைய நட்புகளும் கூட்டணிகளும் எதிர்காலத்தில் பலனளிக்காமல் போகலாம் என்ற யதார்த்தத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். புதினும் டிரம்பும் இப்போது ஒரே முகாமில் இருப்பதால் இந்தியாவும் ரஷ்யாவை நம்பியிருக்க முடியாது. சீனா பாகிஸ்தானுடன் நெருங்கி வருகிறது. பூகோளத்தின் தென் பாதியில் முக்கிய சக்திகளான பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவும் இந்தியாவை விட சீனாவுடன் நெருக்கமாக உள்ளன.” என்றார் நிருபமா சுப்பிரமணியன்.
பேராசிரியர் கான் கூறுகையில், “டிரம்ப் தனது பதவியேற்பு விழாவிற்கு ஜின்பிங்கை அழைத்திருந்தார். ஆனால் இந்திய பிரதமர் மோதியை அழைக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவின் ஆதரவில் நீங்கள் எந்தப் போரையும் நடத்த முடியாது, அதுவும் எந்த வல்லரசுக்கும் எதிராகப் போரிட முடியாது என்ற தெளிவான செய்தி இந்தியாவிற்கு உள்ளது.
இன்று ஐரோப்பியத் தலைவர்கள் யுக்ரேனுடன் நிற்பதைக் வெளிக்காட்டுகிறார்கள், ஆனால் ஐரோப்பாவிலிருந்து எவ்வளவு உதவி வருகிறது? ஐரோப்பா பணம் கொடுத்தாலும், அது ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து தான் கொடுக்கிறது.
2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லையை, யுக்ரேன் மீண்டும் அடைய முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் தெளிவாகக் கூறிவிட்டது.
யுக்ரேன் நேட்டோவில் உறுப்பினராக முடியாது என்பதுடன், அமெரிக்கா யுக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்காது என்றும் டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஈடாக யுக்ரேன் என்ன பெற்றது என்ற கேள்வி எழுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.