• Mon. Jan 12th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவுக்கு இரான் எச்சரிக்கை ஏன்? இரானில் வலுவடையும் போராட்டத்தில் என்ன நடக்கிறது? முழு விவரம்

Byadmin

Jan 12, 2026


இரானில் போராட்டம், ஆட்சி மாற்றம் நடக்குமா?, ரெசா பஹ்லவி, அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், MAHSA / Middle East Images / AFP via Getty Images

அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுப்போம் என்று இரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், தீவிரமடைந்து வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பிபிசி வட்டாரங்களும் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

“இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது,” என்று டெஹ்ரானில் இருந்து ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார். “எங்கள் நண்பர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கி குண்டுகளால் சுட்டனர். இது ஒரு போர்க்களம் போல இருக்கிறது, தெருக்கள் முழுவதும் இரத்தம் நிரம்பியுள்ளது. அவர்கள் சடலங்களை லாரிகளில் ஏற்றிச் செல்கிறார்கள்.” என்றார் அவர்.

டெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஒரு சவக்கிடங்கு வீடியோவில் சுமார் 180 சடலப் பைகளை பிபிசி எண்ணியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் செய்தி நிறுவனம், இரான் முழுவதும் 495 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினரின் மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் போராட்டங்கள் எதிரொலியாக மேலும் 10,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்காக இரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இரான் “சுதந்திரத்தை நோக்கிப் பார்க்கிறது” என்பதால், அமெரிக்கா “உதவத் தயாராக உள்ளது” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறினார்.

By admin