0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முன்னெடுத்து வரும் வர்த்தகப் போர் நடவடிக்கைகள் மற்றும் பிற நாடுகளை கைப்பற்றும் வகையிலான அச்சுறுத்தல்களால், அமெரிக்கா–கனடா உறவுகளில் சமீப காலமாக சில விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில், கனடா பிரதமர் மார்க் கார்னி, சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மார்க் கார்னி, நாளை 16ஆம் திகதி சீனா நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பு, தற்போதைய உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து மார்க் கார்னி வெளியிட்ட அறிக்கையில், உலகளாவிய வர்த்தகத்தில் குழப்பம் நிலவும் நிலையில், கனடா ஒரு போட்டித்தன்மை கொண்ட, நிலையான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். ஒரே ஒரு வர்த்தகப் பங்காளியை மட்டும் சார்ந்திருக்கும் பொருளாதார அமைப்பை மாற்றும் நோக்கில், உலகின் பல நாடுகளுடன் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசியா–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை, மார்க் கார்னி சந்தித்திருந்தார். அச்சந்திப்பின் போது சீனாவுக்கு வருமாறு ஜி ஜின்பிங் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவுடன் உறவுகளில் மாற்றங்கள் உருவாகியுள்ள இந்த நேரத்தில், கனடா பிரதமரின் சீனா பயணம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமானதாக கருதப்படுகிறது.