அமெரிக்காவில் இருந்து ஆவணமற்ற 104 இந்திய குடியேறிகள், கைவிலங்கிடப்பட்டு, ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தச் செய்தி குறித்து அமெரிக்க ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை அன்று நடந்த இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தில், இந்தச் செயலை அவமானகரமானது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக் கொள்ளும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மறுபுறம், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, அன்பான நண்பர் என்று மோதி அழைக்கிறார்,” என நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.
அதேநேரத்தில், “அமெரிக்காவில் இருந்து குடியேறிகளைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பதன் மூலம், கொலம்பியா மற்றும் பிரேசிலை போல சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று இந்தியா நம்பியது.
ஆனால் திரும்பி வந்த இந்திய குடியேறிகள், 40 மணிநேரம் கைவிலங்கு போடப்பட்டிருந்ததாகவும், கழிப்பறைக்குச் செல்லக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் கூறினர்” என்று நியூயார்க் டைம்ஸில் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ், குழந்தைகள் மற்றும் பெண்களும் கைவிலங்குடன் கொண்டு வரப்பட்டனரா என்று புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டுள்ளது. ஆனால், அமெரிக்க தூதரகம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
பஞ்சாபை சேர்ந்த 35 வயது சமையல்காரர் சுக்பால் சிங், ஜனவரி மாதம் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு சுக்பாலின் தந்தை பிரேம்பால் சிங் அளித்துள்ள பேட்டியில், “என் மகன் உள்பட அனைவரும் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைவரின் காலிலும் கட்டுகள் இருந்தன” எனத் தெரிவித்துள்ளார்.
ரூ.53 லட்சம் செலவழித்து அமெரிக்க சென்ற இளைஞர்
இந்தியா ஏன் தனது சொந்த விமானத்தை அனுப்பவில்லை என்று கடந்த வியாழக்கிழமையன்று நடந்த மாநிலங்களவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அரசிடம் கேள்வியெழுப்பினார்.
அமெரிக்க செய்தி சேனலான சிஎன்என் தனது செய்தியில், “அமெரிக்க ராணுவ விமானம் C-17 புதன்கிழமையன்று பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது. அவர்களில் பெரும்பாலோர் குஜராத், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.
மன்ரியாசத் சிங்கின் 23 வயது உறவினர் ஆகாஷ்தீப் சிங் ஏழு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார். மேலும், இதற்காக சுமார் 53 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். இந்த 53 லட்ச ரூபாயை ஏற்பாடு செய்வதற்காக, அவரது தந்தை தனது நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை விற்றுள்ளார்.
ஆனால், ஆகாஷ்தீப் பத்திரமாக வீடு திரும்பியதில் குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
திரும்பி வந்தவர்கள் கூறியது என்ன?
பட மூலாதாரம், @USBPChief
“நான்கு ஆண்டுகளில், ஏராளமான இந்திய குடிமக்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக வந்துள்ளனர். அரசாங்க தரவுகளின்படி, 2018-19ஆம் ஆண்டில் 8,027 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்தனர், மேலும் 2022-23ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 96,917 ஆக உயர்ந்தது.
விவசாயியான குல்ஜிந்தர் கௌரின் கணவர் ஹர்விந்தர் சிங், ஒரு முகவருக்கு ரூ.40 லட்சம் கொடுத்து அமெரிக்கா சென்றுள்ளார்” என்று சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. அவர்கள், “இன்னும் 15 நாட்களில் அமெரிக்கா சென்றடைவார்கள் என்று ஏஜென்ட் கூறியிருந்தார்.
பஞ்சாபில் இருந்து வெளியேறி, லாரிகள், படகுகள், வேன்கள் எனப் பல்வேறு வாகனங்களில் 10 மாதங்கள் பல்வேறு நாடுகளில் பயணம் செய்து, கடைசியாக ஜனவரி 15ஆம் தேதி மெக்சிகோ வழியாக அமெரிக்கா வந்தடைந்தார் ஹர்விந்தர்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அவரது மனைவி குல்ஜிந்தர் கௌர் கூறுகையில், “ஹர்விந்தர் மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வந்தவுடன் தண்ணீர் வாங்கச் சென்றார். ராணுவத்தினர் அவரைப் பிடித்த பிறகு, அவர் இந்தியாவுக்கு திரும்பி வர வேண்டியிருந்தது” என்றார்.
மேலும், வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், “சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தும் போக்கு டிரம்ப் ஆட்சியில் தொடங்கப்பட்டதாக” தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, பியூ ரிசர்ச்சின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத குடியேறிகள் மெக்சிகோ மற்றும் எல் சால்வடோரை சேர்ந்தவர்கள் எனவும் இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
அதோடு, “அமெரிக்காவில் 7,25,000 சட்டவிரோத இந்திய குடியேறிகள் உள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில், ஆவணமற்ற இந்திய தொழிலாளர்கள் கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள், கனடா எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைய முயன்ற 14,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்க எல்லைக் காவல் படையினர் கைது செய்தனர்.
மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்கள்” என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுபுறம், “இந்தியா ஏற்கெனவே டிரம்ப் குறித்து எச்சரிக்கையாக இருந்தது. அதேபோல், அமெரிக்காவுடன் எரிசக்தி கூட்டணியை அதிகரிக்க இந்தியா தயாராக உள்ளது. கூடவே, டிரம்பும் அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறார்.
அதையடுத்து, டிரம்ப் பதவியேற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் இருந்து அதிக எண்ணெய் வாங்க இந்தியா தயாராக இருப்பதாக இந்தியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறியிருந்தார்,” என்றும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் பைடன் நிர்வாகம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்துக் கவலைப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையில், “வரிகளைக் குறைப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது, ஆனால் குறைவாக இறக்குமதி செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்று டிரம்ப் விரும்புகிறார்” என்றும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே எச்சரிக்கையாக இருந்த இந்தியா
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பாதுகாப்புவாதக் கொள்கைகள்’ எனக் கூறப்படுவன குறித்து டிரம்ப் ஏற்கனவே விமர்சித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க்கின் கருத்துப் பகுதியில் கட்டுரையாளர் ஆண்டி முகர்ஜி எழுதியுள்ளார்.
மேலும், “ஆவணமற்ற இந்திய குடியேறிகளை திரும்ப அழைத்து வருவதற்கு உதவத் தயாராக இருப்பதாக இந்தியா ஏற்கெனவே அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டது” என்றும் ஆண்டி முகர்ஜி எழுதியிருந்தார்.
“இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கம் உள்நாட்டில் சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது தெளிவாகிறது.
‘மோதி அரசு குறிப்பிடத்தக்க அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதா? உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை விட்டு வெளியேற, பல இந்தியர்கள் ஏன் ஆர்வமாக உள்ளனர்? அவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லையா?
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு விமானமும் இந்தக் கேள்விகளை எழுப்பும்,” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆண்டி முகர்ஜி.
அதைத் தொடர்ந்து, “மோதி அரசு ஏற்கெனவே அமெரிக்காவை மகிழ்விக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை, இந்தியாவின் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூடுதலாகப் பல பொருட்களின் மீதான இறக்குமதி வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது” என்றும் ஆண்டி முகர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றொரு கட்டுரையில், “அமெரிக்கப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படும் என்று மோதி அரசு குறிப்பிடும் வரிக்குறைப்பு நடவடிக்கைகளால், அமெரிக்காவுடன் உள்ள 45.7 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறை இடைவெளியில் அதிக வேறுபாடுகள் ஏற்படாது” என்று ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “டிரம்ப் அதனுடன் மட்டும் நிற்க மாட்டார். எல்என்ஜி மற்றும் பாதுகாப்பு தொடர்பான வலுவான ஒப்பந்தங்களை மேற்கொள்ள அவர் விரும்புகிறார். ஆனால் இறுதியில், சீனாவும் அமெரிக்காவும் ஒரு கட்டத்தில் ஒன்றிணைந்து, இந்தியாவின் முக்கியத்துவம் பின்தங்கிவிடும் என்பதுதான், டிரம்ப் நிர்வாகத்தின் மீது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை” என்றும் ப்ளூம்பெர்க் செய்தி கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, ஜனவரி 27ஆம் தேதியன்று, பிரதமர் மோதியுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார். அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா அதிகம் வாங்க வேண்டும் என்று மோதியிடம் டிரம்ப் கூறினார். மேலும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். அதாவது அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்று டிரம்ப் விரும்புகிறார்.
இந்த உரையாடல் குறித்து, “டிரம்ப் மோதியை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார், ஆனால் கூட்டணி உத்தி தொடர்பாக சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார். டிரம்ப் அமெரிக்காவின் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை வலியுறுத்தி, இருதரப்பு வர்த்தகத்தைச் சமநிலைப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்” என்று திங்க் டேங்க் ராண்ட் கார்ப்பரேஷனின் இந்தோ-பசிபிக் ஆய்வாளர் டெரெக் கிராஸ்மேன் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் அடிக்கடி இந்தியாவை ‘வரி மன்னர்’ என்று அழைப்பார். மேலும், இந்தியாவின் வர்த்தக உபரி பிரச்னை குறித்தும் தொடர்ச்சியாகக் கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப்.
அதாவது, இந்தியா அமெரிக்காவுக்கு அதிக விலைக்கு பொருட்களை விற்கிறது, ஆனால் அங்கிருந்து குறைவாக வாங்குகிறது. அதுதான் வர்த்தக உபரி பிரச்னை.
கூடுதலாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது என்றும் டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்.
முன்னதாகத் தனது முதல் பதவிக் காலத்தில், இந்தியாவின் ஜிஎஸ்பி (Generalized System of Preferences) அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் டிரம்ப். இதன் கீழ், இந்தியா தனது குறிப்பிட்ட தயாரிப்புகளில் சிலவற்றை அமெரிக்காவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு