அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாகக் கூறப்படும் இந்தியாவை சேர்ந்தவர்களை ராணுவ விமானத்தில் கைவிலங்கிட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது வரை நடந்தது என்ன?
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்ட விரோதமாக, ஆவணங்களின்றி குடியேறியவர்களை திருப்பி அனுப்புவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.
சட்ட விரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்புவது, டிரம்பின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. அதிபரான முதல் நாளில் டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவுகளில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட உத்தரவுகள் முக்கியமானவை.
அதிபராக பதவியேற்றதும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எனக் கூறி, கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சிலரை ராணுவ விமானத்தில் டிரம்ப் அரசு திருப்பி அனுப்பியது. கைகள் கட்டப்பட்டு ராணுவ விமானத்தில் வந்தவர்களை கொலம்பியா அரசு ஏற்க மறுத்தது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்ணியத்துடன் அனுப்ப வேண்டும், ராணுவ விமானத்தில் அனுப்பக் கூடாது எனக் கூறிய கொலம்பியா அதிபர், அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அனுமதி மறுத்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து, டிரம்ப் கொலம்பியா மீது அதிரடியாக 25% வரிகளை விதித்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானது. பின்னர், கொலம்பியா – அமெரிக்கா இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த நிலையில், சட்ட விரோதமாகக் குடியேறியதாகக் கூறப்படும் 104 இந்தியர்களுடன் கூடிய ஒரு அமெரிக்க ராணுவ விமானம் பிப்ரவரி 5ஆம் தேதி இந்தியா வந்தது. அந்த விமானத்தில் இருந்தவர்கள் கைவிலங்கிடப்பட்டிருந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது.
அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (பிப். 06) கூடிய நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்ப, மத்திய அரசு விளக்கமளித்தது. இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன என்பதை இதில் விரிவாக பார்க்கலாம்.
நடந்தது என்ன?
செவ்வாய்க்கிழமை இரவு (டிசம்பர் 4) டெக்சாஸ் மாகாணத்திலிருந்து சி17 போர் விமானம் புறப்பட்டது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்தத் தகவலின்படி, இந்த விமானத்தில் 104 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ்ஜி சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமானம் புதன்கிழமை தரையிறங்கியது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின், அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக இந்திய குடிமக்கள் நாடு கடத்தப்படுவது இதுவே முதன்முறை. விமானத்தில் இருந்தவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது, இந்தியாவில் சர்ச்சையை கிளப்பியது.
நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்களைக் கைவிலங்கிட்டு அழைத்து வந்த விதம் மனிதத்தன்மையற்றது, இதை பாஜக அரசு தவிர்க்க நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று கூறி நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
காங்கிரஸ், சமாஜ்வாதி, இந்தியக் கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் அமளி தொடர்ந்ததால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
இந்திய அரசு சொல்வது என்ன?
மாநிலங்களவையில் விளக்கமளித்த அமைச்சர் ஜெய்சங்கர், நாடு கடத்தல் நடவடிக்கை புதிதல்ல என்றார்.
சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை எனக் கூறி, ஆண்டுவாரியாக ஜெய்சங்கர் ஒரு பட்டியலை வழங்கினார்.
கைவிலங்கிடப்பட்டு அழைத்து வந்தது குறித்து விளக்கம்
மேலும், கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்படுவது குறித்தும் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் நாடு கடத்தலை அந்நாட்டின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை செய்வதாக குறிப்பிட்ட ஜெய்சங்கர், அதற்கான நிலையான நடைமுறை 2012 முதல் அமலில் இருப்பதாக குறிப்பிட்டார்.
அந்த நடைமுறை நாடு கடத்தப்படுபவர்களைக் கட்டுப்பாடுகளுடன் அழைத்துவர அனுமதி அளிப்பதாக ஜெய்சங்கர் கூறினார்.
குழந்தைகள், பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை, கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்படுவோருக்கு உணவு, மருத்துவத் தேவை, கழிவறை பயன்படுத்துதல் உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது தற்காலிகமாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அமெரிக்கா தெரிவித்ததாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
பிப்ரவரி 5ஆம் தேதி அமெரிக்கா அனுப்பிய விமானத்தில் கடந்த கால செயல்முறை தவிர்த்து எந்த மாற்றங்களும் இல்லை எனக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், எனினும் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றும் கூறினார்.
எவ்வளவு இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளனர்?
அமெரிக்க அரசின் புள்ளிவிவரங்களின்படி, ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளனர். அதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியர்கள்.
எனினும், இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
பியூ ஆய்வு மையத்தின் புதிய தரவுகள் 2022-ல் 7,25,000 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் இருப்பதாக கணக்கிடுகிறது. இந்த தரவுகள் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள மொத்த சட்டவிரோத குடியேறிகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆனால், இதற்கு மாறாக மைகிரேஷன் பாலிஸி இன்ஸ்டிட்யூட் இந்த எண்ணிக்கையை 3,75,000 என கணக்கிடுறது. இந்தத் தரவுகளின்படி, அமெரிக்காவில் உள்ள மொத்த சட்டவிரோத குடியேறிகள் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சட்ட விரோத குடியேறிகள் – முன்னரே தெரிவிக்கப்பட்டதா?
பிரதமர் மோதியுடன் கடந்த வாரம் தொலைபேசியில் பேசிய டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவுத் துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ, அமெரிக்காவில் வாழ்ந்துவரும் சட்டவிரோத இந்திய குடியேறிகள் குறித்து கவலை தெரிவித்தனர்.
இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் ஆவணங்களின்றி வசிக்கும் இந்தியர்கள் குறித்து இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என தாங்கள் நம்புவதாக தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளரும் இவ்விவகாரம் குறித்து, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் எழுப்பினார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், “சட்டவிரோதமாக புலம்பெயர்வதை இந்தியா எப்போதும் ஆதரிக்காது. இத்தகைய குடியேற்றம் பலவித சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் புகழுக்கு நல்லதல்ல. அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை இந்தியாவுக்கு சட்டபூர்வமாக அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.
வேறு எந்தெந்த நாடுகளுக்கு எதிராக டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்?
ராய்ட்டர்ஸ் முகமையின் செய்திப்படி, கொலம்பியா தவிர்த்து, குவாட்டமாலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய இடங்களுக்கும் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் சட்டவிரோத குடியேறிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.