பட மூலாதாரம், EPA
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பான உலகளாவிய ஊகங்களுக்கிடையே, இஸ்ரேல் தலைவர்கள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்து வருகின்றனர்.
இம்மாதம் இரானின் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக கூறிய சில கருத்துகளைத் தவிர, தனது மிகப்பெரிய எதிரிக்கு எதிராக, தனது வல்லரசு நட்பு நாடு நடவடிக்கை எடுப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பகிரங்கமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவரது அரசாங்கமும் சமமாக மௌனமாக உள்ளது.
“இந்த தருணத்திற்கு நெதன்யாகு அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது,” என்று இஸ்ரேலின் பாதுகாப்பு உளவுத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவரும் தற்போது இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தில் மூத்த இரான் ஆராய்ச்சியாளராகவும் உள்ள டேனி சிட்ரினோவிச் கூறினார்.
“அமெரிக்கா வளைகுடாப் பகுதியில் இவ்வளவு படைகளைக் கொண்டிருப்பதும், இரானைத் தாக்குவதற்கு டிரம்ப் இவ்வளவு நெருக்கமாக இருப்பதும், நெதன்யாகுவைப் பொறுத்தவரை, அவர் இழக்க முடியாத ஒரு பொன்னான தருணம்.” என்கிறார் சிட்ரினோவிச்.
இஸ்ரேலின் சிக்னல் உளவுப் பிரிவின் முன்னாள் துணை இயக்குநரான ஆசாஃப் கோஹன், இஸ்ரேலின் மௌனத்திலும் ஒரு உத்தி இருப்பதாகக் கூறுகிறார்.
“இந்த முறை அமெரிக்கர்கள் வழிநடத்த நாம் அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலியத் தலைமை நம்புகிறது. ஏனென்றால், அவர்கள் அதிக வலிமை வாய்ந்தவர்கள், அதிக திறன்களைக் கொண்டவர்கள், மேலும் உலக அரங்கில் அவர்களுக்கு அதிக சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது,” என்கிறார் அவர்.
பெஞ்சமின் நெதன்யாகு நீண்ட காலமாக இரானை இஸ்ரேல் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தலாகவும், மத்திய கிழக்கில் ஸ்திரமின்மைக்கான மிகப்பெரிய ஆதாரமாகவும் கருதி வருகிறார். அவரது பொதுவான மௌனம், தனது முக்கிய கூட்டாளியான அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை என்பதைக் குறிக்கவில்லை.
இந்த வாரம், இஸ்ரேலின் இராணுவ உளவுத்துறைத் தலைவர் ஷ்லோமி பைண்டர், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளைச் சந்தித்தார். இந்த சந்திப்பு இரானில் உள்ள சாத்தியமான இலக்குகள் குறித்து கவனம் செலுத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
பட மூலாதாரம், Getty Images
இரானில் ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்ட அதிகபட்ச தாக்குதல்களை நோக்கி நெதன்யாகு தனிப்பட்ட முறையில் அமெரிக்காவைத் தள்ளுகிறார் என்று சிட்ரினோவிச் நம்புகிறார், மேலும் இந்த மாத தொடக்கத்தில் டிரம்பைத் தடுத்து நிறுத்துமாறு நெதன்யாகு வலியுறுத்தியதாகக் கூறப்பட்டபோது, திட்டமிடப்பட்ட அமெரிக்க தாக்குதலை “மிகச் சிறியது” என்று அவர் கருதியதால் தான் என்றும் அவர் கூறுகிறார்.
கடந்த ஆண்டு ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு இரானியர்கள் தங்கள் ஆட்சிக்கு எதிராக “எதிர்த்து நிற்க” வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது இரானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறார் – அவற்றில் வரையறுக்கப்பட்ட குறியீட்டுத் தாக்குதல்கள் மற்றும் முழுமையான ஆட்சி மாற்றம் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது. பொதுவில், புதிய பேச்சுவார்த்தைகளை பரிந்துரைப்பதன் மூலம் மூலம் இராணுவ அச்சுறுத்தல்களை அவர் மாற்றியுள்ளார்.
பல அமெரிக்க நட்பு நாடுகள் இரானின் தலைமையை அகற்ற முயற்சிப்பது பிராந்தியத்திற்கு பெரும் அபாயங்களைக் கொண்டிருப்பதாக எச்சரித்து வரும் நிலையில், இஸ்ரேலில் பலர் தங்கள் பாதுகாப்புக்கான சாத்தியமான நன்மைகளைக் காண்கிறார்கள்.
டெஹ்ரானில் ஆட்சியை மாற்றுவதன் மூலம், இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஏற்படும் அச்சுறுத்தலையும், அது ஒரு நாள் அணு ஆயுதங்களைப் பெறும் சாத்தியக்கூறையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என இஸ்ரேல் நம்புகிறது.
இது, ஹிஸ்புல்லா உட்பட, பிராந்தியத்தைச் சுற்றியுள்ள இரானின் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்களையும் மேலும் பலவீனப்படுத்தும். இஸ்ரேலின் அல்மா ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, ஹிஸ்புல்லாவிடம் லெபனான் எல்லையில் இன்னும் 25,000 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளன.
இதற்கு மாறாக, சில இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய ஆட்சியை நீடிக்க அனுமதிக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட தாக்குதல் அல்லது இரானுடன் ஒரு புதிய ஒப்பந்தம் கூட, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு பெரிய அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நம்புகிறார்கள்.
“முழுமையான தீமையை நீங்கள் கையாளும்போது, நீங்கள் வரையறுக்கப்பட்ட முறையில் செயல்படக்கூடாது,” என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ள யேஷ் அட்டிட் கட்சியைச் சேர்ந்த மோஷே டூர்-பாஸ் கூறினார்.
“இஸ்ரேல் மிகவும் வலிமையாக செயல்பட வேண்டும், மேற்கத்திய உலகமும் அவ்வாறு செயல்பட வேண்டும் என்பது ஒருமித்த கருத்து. இரான் போன்ற நமது மோசமான எதிரிகள் என்று வரும்போது, பெரிய வேறுபாடுகள் இல்லை. அச்சுறுத்தலை நாம் அனைவரும் புரிந்துகொள்கிறோம்.”
இரானின் பதிலடியால் ஏற்படும் விலைக்கு, ஆட்சியைக் கவிழ்க்காமல் விட்டுவிடும் மற்றொரு மோதல் சுற்று தகுதியானதாக இருக்காது என்று பலர் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு 12 நாட்கள் நீடித்த போரில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, இரான் நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவி பதிலடி கொடுத்தது. அவற்றில் சில, இஸ்ரேலின் புகழ்பெற்ற வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி, டெல் அவிவ்வில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீது மோதி, குறைந்தது 28 பேரைக் கொன்றன.
பட மூலாதாரம், Reuters
இஸ்ரேலிய ராணுவம் இன்னும் பல உயிரிழப்புகளைச் சந்திக்கத் தயாராக இருந்தது, ஆனால் டெஹ்ரானின் (இரான்) தற்போதைய அதிகரித்த பாதிப்பு உணர்வு , இன்னும் தீவிரமான எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும்.
அந்த மோதலிலிருந்து இரான் கற்றுக்கொண்டதாகவும், போர் முன்னேற முன்னேறத் தனது தந்திரங்களை மாற்றிக்கொண்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரை ஆண்டிற்குப் பிறகு, இரான் தனது ஏவுகணை இருப்பை மீண்டும் கட்டியெழுப்பி வருகிறது.
அமெரிக்கத் தாக்குதல் ஏதேனும் நடந்தால், டெல் அவிவ் “உடனடி மற்றும் முன்னெப்போதும் இல்லாத” பதிலடியைச் சந்திக்கும் என்று இந்த வாரம், இரானின் அதி உயர் தலைவரின் மூத்த ஆலோசகர் ஒருவர் சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்தார்.
“ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டால், மீண்டும் ஒரு தாக்குதலின் வலியை இஸ்ரேல் அனுபவிக்க நேரிடும் என்று நெதன்யாகு பயப்படுகிறார்,” என சிட்ரினோவிக் கூறினார். “ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமானால், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார், ஆனால் ஆட்சி மாற்றம் அமெரிக்காவால் மட்டுமே சாத்தியம்.”
இரானிய ஆட்சியின் இந்தத் தீவிரமான பாதிப்பு நிலையை – 12 நாள் போருக்குப் பிறகு அதன் இராணுவப் பாதுகாப்பு குறைந்துள்ள சூழல், அதன் பிராந்திய நிழற்படைப் படைகள் பலவீனமடைந்துள்ள நிலை மற்றும் உள்நாட்டில் அதன் ஆட்சிக்கு எதிராகப் பரவலான போராட்டங்கள் நடந்து வரும் நிலை – ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும் என்கிறார் கோஹன்.
“இரான் இப்போது அதன் பலவீனமான நிலையில் உள்ளது – இது மீண்டும் வராத ஒரு வாய்ப்பு,” என்று கோஹன் கூறினார். “இதுதான் சரியான நேரம் – இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்று நம்பும் மக்கள் பலர் உள்ளனர்.”
டெல் அவிவில், கடந்த ஜூன் மாதம் இரானிய ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே இன்னும் வசித்து வரும் குடியிருப்பாளர்கள், மற்றொரு மோதலைப் பற்றி ஊகித்து வருகின்றனர்.
“எங்கள் தலைவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார் நேரியா என்ற இளைஞர்.
“தாக்குதல் மூலமாகவோ அல்லது பிற வழிகள் மூலமாகவோ, எனக்குத் தெரியாது, ஆனால் ஆட்சியை மாற்றுவதற்கு நாம் நிச்சயமாக இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குண்டுகளைச் சந்திப்பது இது முதல் முறையல்ல – அது இனிமையானது அல்ல, ஆனால் நீண்ட கால அடிப்படையில் நாம் இங்கே பாதுகாப்பாக உணர இது உதவுமென்றால், நாம் அதைச் சந்தித்துதான் ஆக வேண்டும்.”
பட மூலாதாரம், Dave Bull/BBC
அருகிலிருந்த ஷானி என்ற இளம் பெண், தான் கலவையான உணர்வுகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
“இரானிய மக்கள் – அவர்களில் பலர் – அமெரிக்கா உதவ வேண்டும் என்று விரும்புவதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். “அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். செயல்களுக்கு விளைவுகள் உண்டு.”
இஸ்ரேலியக் கருத்துக்கணிப்புகள், யூத குடியிருப்பாளர்களில் பெரும்பாலாலோர் இரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாகத் தொடர்ந்து காட்டுகின்றன – கடந்த ஆண்டு நடந்த 12 நாள் போருக்குப் பிறகும் இதே நிலைதான்.
ஆனால் ஆட்சி மாற்றத்திற்கான அபாயங்கள் அப்படியே உள்ளன. இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரைச் சுற்றியுள்ள இராணுவ மற்றும் மத குருமார்களின் கூட்டணியில் வெளிப்படையான விரிசல்கள் ஏதுமில்லாத நிலையில், மற்றும் நாட்டில் பிளவுபட்ட எதிர்க்கட்சி இயக்கம் உள்ள நிலையில், அரசு வீழ்ந்தால் இரானின் கட்டுப்பாட்டை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதே ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு இளைய வாரிசு, இஸ்ரேலுக்கான பதிலடியில் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் ஒரு உள்நாட்டுப் போரின் குழப்பம் இரானியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஆழமான உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும்.
மேலும், வான்வழித் தாக்குதல்களால் மட்டுமே பொதுவாக ஆட்சிகள் கவிழ்க்கப்படுவதில்லை என்று பல பாதுகாப்புத் துறை உள்விவகார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவுள்ள இஸ்ரேல் பிரதமர், ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் “மிஸ்டர் செக்யூரிட்டி” (பாதுகாப்பு நாயகன்) என்ற தனது உடைந்த பிம்பத்தை மீட்டெடுக்கக் கடுமையாக உழைத்து வருகிறார். இரானில் ஆட்சி மாற்றம் – அல்லது காமனெயியின் படுகொலை – ஒரு அரசியல் பரிசாக இருக்கும், ஆனால் அது ஒரு அபாயமும் கூட.
“இது ஒரு சூதாட்டம், ஆனால் கணக்கிடப்பட்ட ஒன்று,” என்கிறார் சிட்ரினோவிக்.
“காமனெயி தூக்கியெறியப்பட்டதற்கு அடுத்த நாள் என்ன நடக்கும் என்பதைப் பற்றி நெதன்யாகு கவலைப்படுவதில்லை. தான் டிரம்புடன் இணைந்து இரானிய ஆட்சியை அழித்ததைக் காட்ட அவர் விரும்புகிறார். அமெரிக்கர்கள் இறுதிவரை வருவார்கள் என்று தெரிந்தால், அவர் எடுக்கத் துணியும் அபாயம் இது. சிக்கலே டிரம்ப் தான்.”
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. ஆனால் இரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவதுடன், பிராந்தியத்திலுள்ள அதன் நிழற்படைகளுக்கான ஆதரவை நிறுத்துவது மற்றும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பது ஆகிய நிபந்தனைகளை டிரம்ப் விதித்துள்ளார் – இவை அனைத்தும் இரானிய ஆட்சிக்கு ‘சிவப்புக் கோடுகளாக’ (மறுக்க முடியாத எல்லைகள்) பார்க்கப்படுகின்றன.
இஸ்ரேலியத் தலைமை எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் கடுமையாக எதிராக உள்ளது, மேலும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்பதில் இஸ்ரேலிய ஆய்வாளர்கள் பிளவுபட்டுள்ளனர்.
வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் ஆகிய இரு தரப்பும் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதாகவும், ஆனால் விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்றும் தான் கருதுவதாக கோஹன் கூறினார்.
“இரானின் அதி உயர் தலைவர் மற்றும் டிரம்ப் ஆகிய இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் உள்ளது. அவர்களுக்கு உண்மையில் சிவப்புக் கோடுகள் எதுவும் இல்லை. 2013-ல் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, அவை மாறிக் கொண்டே இருந்ததால் நாங்கள் அவற்றை ‘இளம் சிவப்புக் கோடுகள்’ என்று அழைப்போம்,” என்று கோஹன் கூறினார்.
“இரானை நாம் எப்போதும் தீயவர்களாகப் பேசுகிறோம், ஆனால் அவர்கள் மிகவும் பகுத்தறிவுள்ளவர்கள்,” என்று அவர் கூறினார். “சூழ்நிலையை மாற்றுவதற்கு, இதுவரை செய்யப்படாத ஒன்றை அவர்கள் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.”
“ஆம், சமரசம் செய்துகொள்ளும் திறன் அங்கு உள்ளது, அவர்கள் வட கொரியா அல்ல, ஆனால் இந்த ஆட்சிக்கும் சில சிவப்புக் கோடுகள் உள்ளன,” என்று எச்சரித்த சிட்ரினோவிக், ஒரு போரைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்று கூறினார், “ஏனெனில் இரானியர்கள் இது தங்கள் வாழ்வா சாவா போராட்டம் என்று நினைப்பார்கள்.”

டிரம்ப் தனது பேச்சுவார்த்தை நிபந்தனைகளைக் குறைத்து, இரானின் அணுசக்தி திட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. டெஹ்ரான் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தேவையான அளவிற்கு நிபந்தனைகள் குறைக்கப்பட்டால், பிராந்தியத்தின் பெரும்பகுதி நிம்மதிப் பெருமூச்சு விடும் – மேலும் இஸ்ரேலில் பலர் மூச்சை அடக்கிக் காத்திருப்பார்கள்.
இரான் வெளிப்படையான தடையைத் தவிர்க்கும் அதே வேளையில், நடைமுறையில் எந்தவொரு புதிய செயல்பாட்டையும் தற்காலிகமாகத் தடுக்கும் வகையில் செறிவூட்டல் போன்ற விவகாரங்களில் சமரசங்களை உருவாக்குவதற்கான வழிகள் இருப்பதாக கோஹன் கூறுகிறார்.
“எங்களுக்கும் இரானியர்களுக்கும் உள்ள அத்தியாவசிய வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் விரைவான முடிவுகளை விரும்புகிறோம், ஆனால் இரானியர்களிடம் மிகுந்த பொறுமை உள்ளது,” என்று அவர் கூறினார். “அவர்கள் சொல்கிறார்கள்: ‘நாங்கள் இங்கே 2000 ஆண்டுகளாக இருக்கிறோம், அணு ஆயுதம் பெற எங்களுக்கு இன்னும் 30 ஆண்டுகள் தேவைப்பட்டாலும் பரவாயில்லை’.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு