பட மூலாதாரம், BBC / Getty Images
அமெரிக்கா மற்றும் இரான் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் உதவிய தனது வெற்றியை பாகிஸ்தான் கொண்டாடி வரும் நிலையில், அதன் தலைவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகி வருகின்றனர்.
இன்று (சனிக்கிழமை) தொடங்கவிருக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள் உண்மையில் திட்டமிட்டபடி நடக்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இஸ்லாமாபாத் அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது.
சுமார் 10,000 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் தெருக்களில் அமைதி நிலவுகிறது.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் போரின் முடிவையும், போருக்கு முன்பு உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% பயணித்த ஒரு முக்கியப் பாதையான ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதையும் காண ஆர்வமாக உள்ளன.
ஆனால், பாகிஸ்தானுக்கு வேறு சில வழிகளிலும் ஆபத்துகள் அதிகமாக உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து, பாகிஸ்தான் தனது அண்டை நாடான இரானுடனான சண்டையில் இழுக்கப்பட்டால், அந்த தெற்காசிய நாடு ஒரு “பேரழிவுகரமான சூழலை” எதிர்கொள்ள நேரிடும் என்று சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிபுணர் அப்துல் பாசித் கூறுகிறார்.
கடந்த ஆண்டு சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாலும், “சவுதிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்பதை பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளதாலும்” இது நிகழக்கூடும் என்று பாசித் கூறுகிறார்.
பாகிஸ்தானின் மற்ற அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான தற்போதைய பதற்றங்களை குறிப்பிட்ட பாசித் , இது “பாகிஸ்தானின் மூன்று எல்லைகளும் பதற்றமடைய” வழிவகுக்கும் என்று விளக்குகிறார்.
“மேலும் பாகிஸ்தான் ஏற்கனவே தனது நான்கு மாகாணங்களில் இரண்டில் முழு அளவிலான கிளர்ச்சிகளை எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தானால் இதைத் தாங்க முடியாது”என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், பாகிஸ்தானிய சமூக ஊடகங்களில் பெருமையும் உற்சாகமும் மேலோங்கியுள்ளன. பல்வேறு மீம்கள் வைரலாகி வருகின்றன.
“உலகின் வேறு எந்த எந்த நாடும் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய முடியாத நிலையில், ஒரு பெரும் பேரழிவின் விளிம்பில் நாம் இருந்தபோது, பாகிஸ்தான் அதைத் தடுத்து நிறுத்தியுள்ளது என்ற வகையில் இது ஒரு வெற்றியாகும்” என்கிறார் பாசித்.
பல ஆண்டுகளாக நீடித்த அரசியல் குழப்பம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடன் தவணை செலுத்த முடியாத நிலைக்கு மிக அருகில் சென்ற பலவீனமான பொருளாதாரம் மற்றும் இந்தியாவுடனான கடும் போட்டி ஆகியவற்றை எதிர்கொண்ட ஒரு நாட்டிற்கு இந்த வெற்றி மிகவும் தேவையானது.
இந்த நிலையில், பாகிஸ்தான் இச்சாதனையை எவ்வாறு நிகழ்த்தியது?
டிரம்புக்கு விருப்பமான பீல்ட் மார்ஷல்
அமெரிக்கா, இரான் மற்றும் வளைகுடா நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதால், பாகிஸ்தான் ஒரு தனித்துவமான நிலையில் உள்ளது.
இந்த சமரச முயற்சியை பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முன்னின்று நடத்துகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆசிம் முனீரைத் தனது “விருப்பமான பீல்ட் மார்ஷல்” என்று அழைப்பதாக ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் முஷாஹித் ஹுசைன் சையத் கூறுகிறார்.
அரசியலில் நீண்டகாலமாக ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வரும் பாகிஸ்தானில், முனீர் விவாதிக்க முடியாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்த மனிதராக விளங்குகிறார்.
டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கிய உடனேயே, முனீர் அமெரிக்க அதிபருடன் இணக்கமான உறவை உருவாக்கத் தொடங்கி, அவருக்கு “இரண்டு ஆரம்பகால வெற்றிகளை” வழங்கினார் என்று அமெரிக்கா மற்றும் ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் மலிஹா லோதி கூறுகிறார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது, 2021-ஆம் ஆண்டு காபூல் விமான நிலையக் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் நபரை, சிஐஏ உளவுத் தகவலின் அடிப்படையில் செயல்பட்டு பீல்ட் மார்ஷல் முனீர் ஒப்படைத்தார்.
அந்தத் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 170 ஆப்கானியர்கள் மற்றும் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
“டிரம்ப் இதற்கு மிகவும் நன்றியுள்ளவராக இருந்தார், இதனை காங்கிரஸில் ஆற்றிய தனது முதல் உரையில் அவர் குறிப்பிட்டார்” என்கிறார் லோதி.
பட மூலாதாரம், Kash Patel/X
இரண்டாவது வெற்றி, “இந்தியாவுடனான ஒரு பெரிய போரைத் தடுப்பதில் அவர் (டிரம்ப்) முக்கிய பங்கு வகித்தார் என்பதை பாகிஸ்தான் அவருக்கு உணர்த்திய விதம்” என்று லோதி கூறுகிறார்.
டிரம்ப் நீண்டகாலமாக விரும்பிய அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரைப் பரிந்துரைத்த சில நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று.
“உலகில் ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டின் மீதும் டிரம்ப் விதித்த வரிப் போரினால் அவருக்குப் பெரிய மகிழ்ச்சி எதுவும் கிடைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, பாகிஸ்தானிடமிருந்து அவருக்குக் கிடைத்தது உண்மையில் அவருக்குத் தேவையான ஒன்றாக இருந்தது.”
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு நலனாகக் கருதப்படும் தனது முக்கியமான கனிமங்களை அணுகுவதற்கான அனுமதியையும் வழங்குவதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.
செப்டம்பர் 2025-ல், ராணுவத்தின் கீழ் இயங்கும் பாகிஸ்தானின் முக்கிய கனிமச் சுரங்க நிறுவனமான ஃபிரான்டியர் வொர்க்ஸ் ஆர்கனைசேஷன், ஒரு அமெரிக்க நிறுவனத்துடன் 500 மில்லியன் டாலர் முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பிரதமர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் முனீர் கலந்துகொண்டார்.
பின்னர், ஜனவரி மாதம், டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரால் இணைந்து தொடங்கப்பட்ட கிரிப்டோகரன்சி நிறுவனமான ‘வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல்ஸின்’ இணை நிறுவனத்துடன் பாகிஸ்தான் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அந்நிறுவனம் தனது ஸ்டேபிள்காயினை நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பில் ஒருங்கிணைக்க வாய்ப்புள்ளது. இது டிரம்பின் வட்டாரத்துடனான நாட்டின் உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளது.
‘கொள்கை ரீதியான நிலைப்பாடு’
இருப்பினும், இந்த நெருக்கமான உறவுகள் இரான் மீதான முதல் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாகக் கண்டிப்பதைத் தடுத்து நிறுத்தவில்லை.
ஆனால், தனது ராணுவ நட்பு நாடான சவூதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மீது இரான் குண்டுவீசியபோது, பாகிஸ்தானும் இரானுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
ஏப்ரல் 7-ஆம் தேதி, ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்குமாறு நாடுகளை வலியுறுத்தும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தைப் பாகிஸ்தான் புறக்கணித்தது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் முதலில் தாக்கின என்பதைக் குறிப்பிடாமல் இந்தத் தீர்வு அமைந்துள்ளதால், இது “ஒருதலைப்பட்சமானது” என்று சையத் கூறுகிறார்.
இந்த “கொள்கை ரீதியான நிலைப்பாடு” மற்றும் “சமநிலையான அணுகுமுறை” ஆகியவை இரான் மற்றும் பிற வளைகுடா நாடுகளின் நம்பிக்கையை மேம்படுத்த உதவியுள்ளதாக சையத் கூறுகிறார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இந்த நாடுகளுடன் இணைந்து முக்கியப் பங்காற்றியுள்ளதாக பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஐசாஸ் சவுத்ரி கூறுகிறார்.
கடந்த ஐந்து வாரங்களில், ஷெரீப் மற்றும் அவரது துணை அதிகாரியான வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் ஆகியோர் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, முக்கிய ஐரோப்பிய தலைநகரங்கள், துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் பத்துக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளில், இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தான் “நெருக்கமான மற்றும் ஆழமான உரையாடலை” நடத்தியதாக ஷெரீப் கூறினார்.
அந்த உரையாடலில் “வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் இரான் பங்கேற்பதை பெசெஷ்கியன் உறுதிப்படுத்தியதுடன், பாகிஸ்தானின் முயற்சிகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார்” என்று ஷெரீப் குறிப்பிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இரானுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் நீண்டகால உறவை ஷெரீப் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிகிறது.
இரு நாடுகளும் இரானுடன் 920 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன மற்றும் அதன் விளைவாகப் பல ஆண்டு காலமாக ஒத்துழைத்து வருகின்றன என்று இரானுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஆசிப் துரானி கூறுகிறார்.
தீவிரவாதிகள் மற்றும் ‘நிலையற்ற’ ஆப்கானிஸ்தான் குறித்த மற்ற கவலைகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
“கடந்த ஐம்பது ஆண்டுகளாக, அகதிகள் வடிவில் எங்கள் இரு நாடுகளிலும் நாங்கள் உறுதியற்ற தன்மையை எதிர்கொண்டு வருகிறோம்” என்கிறார் துரானி.
பட மூலாதாரம், EPA/Shutterstock
நம்பிக்கை மற்றும் தொடர்பை வளர்ப்பதில் மதம் வகித்த பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது.
பாகிஸ்தான் சன்னி பெரும்பான்மை நாடாக இருந்தாலும், உலகின் மிகப்பெரிய ஷியா மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் இதுவும் ஒன்று.
ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் உலகின் மிகப்பெரிய ஷியா நாடான இரானுக்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஆனால் சனிக்கிழமை நெருங்கி வரும் வேளையில், பாகிஸ்தானின் முயற்சிகள் வாக்குறுதியளிக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முடியுமா என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
போர் நிறுத்தம் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது, மேலும் இரு தரப்பினரும் உண்மையில் வருவார்களா என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
“அடுத்த கட்டமான, ஒரு விரிவான உடன்பாட்டை எட்டுவது கடினமானது, மேலும் பாகிஸ்தான் இந்தச் செயல்முறைக்குத் தொடர்ந்து உதவ வேண்டும்” என்று சௌத்ரி கூறுகிறார்.
“லெபனான் மீது இந்த கடுமையான தாக்குதலை நடத்துவதன் மூலம் இஸ்ரேல் ஏற்கனவே போர்நிறுத்தத்தைச் சீர்குலைக்க முயல்கிறது” என்று லோதி கூறுகிறார்.
புதன்கிழமையன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், மேலும் இரானுடனான போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை என்றும் இஸ்ரேல் கூறுகிறது.
மேலும் , “பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகளிடையே இந்தக் கவலை நிச்சயமாக இருக்கிறது. அந்த வகையில், இஸ்ரேலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும் கடமையும் டிரம்ப்பையே சாரும்” என்று அவர் கூறுகிறார்.
அமைதியை வளர்ப்பதில் பாகிஸ்தான் ஏற்கனவே “தனது பங்கை ஆற்றியுள்ளது” என்று கூறும் துரானி,
“ஒரு மத்தியஸ்தர் அல்லது உதவியாளராக, அமைதிக்கான சூழலை உருவாக்க மட்டுந்தான் முடியும். முழுமையாக அமைதி ஏற்படுத்த முடியாது. பாகிஸ்தான் வழங்கிய அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது அந்தந்த நாடுகளின் கைகளில்தான் உள்ளது”என்றும் குறிப்பிட்டார்.
கூடுதல் செய்தி:ஸ்டீபன் ஹாக்ஸ் மற்றும் கிரேஸ் சோய்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு