பட மூலாதாரம், Harun Ozalp/Anadolu via Getty Images
இரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் ஓமனில் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்தச் சமயத்தில், பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் மற்றும் நிபந்தனைகளில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியில் முடியும் எனத் தோன்றியது.
இதற்கிடையில், இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் பங்கேற்க தங்களுக்கு அழைப்பு வந்துள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அழைப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டுள்ளது.
பட மூலாதாரம், AFP via Getty Images
சமீபத்தில், இரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், “இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை அடுத்த சில நாட்களில் நடைபெறும்” என்றும், “ஓமன், துருக்கி மற்றும் பிற நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த ஆர்வம் காட்டியுள்ளன. இதற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்” என்றும் கூறினார்.
அமெரிக்கச் செய்தி இணையதளமான ‘ஆக்சியோஸ்’ துருக்கிக்குப் பதிலாக ஓமனில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற இரானின் கோரிக்கையை டிரம்ப் நிர்வாகம் ஏற்றுக்கொண்டதாக தனது அரபுலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி,த் தெரிவித்துள்ளது.
தற்போது, இந்தப் பேச்சுவார்த்தைகளில் அரபு மற்றும் பிற முஸ்லிம் நாடுகளையும் சேர்க்க வேண்டுமா என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்று வருகிறார். அவருடன் மத்திய கிழக்கிற்கான டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் பிற அரசு அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
அப்பாஸ் அரக்சி சிஎன்என் செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானின் பங்கு என்னவாக இருக்கும்? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் முன், அமெரிக்காவும் இரானும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் எதை அடைய விரும்புகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
அமெரிக்கா- இரான் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான பதற்றம் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, அமெரிக்கா இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமான தளத்தின் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
சமீப காலங்களில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதைக் காண முடிகிறது. அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ இரானை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக டிரம்ப் கூறினார். இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் தொடர்ந்து சூசகமாகத் தெரிவித்து வந்தார்.
பேச்சுவார்த்தைக்கான வரையறைகள் இரான் அல்லது அமெரிக்காவால் இன்னும் பகிரப்படவில்லை. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில், இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் அணுசக்தி ஒப்பந்தத்தைச் சுற்றியே இருந்துள்ளன. இதுவரை, இரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் முடக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் தெளிவான நிலைப்பாடாக உள்ளது. யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக நிறுத்துவதை உள்ளடக்கிய ஓர் ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
மறுபுறம், இரானிய அதிகாரிகளும் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் தங்கள் நாடு ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெற முயற்சிக்கவில்லை என்றும், இனிமேலும் செய்ய மாட்டோம் என்றும் பலமுறை கூறி வருகின்றனர்.
இரானிய அதிபரின் கூற்றுப்படி, அந்த நாட்டின் அணுசக்தி திட்டம் அமைதி நோக்கங்களுக்காகவே செயல்படுத்தப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் இரானைத் உன்னிப்பாகக் கவனிக்கும் ஆய்வாளர்கள், ‘தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான ஒப்பந்தம் அவசியம். ஏனெனில் இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஆபத்தாக முடியும்’ என்று நம்புகின்றனர்.
பல வெளிநாட்டு சிந்தனைக் குழுக்களுடன் தொடர்புடைய அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் சஹர் கான், “இரான் மீதான சாத்தியமான தாக்குதல்களைத் தவிர்க்கும் வகையில் இரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏதோ ஒரு வகையான ஒப்பந்தம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்” என பிபிசி உருது சேவையிடம் கூறினார்.
இருப்பினும், இரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அமெரிக்காவின் அணுகுமுறை பதற்றத்தைக் குறைக்க உதவவில்லை என்று அவர் கூறுகிறார்.
“அமெரிக்காவின் அணுகுமுறை மிகவும் தெளிவற்றதாக உள்ளது. இது அமெரிக்காவிற்குப் பேச்சுவார்த்தையில் ஆர்வம் இல்லை என்ற எண்ணத்தை அளிக்கிறது.”
“இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது இரானை மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் சீர்குலைக்கக் கூடும்” என்று சஹர் கான் கூறுகிறார்.
“இரான் என்பது ஆப்கானிஸ்தான் அல்ல என்பதை அமெரிக்கா தெரிந்து கொள்வது அவசியம். நிலப்பரப்பு, மக்கள் தொகை, வளங்கள் என எதிலும் அது ஆப்கானிஸ்தான் போன்றது கிடையாது. இரான், இராக் போன்றதும் அல்ல; அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.”
பட மூலாதாரம், Iran’s Presidential website/WANA/Reuters
நியூ லைன்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த கம்ரான் புகாரி, தற்போதைய ஆட்சியைக் காப்பாற்ற அமெரிக்காவுடன் ஏதோ ஒரு வகையான ஒப்பந்தம் செய்வது அவசியம் என்பதை இரான் உணர்ந்துள்ளதாக நம்புகிறார்.
பிபிசி உருது சேவையிடம் பேசிய அவர், “இரான் தாங்கள் விளிம்பு நிலையில் இருப்பதை அறிவார்கள். தாங்கள் பலவீனமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்பதையும், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இன்றித் தங்கள் உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது என்பதையும் அவர்கள் அறிவார்கள்” என்றார்.
சமீப காலங்களில், மோசமான பொருளாதார நிலை காரணமாக இரானில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக வன்முறைப் போராட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கம்ரான் புகாரியின் கருத்துப்படி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அல்லது ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரானுக்குப் பொருளாதார ரீதியாக நிவாரணம் பெற ஒரு வாய்ப்பு கிடைக்கும் மற்றும் சில பொருளாதாரத் தடைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை இப்போது இரான் தனது அணுசக்தி திட்டத்திலும் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
“முதலில் அணுசக்தி விவகாரம் குறித்துப் பேசுவோம், மற்ற விஷயங்களைச் பிறகு விவாதிக்கலாம் என்று இப்போது டிரம்ப் நிர்வாகமும் கூறுவதாக நான் நினைக்கிறேன். மறைமுக தொடர்புகள் மற்றும் மத்தியஸ்தர்கள் மூலம், இரான் தனது ஏவுகணைத் திட்டம் குறித்தோ அல்லது தனது ஆதரவு அமைப்புகளுடனான உறவு குறித்தோ சமரசம் செய்து கொள்ளாது, ஆனால் அணுசக்தி திட்டம் குறித்த உங்களின் (அமெரிக்கா) சில கோரிக்கைகளில் நாங்கள் சமரசம் செய்து கொள்வோம் அல்லது அந்த ஒப்பந்தத்திற்கு நெருக்கமாக வருவோம் என்று இரான் கூறி வருவதாக நான் கருதுகிறேன்.” என்று அவர் கூறுகிறார்.
பாகிஸ்தானின் பங்கு என்ன?
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானைத் தவிர, சௌதி அரேபியா, கத்தார், எகிப்து, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் மட்டுமே அதிகாரப்பூர்வமாக இந்த அழைப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
தாங்கள் அழைக்கப்பட்டிருப்பத பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையில் யார் பங்கேற்பார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மறுபுறம், துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார் என்று பாகிஸ்தான் பிரதமரின் குழுவைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தானின் பெயர் குறிப்பிடப்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் மற்றும் அசிம் முனீர் இடையிலான உரையாடல் குறித்து வாஷிங்டனில் உள்ள ஒரு வட்டாரத்துடன் பிபிசி உருது பேசியது.
அந்தச் சந்திப்பில் இரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் குறித்து விவாதிக்கப்பட்டதை அந்த வட்டாரம் உறுதிப்படுத்தியது.
“இந்தப் பிரச்னைக்கு இராஜதந்திர ரீதியிலான தீர்வு சாத்தியம் என்று பாகிஸ்தான் தலைமை நம்புகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது சரியாக இருக்காது என்றும், மற்ற பிரச்னைகளை இராஜதந்திர ரீதியாகத் தீர்க்க முடியும் என்றும் இரானுக்குச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.” என்று அப்போது வாஷிங்டன் வட்டாரம் பிபிசி உருதுவிடம் கூறினார்.
முன்னாள் அமெரிக்கத் தூதரக அதிகாரியும் ஸ்டிம்சன் மையத்தைச் சேர்ந்தவருமான எலிசபெத் த்ரெல்கெல்ட் பிபிசி உருது சேவையிடம் பேசுகையில், “இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகளை எளிதாக்க பாகிஸ்தான் அமைதியாக உதவி வருவதாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றார்.
பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் பங்கேற்பது ஒரு முக்கியமான விஷயம் என்று அவர் நம்புகிறார்.
“ராணுவ நடவடிக்கையின் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் ஒரு தீர்வை நோக்கிப் பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்றும்” என்று எலிசபெத் கூறுகிறார். “இதைச் செய்ய, டெஹ்ரான் மற்றும் வாஷிங்டனுடனான தனது வலுவான உறவுகளையும், மற்ற பிராந்திய நட்பு நாடுகளுடனான தனது உறவுகளையும் அது பயன்படுத்தும்.”
இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானைச் சேர்ப்பது ஒரு நல்ல முன்னேற்றம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
“இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பாகிஸ்தானை அழைப்பது ஒரு நல்ல நடவடிக்கை, அதற்கு மத்தியஸ்தர் பாத்திரமோ அல்லது பார்வையாளர் பாத்திரமோ எது வழங்கப்பட்டாலும் சரி” என்று சஹர் கான் கூறுகிறார்.
பாகிஸ்தான் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானும் இரானும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. எனவே அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் பாகிஸ்தானையும் பாதிக்கலாம்.
“இரான் குறித்துப் பாகிஸ்தானின் கவலைகளை டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்பதையும் இது குறிக்கிறது” என்று சஹர் கான் கூறுகிறார்.
2024-ஆம் ஆண்டில், இரான் மற்றும் பாகிஸ்தான் ஒன்றையொன்று எல்லைப் பகுதிகளில் தாக்கிக் கொண்டன, ஆனால் அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளன.
சஹர் கானின் கூற்றுப்படி, “பாகிஸ்தானும் இரானும் தங்களுக்குள் உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் அழைக்கப்பட்டிருப்பது, அந்த நாடு எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. பாகிஸ்தான் ஒரு அறிவுப்பூர்வமான குரலை எழுப்பும் என்று நான் நம்புகிறேன்.”
இந்தப் பிராந்தியத்திற்குப் பாகிஸ்தான் முக்கியமானது என்பதை அமெரிக்காவும் புரிந்து கொள்கிறது என்று அவர் நம்புகிறார்.

எலிசபெத், பாகிஸ்தானின் பங்கேற்பைப் பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையின் வெற்றியாகக் கருதுகிறார். “மத்திய கிழக்கின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் ஒரே நாடு பாகிஸ்தான் தான். இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் முன்னேற்றங்களில் பாகிஸ்தான் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பதற்கு இதுவே சான்று” என்று அவர் கூறுகிறார்.
இரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை அழைத்தது அமெரிக்காவின் பிராந்தியக் கொள்கை மாறி வருவதையும் நிரூபிக்கிறது என்று பிற ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் நியூ லைன்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த கம்ரான் புகாரி, “பாகிஸ்தானை இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைத்தது அமெரிக்காவின் புதிய கொள்கையின் ஒரு பகுதி, இதன் கீழ் அமெரிக்கா தனது பிராந்தியச் சுமையைப் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு