• Mon. Apr 13th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி: இரு தரப்பும் குற்றச்சாட்டு

Byadmin

Apr 13, 2026


அமெரிக்காவும் ஈரானும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை முடிவில் எந்தத் தீர்வும் கிடைக்காமல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

சுமார் 21 மணிநேரம் நீண்ட இந்த பேச்சுவார்த்தையிலும் இரு நாடுகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எட்ட முடியவில்லை என்று அவர் கூறினார். அமெரிக்கா தனது நிபந்தனைகளை தெளிவாக முன்வைத்ததாகவும் ஆனால், ஈரான் அதனை ஏற்கத் தயங்கியதாகவும் வான்ஸ் குறிப்பிட்டார்.

மேலும், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை கைவிடும் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாக நிறுத்துவது தான் அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய இலக்கு எனவும் அவர் கூறினார்.

போரின் போது ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு நிலையங்கள் சேதமடைந்திருந்தாலும், அந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்படக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும் வான்ஸ் வலியுறுத்தினார்.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்காக ஏற்பாடு செய்த பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்து, அங்கிருந்து அமெரிக்க பிரதிநிதிகள் புறப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மறுபுறம், இந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு அமெரிக்கா முன்வைத்த நியாயமற்ற கோரிக்கைகளே காரணம் என ஈரானின் அரசு ஊடகமான IRIB குற்றம்சாட்டியுள்ளது.

ஈரானிய நாடாளுமன்றத் தலைவர் முகம்மது கலிபாஃப் தலைமையிலான குழு, நாட்டின் தேசிய நலன்களை பாதுகாக்க உறுதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகள் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் தடுத்ததாக IRIB கூறியுள்ளது.

By admin