பட மூலாதாரம், Kamal Saini/BBC
ஹரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த குஷ்ப்ரீத் சிங், ஆறு மாதங்களுக்கு முன்பு 45 லட்சம் ரூபாய் செலவழித்து அமெரிக்கா சென்றிருந்தார்.
குஷ்ப்ரீத் சிங்கின் தந்தை, தனது நிலம், வீடு மற்றும் கால்நடைகள் மீது கடன் வாங்கி குஷ்ப்ரீத்தை அமெரிக்காவுக்கு அனுப்பினார். ஆனால், தற்போது அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள இந்தியர்களில் குஷ்ப்ரீத் சிங்கும் ஒருவர்.
ஜனவரி 22-ம் தேதி, தான் எல்லை தாண்டியதாகவும், பிப்ரவரி 2-ம் தேதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும் குஷ்ப்ரீத் கூறுகிறார்.
“தண்ணீர் குடித்துவிட்டு காட்டைக் கடக்கச் சொன்னார்கள். யாராவது பின்னால் விழுந்தால், திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை, உங்கள் பாதையில் முன்னோக்கிச் செல்லுங்கள், வழிகாட்டி செல்பவரைப் பின்பற்றுபவர்களால் மட்டுமே பாதையைக் கடக்க முடியும், பின்னால் விழுபவர்கள் எப்போதும் அங்கேயே தான் இருப்பார்கள்.” என்று அவர்கள் கூறியதை விவரிக்கிறார் குஷ்ப்ரீத்.
பட மூலாதாரம், Kamal Saini/BBC
அமெரிக்காவில் பிடிபட்ட குஷ்ப்ரீத் 12 நாட்கள் ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
இதுகுறித்து பேசிய அவர், “முதல் நாளில் எங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவார்கள் என்று சொன்னார்கள், ஆனால் அவர்கள் எங்களை கேலி செய்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், அதில் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள், நாங்கள் தான் அதை நகைச்சுவையாக நினைத்தோம்.” என்கிறார்.
ராணுவ விமானத்தில் அவர் எப்படி ஏற்றப்பட்டார், அப்போது எப்படி நடத்தப்பட்டார் என்பது குறித்து குஷ்பிரீத் விவரித்தார்.
“அவர்கள் எங்களுக்கு கைவிலங்கிட்டபோது, சூழலின் தீவிரத்தை உணர்ந்தோம். முதலில் அவர்கள் எங்களை வரவேற்பு மையத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அங்கேயே விடப்படுவோம் என்று நினைத்தோம், ஆனால் நாங்கள் தரையிறங்கியபோது, எங்கள் முன் ஒரு ராணுவ விமானம் நிற்பதைக் கண்டோம்” என்று விவரிக்கிறார்.
குஷ்பிரீத் கடந்த சில நாட்களில் தான் எதிர்கொள்ள நேர்ந்ததை நினைத்து மிகவும் கவலையடைந்தவராகக் காணப்பட்டார்.
அமெரிக்காவை அடைய நிறைய பணம் செலவானது, மேலும் “எங்கள் பணத்தை நாங்கள் திரும்பப் பெற்றால், நாங்கள் இங்கே ஏதாவது வேலை செய்வோம்” என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஆனால் இப்போது நாங்கள் வெளியே வேலை தேட மாட்டோம்” என்றார்.
குஷ்பிரீத் சிங்கின் தந்தை உணர்ச்சிவயப்பட்டு காணப்பட்டார். அழுதுகொண்டே, “எங்கள் பணத்தை எங்களுக்குத் திருப்பிக் கொடுங்கள், முழுத் தொகையையும் கொடுக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் பாதியையாவது கொடுங்கள்” என்றார்.
‘வழியில் இறந்த உடல்களையும் பார்த்தேன்’
பட மூலாதாரம், Pradeep Sharma/BBC
பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் உர்மர் தாண்டாவைச் சேர்ந்த சுக்பால் சிங், காடுகள் மற்றும் கடல் வழியாக அமெரிக்காவை அடைந்ததாகக் கூறினார்.
சுக்பால் சிங், பிபிசி நிருபர் பிரதீப் சர்மாவிடம், வீட்டை விட்டு வெளியேறி நான்கு மாதங்கள் ஆகிவிட்டதாகக் கூறினார்.
வழியில் உள்ள சிரமங்களைப் பற்றி அவர் கூறுகையில், “யாரும் தவறான பாதையில் செல்ல வேண்டாம், முடிந்தால் அங்கு செல்லவே வேண்டாம் என்று எல்லோரிடமும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். இங்கே உணவு கிடைத்தால் அதை மட்டும் சாப்பிடுங்கள். அங்கு உணவு இல்லை. மேலும், அவர்கள் உங்கள் பணத்தை பறித்துச் செல்கிறார்கள், பாதுகாப்பும் இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் எங்களை முதலில் இத்தாலிக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் எங்களை லத்தீன் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். நாங்கள் சுமார் 15 மணிநேரம் ஒரு படகில் பயணம் செய்தோம். மலைகளில் 45 கிலோமீட்டர் தூரம் நடந்தோம், அங்கே யார் விழுந்தாலும், அவர்களை அங்கேயே விட்டுவிடுவார்கள். வழியில் பல சடலங்களைப் பார்த்தோம்” என்று பகிர்ந்தார்.
பட மூலாதாரம், Pradeep Sharma/BBC
ஹோஷியார்பூர் மாவட்டத்தின் தாசுவா நகரைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங்கின் கதையும் இதே போன்றதுதான்.
முதலில் டெல்லிக்கும், பின்னர் கத்தாருக்கும், அங்கிருந்து பிரேசிலுக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறுகிறார்.
“நான் பிரேசிலில் ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன், பின்னர் அவர்கள் என்னிடம் பெருவிலிருந்து உங்களுக்கு விமானம் இருப்பதாக சொன்னார்கள், நாங்கள் பேருந்தில் பெரு சென்றோம், ஆனால் அங்கு விமானம் இல்லை, அங்கிருந்து நாங்கள் டாக்ஸியில் சென்றோம்.” என்றார்.
இதற்கு 42 லட்சம் ரூபாய் செலவிட்டதாக ஹர்விந்தர் சிங் கூறுகிறார்.
“நாங்கள் பனாமாவை அடைந்தபோது சிக்கிக்கொண்டோம். அங்கு ஒன்றிரண்டு பேர் இறந்தனர், ஒருவர் கடலில் மூழ்கி இறந்தார், இன்னொருவர் காட்டில் இறந்தார்,” எனக் குறிப்பிடுகிறார் ஹர்விந்தர் சிங்.
செல்லுபடியாகும் விசா இருந்தபோதிலும் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்?
பட மூலாதாரம், Gurminder Grewal/BBC
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜாக்ரோன் பகுதியைச் சேர்ந்த முஸ்கான் என்பவர் மூன்றாண்டு படிப்பு விசாவில் பிரிட்டன் சென்றிருந்தார்.
அவருக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கான விசா மீதமுள்ளது, ஆனால் அவர் அமெரிக்கா சென்றவுடன், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
பிபிசிக்கு செய்திகள் வழங்கும் நிருபர் குர்மிந்தர் கிரேவாலின் கருத்துப்படி, அவர் ஜனவரி 5, 2024 அன்று பிரிட்டனுக்குச் சென்றார்.
முஸ்கான் கூறுகையில், “நாங்கள் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள துஹாவானாவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தோம். காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வந்து எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினர். அவர்கள் எங்களை 10 நாட்கள் தங்களுடனேயே வைத்திருந்து, எங்களை மிகவும் நன்றாக உபசரித்தனர்” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “கலிஃபோர்னியா காவல்துறையினர் எங்களை அழைத்துச் செல்ல வந்தார்கள். பிறகு எங்களை இந்தியாவுக்கு அனுப்பினர். இங்கு வந்த பிறகுதான் நாங்கள் இந்தியாவுக்கு வந்திருப்பதையே உணர்ந்தோம். அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டோம்.
நாங்கள் முறையான விசாவில் தான் சென்றோம். எந்த எல்லையையும் தாண்டவோ அல்லது எந்த சுவற்றிலும் ஏறியோ செல்லவில்லை” என்கிறார் முஸ்கான்.
அது மட்டுமின்றி, “செல்லுபடியாகும் பிரிட்டிஷ் விசா என்னிடம் உள்ளது, ஆனால் நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு எங்கும் செல்ல முடியாது என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றும் குறிப்பிட்டார்.
“குழந்தையின் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாங்கள் அவரை அனுப்பியிருந்தோம், ஆனால் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். அரசாங்கம் இப்போது இதில் கவனம் செலுத்த வேண்டும். கடன் வாங்கி குழந்தையை அனுப்பியுள்ளோம்” என்று கவலை தெரிவித்தார் முஸ்கானின் தந்தை ஜெகதீஷ் குமார்.
முஸ்கானின் வீட்டுக்குச் சென்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ சரப்ஜித் கவுர் மனுகே, “இன்னும் இரண்டு வருடம் செல்லுபடியாகும் பிரிட்டிஷ் விசா அந்தப் பெண்ணிடம் இருந்தாலும் அவர் திருப்பி அனுப்பப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.
முஸ்கானின் குடும்பத்துடன் தங்களுக்கு நல்ல உறவு இருப்பதாக மனுகே கூறுகிறார். “எங்கள் மகள் துஹாவானாவைப் பார்க்கச் சென்றார், அவர்களே அவரை அங்கு அழைத்துச் சென்றார்கள்,
அதன் பிறகு எல்லாம் நடந்துள்ளது.
அமெரிக்கா போன்ற ஒரு நாட்டிலிருந்து இதுபோன்ற விஷயங்களை எதிர்பார்க்கவில்லை” என வருத்தம் தெரிவித்தார்.
11 நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றவர்
பட மூலாதாரம், BBC/Gurpreet Chawla
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் சூரியன் பகுதியைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் பிடிபட்டு திருப்பி அனுப்பப்பட்டபோது அமெரிக்காவில் 11 நாட்கள் மட்டுமே இருந்துள்ளார்.
பிபிசி செய்தியாளர் குர்பிரீத் சாவ்லாவிடம் பேசிய அவர், “அமெரிக்கா செல்லும் கனவு கலைந்து விட்டது” என்று கனத்த இதயத்துடன் கூறினார்.
அவரது அமெரிக்க பயணம் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, இந்தக் கனவுக்காக அவர் 40 லட்ச ருபாய் இழந்துள்ளார்.
புதன்கிழமையன்று, அமெரிக்க ராணுவ விமானம் மூலம் 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த 104 இந்தியர்களில் ஜஸ்ப்ரீத்தும் ஒருவர்.
2022 ஆம் ஆண்டு பார்வையாளர் விசாவில் இங்கிலாந்து சென்றதாகவும், அங்கு ஸ்பெயினில் இருந்து பஞ்சாபி ஏஜென்ட் ஒருவரை தொடர்புகொண்டதாகவும் ஜஸ்பால் சிங் கூறுகிறார்.
பின்னர் 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐரோப்பாவை அடைந்தார் ஜஸ்பால் சிங்.
இதற்குப் பிறகு, வெவ்வேறு நாடுகளில் சுமார் 6 மாதங்கள் கழித்த பிறகு, பனாமா காடுகளின் வழியாக அமெரிக்காவுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்துள்ளார்.
ஜஸ்பால் சிங் கூறுகையில், “கழுதையில் பயணம் செய்த அனுபவம் மிகவும் ஆபத்தானது. அங்கு சிறுவர்கள் மட்டுமின்றி பெண் குழந்தைகளின் உடல்கள் உருண்டு கிடப்பதையும் கண்டேன், எலும்புக்கூடுகளையும் பார்த்தேன். பயணத்தின்போது எங்களுக்கு சிறிது ரொட்டியும், ஒன்றிரண்டு பிஸ்கட்டுகளும் மட்டுமே கிடைத்தன” என ஜஸ்பால் சிங் தனது பயணத்தை விவரித்தார்.
அமெரிக்க எல்லையைத் தாண்டியதும், அமெரிக்க ராணுவம் தன்னைக் கைது செய்ததாக ஜஸ்பால் கூறுகிறார்.
அவர் கூறுகிறார், “நாங்கள் பல வழிகளில் சித்திரவதை செய்யப்பட்டோம். விமானத்தில் ஏறிய பிறகு, கைகளும் கால்களும் கட்டப்பட்டன. விமானம் பல இடங்களில் நின்றது, ஆனால் அமிர்தசரஸை அடைந்த பிறகுதான் என் கைகளும் கால்களும் விடுவிக்கப்பட்டன” என தெரிவித்தார் .
“நிலத்தை விற்ற பிறகும், என் மகனால் எங்கும் செல்ல முடியவில்லை”
பட மூலாதாரம், Kamal Saini/BBC
ஹரியாணா மாநிலம் குருக்ஷேத்ராவில் வசிக்கும் ராபின் ஹண்டாவும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக 7 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில், அவரும் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஹண்டா கணினி பொறியியல் படித்துவிட்டு சிறந்த எதிர்காலத்தைத் தேடி அமெரிக்கா சென்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் அமெரிக்கா செல்வதற்காக 7 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினேன். ஒரு மாதமாக வழியில் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டேன். வழியில் பல சிரமங்களை சந்தித்தேன். சில சமயங்களில் எனக்கு உணவு கிடைத்தது, சில சமயங்களில் கிடைக்கவில்லை.
கடலிலும், சில நேரங்களில் படகுகளிலும் இருந்தேன்.
சில இடங்களில் பலர் என் பணத்தைப் பறித்துச் சென்றனர், இதுபோல பல வகையான பிரச்னைகளை எதிர்கொண்டேன்”
என ஹரியாணாவைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் கமல் சைனியிடம் ராபின் ஹண்டா தெரிவித்தார்.
“ஜனவரி 22-ம் தேதி நான் எல்லையைத் தாண்டிவிட்டேன். பின்னர் நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடித்து ராணுவத்திடம் சரணடைந்தோம். அவர்கள் எங்களை ஒரு முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நாங்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டோம்” என்றும் குறிப்பிட்டார் ராபின் ஹண்டா .
அதன் பிறகு, “முகாமிலிருந்து எங்களை எங்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூட எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, எங்கள் கைகளும் கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தன. எங்கள் முன் ராணுவ விமானம் நிற்பதைப் பார்த்தபோது, நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்” என்பதையும் அவர் பகிர்ந்தார்.
மேலும், “நான் யாரையும் இந்த வழியில் வெளியே செல்ல அறிவுறுத்த மாட்டேன். இது மிகவும் கடினமான பாதை.” என ஹண்டா இப்போது கூறுகிறார்.
தனது மகனை அனுப்புவதற்காக ரூ.45 லட்சம் செலவு செய்ததாக ராபின் ஹண்டாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
ராபின் ஹண்டாவின் தந்தை கூறுகையில், “ஏஜென்சி எங்களை ஏமாற்றி விட்டது. மகன் ஒரு மாதத்தில் வந்து விடுவான் என்று சொன்னார்கள், ஆனால் நாங்கள் 6-7 மாதங்கள் வீடு வீடாக அலைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் எங்களை சித்திரவதை செய்தனர், மின்சார அதிர்ச்சி கூட கொடுத்தனர்.” என்கிறார்.
“எங்கள் குழந்தையை அடிக்கும் வீடியோக்களும் எங்களிடம் உள்ளன. நல்ல வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, எங்கள் நிலத்தை விற்றோம், ஆனால் அது நடக்கவில்லை” என்று அவர் கூறினார்.
அவர் விவரிக்கும்போது, ராபின் ஹண்டாவின் பாட்டி பியார் கவுர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.
“பசியாலும் தாகத்தாலும் என் மகன் அவதிப்பட்டார்” என்று கூறினார்.
மேலும், “அவர் நிலத்தை விற்று ராபின் ஹண்டாவை அனுப்பினார். நிலத்தை விற்றதால் ஹண்டாவின் தாத்தாவும் நோய்வாய்ப்பட்டார். இது அவரது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது அவருக்கு எதுவும் தெரியாது” என்று தெரிவித்தார்.
‘அமெரிக்கா செல்ல 50 லட்ச ரூபாய் செலவழித்தேன்’
பஞ்சாபின் ஃபதேஹ்கர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள கஹான்புரா கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங், அக்டோபர் 2024 இல் அமெரிக்கா சென்றார்.
“இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகளால், ஜஸ்விந்தர் வீட்டில் இறக்கிவிடப்பட்டார்,” என ஜஸ்விந்தர் சிங்கின் மாமா கர்னைல் சிங் பிபிசியிடம் கூறினார்.
‘நாங்கள் அமெரிக்காவிலிருந்து கைவிலங்குகள் போடப்பட்டு விமானத்தில் அழைத்து வரப்பட்டோம்’ என அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
ஜஸ்விந்தர் சிங் கைது செய்யப்பட்ட 22 நாட்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“ஜஸ்விந்தர் வீட்டுக்கு வந்ததிலிருந்து அவரது உடல்நிலை மோசமாக உள்ளது, ஒருவேளை அவர் மன அழுத்தத்தில் இருக்கலாம்” என்று கர்னைல் சிங் கூறுகிறார்.
இந்நிலையில், ஜஸ்விந்தர் சிங்குக்கு காலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“முகாமில் சாப்பிட எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், பாதி ஆப்பிள் அல்லது ஜூஸ் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், அதுவும் எப்போதாவது மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் ஜஸ்விந்தர் குடும்பத்தினரிடம் கூறினார்,” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
ஜஸ்விந்தர் சிங்குக்கு ஒரு மூத்த சகோதரர் உள்ளார், இரு சகோதரர்களுக்கும் சொந்தமாக நிலம் உள்ளது. அங்கே அவர் விவசாயம் செய்து வந்தார்.
அதனையடுத்து, கடந்த ஆண்டு ஒரு ஏஜென்ட் மூலம் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார்.
அமெரிக்கா செல்ல அவரது குடும்பம் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்தப் பணத்துக்காக, நாங்கள் எங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து உறவினர்களிடமிருந்து நிறைய பணம் கடன் வாங்கியிருந்தோம்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு