பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேலை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக புதிதாக நியமித்துள்ளார்.
காஷ் படேல் பகவத் கீதையின் மீது கை வைத்து எஃப்பிஐ-யின் இயக்குநராக பதவியேற்றுக்கொண்டார்.
“உலகின் தலைசிறந்த நாட்டில் சட்ட அமலாக்க நிறுவனத்திற்கு தலைமை தாங்கப் போகும் முதல் தலைமுறை இந்தியரிடம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இது உலகில் வேறு எங்கும் நடக்க இயலாது. எஃப்பிஐ-க்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்கள் அவர்கள் செயல்களுக்கு பொறுப்பாளிகளாக்கப்படுவார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்”, என்று பதவியேற்ற பிறகு காஷ் டேல் தெரிவித்தார்.
டிரம்பின் தீவிர அபிமானியான காஷ் படேல், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான எஃப்பிஐ-யில் பல மாற்றங்களை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“காஷ் படேலை எனக்கு பிடிக்க ஒரு காரணம் அவர் மீது எஃப்பிஐ ஏஜன்டுகளுக்கு இருக்கும் மரியாதை ஆகும். அவர் ஒரு சக்திவாய்ந்த மனிதர். ஒவ்வொரு விஷயத்துக்கும் அவருக்கென சொந்த கருத்து உண்டு,” என காஷ் படேல் எஃப்பிஐயின் இயக்குநராக நியமிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
“எஃப்பிஐயில் நேர்மையையும், நீதியையும் நிலைநாட்டியுள்ளோம். அமெரிக்கா மீண்டும் பாதுகாப்பான நாடாக மாற்றப்பட்டுள்ளது,” என காஷ் படேல் பதவியேற்ற பிறகு அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை சமூக வலைதளத்தில் பதிவிட்டது.
பதவியேற்றபின் முதல் நாளில் காஷ் படேல் , அமெரிக்க மக்களுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த முன்னாள் எஃப்பிஐ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வால் ஆஃப் ஹானர் இடத்துக்கு சென்றார்.
“அமெரிக்காவுக்கு சென்று வாழ வேண்டும் என்ற கனவின் எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன். அமெரிக்காவுக்கு சென்று வாழ வேண்டும் என்ற கனவு இறந்துவிட்டதாக யாராவது நினைத்தால் அவர்கள் என்னைப்பார்க்க வேண்டும்” என்று காஷ் படேல் தெரிவித்தார்
பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் தீவிர ஆதரவாளர்
டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான காஷ் படேல், அமெரிக்க அரசின் உயர்நிலை சட்ட அமலாக்க அமைப்பான எஃப்பிஐ-யின் செயல்பாடுகளை இதற்குமுன் விமர்சித்து வந்துள்ளார்.
டிரம்ப் 2017-ல் எஃப்பிஐ இயக்குநராக நியமித்த கிறிஸ்டோபர் ரேவின் இடத்திற்கு படேல் வந்துள்ளார். டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்பதற்கு முன் ரே பதவி விலகியிருந்தார். அதற்கு முன்பே ரேவை பதவி நீக்கம் செய்துவிடப் போவதாக டிரம்ப் குறிப்பால் உணர்த்தியிருந்தார்.
காஷ் படேலின் நியமனத்திற்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. ஜனநாயக கட்சியின் அனைத்து எம்பிக்களும் அவருக்கு எதிராக வாக்களித்தனர், குடியரசுக் கட்சியை சேர்ந்த இரண்டு எம்பிக்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எஃப்பிஐ-க்கு தலைமையேற்க அவருக்கு இருக்கும் தகுதி குறித்து இவர்கள் கேள்வி எழுப்பினர். டிரம்பின் எதிர்பாளர்கள் மீது பழிவங்கும் நோக்கோடு காஷ் படேல் செயல்படுவார் என அவர்கள் சொல்கிறார்கள்.
2023-ல் வெளியிடப்பட்ட ‘கவர்ன்மெண்ட் கேங்ஸ்டர்ஸ்’ என்ற தனது புத்தகத்தில், ”அரசின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்ட எஃப்பிஐயில் உள்ள மூத்த அதிகாரிகளை நீக்கவேண்டும்” என காஷ் படேல் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
டொனால்ட் டிரம்பிற்கு நெருக்கமாவது எப்படி?
எஃப்பிஐயின் இயக்குநர், 55 அலுவலகங்களில் பணியாற்றும் 37,000 ஊழியர்களுக்கு தலைமை தாங்குகிறார். இவை தவிர செயற்கைக்கோள் மூலம் இணைக்கப்பட்ட 350 அலுவலகங்கள், மற்றும் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கண்காணிக்க வெளிநாடுகளில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட அலுவலகங்களையும் அவர் கட்டுப்படுத்துகிறார்.
டிரம்ப் முதல் முறை அதிபராக பதவி வகித்தபோது அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உளவுக் குழுவின் மூத்த வழக்கறிஞராக 2017-ல் நியமிக்கப்பட்டபோது காஷ் படேல் முதல்முறையாக டிரம்பின் கவனத்திற்கு வந்தார்.
2019-ல் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத எதிர்ப்புக்கு மூத்த இயக்குநராக நியமிக்கப்பட்ட பின் அவர் டிரம்புடன் நெருக்கமானார். 2020-ல் அவர் அமெரிக்க பாதுகாப்பு துறையின் தலைமைப் பதவியான சீஃப் ஆஃப் ஸ்டாப் டு தி பெண்டகன் என்ற பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.
டிரம்பின் சமூக வலைதளமான ட்ரூத் சோசியலை நடத்தும் டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி குரூப் நிறுவனத்தில் காஷ் படேல் இயக்குநராக உள்ளார்.
எஃப்பிஐயின் தலைமைப் பொறுப்பிற்கு படேலின் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு பிறகு, டிரம்ப் சமூக வலைதளத்தில் காஷ் படேலை “உண்மை,பொறுப்பேற்பு மற்றும் அரசமைப்பின் ஆதரவாளர்” என பாராட்டியிருந்தார்.
“காஷ் ஒரு சிறந்த அரசு வழக்கறிஞர், ஆய்வாளர், மற்றும் அமெரிக்காவை முன்னிலைபடுத்தும் வீரர், அவர் தனது பதவிக் காலத்தை ஊழலை வெளிப்படுத்தவும், நியாயத்திற்கு குரல்கொடுக்கவும், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் செலவிட்டவர்,” என டிரம்ப் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஜனநாயக கட்சி காஷ் மீது சந்தேகம் கொள்வது ஏன்?
நீண்ட காலமாக தாம் விம்ர்சித்து வந்த எஃப்பிஐயை புதிதாக மாற்றியமைக்கப் போவதாக அதன் புதிய இயக்குநர் காஷ் படேல் சூளுரைத்துள்ளார்.
டிரம்பின் எதிரிகளை அவர்கள் பழிவாங்குவார்கள் என ஜனநாயக கட்சி எச்சரித்திருந்தது. இருப்பினும், அரசியல் பழிவாங்கும் திட்டம் எதுவும் இல்லை என காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
பதவி நியமன உறுதிக்காக நடத்தப்பட்ட விசாரணையின் போது 44 வயதான காஷ் படேல், “டீப் ஸ்டேட்” எதிரிகள் பட்டியல் இருப்பதாக கூறப்படுவதை மறுத்தார். டொனால்ட் டிரம்ப் குறித்து விசாரிக்கும் சட்ட அதிகாரிகளை “குற்றவியல் குண்டர்கள்,” அழைத்தது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஜனநாயக கட்சியின் அனைத்து செனேட்டர்களும், குடியரசுக் கட்சியின் இரண்டு செனேட்டர்களான மெய்னை சேர்ந்த சூசன் காலின்ஸ் மற்றும் அலாஸ்காவை சேர்த்ந லிசா முர்கோவ்ஸ்கி ஆகியோரும் படேலுக்கு எதிராக வாக்களித்தனர்.
செனட்டால் பதவி நியமனம் உறுதிசெய்யப்பட்ட பின்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட படேல், “எஃப்பிஐயின் ஒன்பதாவது இயக்குநராக உறுதி செய்யப்பட்டது பெரிய கெளரவம்,” என்றார்.
“இயக்குநராக எனது பணி தெளிவாக இருக்கிறது: நல்ல காவல்துறையினரை காவல்துறையினராக செயல்பட அனுமதிப்பதும், எஃப்பிஐ மீது மக்கள் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவது”
“அமெரிக்க மக்கள் பெருமைகொள்ளக்கூடிய வகையில் எஃப்பிஐயை மீண்டும் கட்டமைப்போம்,” என அவர் தெரிவித்தார்.
படேலின் நியமனம் எஃப்பிஐக்கு நீண்டகாலமாக தேவைப்பட்ட மாற்றம் என குடியரசுக் கட்சியினர் பலர் நம்புகின்றனர்.
ஆனால் படேல் தீவிர வலதுசாரி கொள்கை ஆதரவாளர் என்றும், சட்ட அமலாக்கத்தில் போதிய அனுபவம் இல்லாதவர் எனவும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒரு சுதந்திரமான துறைக்கு தலைமை தாங்குவதை விட டிரம்புக்கு விசுவாசமாக இருப்பதை விரும்பக்கூடியவர் காஷ் படேல் என ஜனநாயக கட்சி நம்புகிறது.
பட மூலாதாரம், Getty Images
காஷ் படேல் யார்?
காஷ் படேல், இந்திய குடியேறியின் மகன். அவர் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்ததாகவும், அவரது தந்தை அமெரிக்க விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்ததாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இவரது முழுப் பெயர் காஷ்யப் பிரமோத் படேல்.
காஷ் படேல் நியூயார்க் நகரை பூர்வீகமாக கொண்டவர் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அவர் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இதற்குப் பிறகு, அவர் நியூயார்க்கிற்கே திரும்பி சென்று அங்கு சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார்.
அவர் தனது தொழில்முறை வாழ்க்கையை ஒரு வழக்கறிஞராக தொடங்கினார். கொலை வழக்கு, போதைப்பொருள் கடத்தல் முதல் சிக்கலான பொருளாதார குற்ற வழக்குகள் வரை பல வழக்குகளில் அவர் வாதிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இணைவதற்கு முன்பாக, உளவு தொடர்பான நிரந்தர தேர்வு குழுவிற்கு அவர் மூத்த வழக்கறிஞராக பணியாற்றினார்.
காஷ் படேல் உளவு குழு மற்றும் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைகளின் பல நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியுள்ளார்.
உலகம் முழுவம் உளவு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பல பில்லியன் டாலர் நிதி கிடைக்க உதவிய சட்டங்களை நிறைவேற்றவும் அவர் உதவியுள்ளார்.
பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் பல பெரிய நடவடிக்கைகளில் படேல் ஒரு முக்கியமான பங்காற்றினார்.
படேலின் காலத்தில்தான், ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி, அல்கொய்தாவின் காசிம் அல்ரிமி ஆகியோர் கொல்லப்பட்டு, அமெரிக்க பணய கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.