(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த 205 பேர் அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் இன்று மதியம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைய உள்ளனர்.
பிபிசிக்கு செய்திகளை வழங்கிவரும் ரவீந்தர் சிங் ராபின் கூறுகையில், இதையொட்டி விமான நிலையத்தின் உள்ளே ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், எனினும் விமான நிலையத்தின் வெளியே இந்தியா வந்தடைந்தவர்களிடம் பேச முடியும் என்றும் கூறினார்.
நாடு கடத்தப்படும் 205 இந்தியர்கள்
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின், இவ்வாறு இந்திய சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது இதுவே முதன்முறை.
இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை புறப்பட்ட விமானம், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அமெரிக்க அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்திருந்தார்.
பஞ்சாப் புலம்பெயர் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பான கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார்.
இது மிகவும் தீவிரமான விவகாரம் என்று அவர் குறிப்பிட்டார். அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் 205 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வந்து இறங்குவார்கள் என்றும் தான் அங்கு நேரில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பஞ்சாப் காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் ஊடகத்திடம் கூறுகையில், மாநில முதலமைச்சர் பகவத் சிங் மான் உடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் இந்தியர்கள் பஞ்சாப் அரசாங்கத்தால் சிறந்த முறையில் வரவேற்கப்படுவர் என்றும் கூறினார்.
பிபிசிக்காக செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின், இந்தியா வருபவர்களுள் சிலர் தங்களுடைய கிராமங்களுக்கு காவல்துறை வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.
பஞ்சாப் அரசு மற்றும் காவல்துறை கூறுவது என்ன?
பஞ்சாப் மாநில அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது மிகவும் தீவிரமான விவகாரம் எனக் கூறியுள்ளார். இதை மத்திய அரசும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பஞ்சாபின் புலம்பெயர் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சரான தலிவால், அமெரிக்காவின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இந்தியர்கள் பலரும் பணி அனுமதி பெற்றே அமெரிக்கா சென்றதாகவும், ஆனால் பின்னர் அது காலாவதியாகிவிட்டதாகவும், அதனாலேயே அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்ற பிரிவின்கீழ் வந்ததாகவும் கூறினார்.
இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளதாகவும் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்குப் பதிலாக அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தலிவால், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை அடுத்த வாரம் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாகச் செல்ல வேண்டாம் என்று பஞ்சாப் மாநில மக்களை தலிவால் கேட்டுக் கொண்டார்.
பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறுகையில், “இதுதொடர்பாக, நாங்கள் மத்திய அரசுடன் தொடர்பில் உள்ளோம். இது குறித்த மேலதிக தகவல்கள் வந்தவுடன் அவற்றைப் பகிர்வோம்” என்றார்.
“இந்தியா வருபவர்களின் அடையாளம் குறித்த எந்த விவரங்களும் தெரிய வரவில்லை. மத்திய அரசின் முகமைகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்.”
மேலும் அவர் கூறுகையில், “உறுதி செய்யப்படாத பல தகவல்கள் உள்ளன. பெருமளவிலான மக்கள் இங்கு வருவதாகவும் கூறப்படுகிறது.”
ராணுவப் பயன்பாடு
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப ராணுவம் பயன்படுத்தப்படுவது மிகவும் அரிதானது. ஆனால், டிரம்பின் இரண்டாவது ஆட்சியில் சட்டவிரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்ப ராணுவம் பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் ராணுவ அலுவலகத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அதேநேரம், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகளைத் திருப்பி அனுப்புவதற்கும் ராணுவம் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, அமெரிக்கா குடிவரவுத் துறைதான் சட்ட விரோத குடியேறிகளை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்.
ஆனால், ராணுவம் மூலம் இந்தப் பணியை மேற்கொள்வது செலவு மிகுந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் குவாட்டமாலாவுக்கு சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்க ராணுவம் திருப்பி அனுப்பியது. இதனால், ஒரு நபருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சம் வரை செலவானது.
டிரம்பின் கவலையும் இந்தியாவின் பதிலும்
பிரதமர் மோதியுடன் கடந்த வாரம் தொலைபேசியில் பேசிய டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவு துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ, அமெரிக்காவில் வாழ்ந்துவரும் சட்டவிரோத இந்திய குடியேறிகள் குறித்து கவலை தெரிவித்தனர்.
இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், “அமெரிக்காவில் ஆவணங்களின்றி வசிக்கும் இந்தியர்கள் குறித்து இந்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என தாங்கள் நம்புவதாக” தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் மோதி அமெரிக்காவுக்கு வருகை தருவார் எனவும் டிரம்ப் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு துறை செயலாளரும் இவ்விவகாரம் குறித்து, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் எழுப்பினார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய எஸ் ஜெய்சங்கர், “சட்டவிரோதமாக புலம்பெயர்வதை இந்தியா எப்போதும் ஆதரிக்காது. இத்தகைய குடியேற்றம் பலவித சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் புகழுக்கு நல்லதல்ல. அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை இந்தியாவுக்கு சட்டபூர்வமாக அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்.” என்றார்.
குடியேற்றம் தொடர்பான டிரம்பின் உத்தரவுகள்
டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக குடியேற்ற விவகாரம் இருந்து வந்தது. “குடியேற்ற விதிகளை கடுமையாக்குவோம், ‘மெக்சிகோவிலேயே இருங்கள்’ என்ற தனது முந்தைய ஆட்சியில் அமல்படுத்திய கொள்கையை நடைமுறைப்படுத்துவோம், எல்லையில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்” என்பன டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன.
டிரம்ப் அதிபரான முதல் நாளில் கையெழுத்திட்ட உத்தரவுகளில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட உத்தரவுகள் முக்கியமானவை. “அமெரிக்க வரலாற்றில் நாட்டைவிட்டு பெருமளவில் நிகழ்த்தப்படும் வெள்யேற்றத் திட்டத்தை” அதிபராகத் தனது முதல் நாளிலேயே தொடங்கப் போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாக அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவதற்கு எதிராகவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க அகதிகள் மறுகுடியமர்த்தல் திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
எல்லையை மூடும்படி ராணுவத்திற்கு உத்தரவிட்ட டிரம்ப், சட்டவிரோத போதைப் பொருட்கள், மனிதக் கடத்தல், எல்லையைக் கடக்கும் குற்றங்கள் உள்ளிட்டவற்றை அதற்கு காரணமாகக் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் சர்வதேச சட்டவிரோத கும்பல்களை அந்நிய பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
‘மெக்சிகோவிலேயே இருங்கள்’ என்ற தனது கொள்கையை முதல் நாளிலேயே ஒரு செயல் உத்தரவு மூலம் டிரம்ப் அமல்படுத்தினார்.
அவரது முதல் ஆட்சிக்காலத்தின் நடவடிக்கைகளில் ஒன்றான இதன் மூலம், எல்லைக்கு வெளியே தஞ்சம் கேட்கத் தங்களது முறைக்காக காத்திருந்த சுமார் 70,000 மெக்சிகோவை சேராதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கொலம்பியா நாட்டவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது.
அமெரிக்க ராணுவ விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்காத அந்நாட்டின் அதிபர், தங்கள் நாட்டு குடிமக்களை ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கக்கூடாது எனவும், தன்னுடைய விமானத்தையே அவர்களுக்காக அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
வரி விதிப்பு குறித்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் ராணுவ விமானங்கள் மூலம் குடியேறிகளை ஏற்றுக்கொள்ள கொலம்பியா ஒப்புக்கொண்டது. அதற்கு அடுத்த முறை, கொலம்பியா தனது விமானப் படையின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டவரை திருப்பி அழைத்து வந்தது.
ராய்ட்டர்ஸ் முகமையின் செய்திப்படி, கொலம்பியா தவிர்த்து, குவாட்டமாலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய இடங்களுக்கு அமெரிக்க ராணுவ விமானம் சட்டவிரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்பியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு