பட மூலாதாரம், Getty Images
நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஐபோன்களிலும் கலிஃபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
நேர்த்தியான செவ்வக வடிவில் உள்ள இந்த செல்போன்கள் இன்று பலரின் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிறது.
இவை அமெரிக்காவில் வடிவமைக்கப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சீனாவில் இவை தயாரிக்கப்படுகிறது.
இதே சீனாவுக்கு எதிராகத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிவிதிப்பு தாக்குதல்களைத் தொடுத்துள்ளார்.
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு 245 சதவிகிதம் வரை அமெரிக்கா வரி விதிக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 22 கோடிக்கும் (220 மில்லியன்) அதிகமான ஐபோன்களை விற்பனை செய்கிறது. இவற்றில் உத்தேசமாக 10ல் ஒன்பது போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
பேட்டரி முதல் திரை வரை ஆப்பிளின் உதிரிபாகங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது மற்றும் பெறப்படுகிறது. பின்னர் அவை ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகளான ஐபோன்கள், ஐபாட்கள், மேக் புக்-ஆக ஒன்றிணைக்கப்படுகின்றன.
ஆப்பிளின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்மார்ட் போன்கள், கணினிகள் மற்றும் சில மின்னணு சாதனங்களுக்கு வரி விதிப்பிலிருந்து கடந்த வாரம் டிரம்ப் விலக்கு அளித்தார்.
ஆனால் இந்த நிவாரணம் தற்காலிகமானதுதான்.
மேலும் சில வரிவிதிப்புகள் வர உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
தமது சமூக வலைத்தள பக்கமான ட்ரூத் சோஷியலில் ,”யாரும் பிடியிலிருந்து தப்ப முடியாது” என எழுதியுள்ள அவர் “செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக் விநியோகச் சங்கிலி” குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலியை ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய வலிமையாக கூறி வந்த நிலையில், அதுவே தற்போது பலவீனமாக மாறியுள்ளது.
உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குபவை. ஆனால் டிரம்ப்பின் வரிவிதிப்பு அறிவிப்புகள் இந்த உறவை ஒரே இரவில் தலைகீழாக மாற்றி விட்டன.
எனவே இது “இருவரில் அதிகம் சார்ந்திருப்பது யார்?” என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஒரு உயிர்காக்கும் இணைப்பு அச்சுறுத்தலாக மாறியது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்களின் பொருட்களை ஒருங்கிணைக்கும் (அசெம்பிள்) பணிகளை செய்வதன் மூலம் சீனா பெரிய அளவில் பலனடைகிறது.
தரமான தயாரிப்புகளை செய்வதற்கான ஆற்றல் தங்களுக்கு உள்ளது என இதன் மூலம் மேற்குலக நாடுகளுக்கு சீனா தன்னை முன்னிலைப்படுத்தியது. மேலும் உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதிகரிக்கவும் இது உதவியது.
1990களில் மூன்றாம் தரப்பு விநியோகஸ்தர் மூலம் கணினிகளை விற்க ஆப்பிள் நிறுவனமானது சீனாவிற்குள் நுழைந்தது.
1997ம் ஆண்டில், சக போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் திவாலாகும் நிலையில் இருந்த ஆப்பிள் நிறுவனம், இதற்கான உயிர்காக்கும் வழியை சீனாவில் கண்டுபிடித்தது.
இளம் பொருளாதார நாடாக இருந்த சீனா, வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளைத் திறந்து வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தனது சந்தையைத் திறந்தது.
ஆனாலும் 2001ம் ஆண்டு வரையிலும் ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சீனாவுக்குள் நுழையவில்லை.
ஷாங்காயை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக நிறுவனம் மூலமாக சீனாவில் பொருட்களின் உற்பத்தியைத் தொடங்கியது. சீனாவில் இயங்கிய தாய்வானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ஐபாட்கள், ஐமேக் மேலும் இதனைத் தொடர்ந்து ஐபோன்களையும் சீனாவில் தயாரிக்கத் தொடங்கியது.
உலக நாடுகளுடன் பெய்ஜிங் வர்த்தகத்தை சீனா தொடங்கியது முதலே அமெரிக்காவின் ஊக்குவிப்பு எந்த விதத்திலும் குறைவானதாக இல்லை.
உலக நாடகளின் தொழிற்சாலையாக மாறிக்கொண்டிருந்த சீனாவில் ஆப்பிள் தனது கால்தடங்களை பதித்துக் கொண்டிருந்தது.
அந்நாட்களில் சீனா ஐ போன் தயாரிப்பை பிரதானமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், ஆப்பிள் தான் வளர்த்தெடுத்த விநியோகஸ்தர்களை ”உற்பத்திக்கான உச்ச நட்சத்திரங்களாக” வளர உதவியது என்கிறார் விநியோகச் சங்கிலி நிபுணர் லின் ஜூபிங் கூறுகிறார்.
லின், பெய்ஜிங் ஜிங்டியாவோவை உதாரணமாகக் குறிப்பிடுகிறார். தற்போது அதிவேகமாக துல்லிய பணிகளை மேற்கொள்ளும் இயந்திரங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமாகிய இது, அதிக செயல்திறனுடன் கூடிய மேம்பட்ட தொழில்நுட்ப கூறுகளை தயாரித்தது.
தொடக்கத்தில் அக்ரிலிக் (பிளாஸ்டிக் போன்றது) வெட்டும் ஒரு சாதாரண நிறுவனமாக இருந்த இந்நிறுவனம், இயந்திர உற்பத்தியாளராகக் கருதப்படவில்லை.
ஆனால் பின்னர், கண்ணாடி வெட்டும் இயந்திரங்களை உருவாக்கி, “ஆப்பிள் நிறுவன மொபைல் ஃபோன்களின் மேற்பகுதியை மேம்படுத்தும் துறையில் முக்கிய நட்சத்திரமாக” உருவெடுத்தது என்கிறார்.
2008ஆம் ஆண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அதே ஆண்டில், ஆப்பிள் தனது முதல் கடையை அந்நகரில் திறந்தது. அப்போது சீனாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே வலிமையான உறவு இருந்தது.
அதன்பிறகு, 50 கடைகளை திறந்து இந்நிறுவனம் வேகமாக வளர்ச்சியடைந்தது.
வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தின் பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
ஆப்பிளின் லாப வரம்புகள் அதிகரித்ததுடன், சீனாவில் அதன் உற்பத்தி நிறுவனங்களும் (அசெம்பிளி) விரிவடைந்தன.
ஃபாக்ஸ்கான் நிறுவனம், உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையை ஜெங்ஜோவிலில் இயக்கி வருகிறது. இது தற்போது “ஐபோன் நகரம்” என அழைக்கப்படுகிறது.
வேகமாக வளர்ந்துவரும் சீனாவிற்கு, எளிமையான, ஆனால் தனித்துவமுடைய மற்றும் நேர்த்தியான தோற்றமுடைய மேம்பட்ட மேற்கத்திய தொழில்நுட்பத்தின் அடையாளமாக ஆப்பிள் மாறியது.
இன்று, ஆப்பிளின் மதிப்புமிக்க ஐபோன்களில் பெரும்பாலானவை ஃபாக்ஸ்கான் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
அவற்றை இயக்கும் மேம்பட்ட சிப்கள், உலகின் மிகப்பெரிய சிப் உற்பத்தியாளரான டிஎஸ்எம்சியால் தாய்வானில் தயாரிக்கப்படுகின்றன.
நிகேஆசியா மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, 2024ஆம் ஆண்டில் ஆப்பிளின் முக்கியமான 187 விநியோகஸ்தர்களில் சுமார் 150 பேர் சீனாவில் தொழிற்சாலைகள் வைத்திருந்தனர்.
“எங்களுக்கு உலகம் முழுவதும் சீனாவைப் போன்ற முக்கியமான விநியோகச் சங்கிலி எதுவும் இல்லை” என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
வரி அச்சுறுத்தல் – கற்பனையா அல்லது லட்சியமா?
டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், சீனாவின் மீது அவர் விதித்த இறக்குமதி வரிகளில் இருந்து ஆப்பிள் விலக்குகளைப் பெற்றது.
ஆனால் இந்த முறை, சில எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரிகளை மாற்றுவதற்கு முன்பு, டிரம்பின் நிர்வாகம் ஆப்பிள் நிறுவனத்தை ஒரு உதாரணமாக உருவாக்கியுள்ளது.
அதிக வரிகளை விதிப்போம் என்ற அச்சுறுத்தலால், நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே பொருட்களை உருவாக்கத் தொடங்கும் என்று டிரம்பின் நிர்வாகம் நம்புகிறது.
“மில்லியன் கணக்கான மக்கள் ஐபோன்களை உருவாக்க உழைக்கிறார்கள். அந்த வகையான உற்பத்தி அமெரிக்காவிற்கு வரப்போகிறது” என்று வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் இந்த மாத தொடக்கத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.
“செமிகண்டக்டர்கள், சிப்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற முக்கியமான தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்கா சீனாவை நம்ப கூடாது என்பதை அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்”என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கடந்த வாரம் மீண்டும் கூறினார்.
மேலும் “அதிபரின் வழிகாட்டுதலின் பேரில், இந்த நிறுவனங்கள் விரைவில் அமெரிக்காவில் தங்கள் உற்பத்தியை மாற்றுவதில் மும்முரமாக உள்ளன.”என்றும் கூறினார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு