பட மூலாதாரம், Getty Images / BBC
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
தென் கொரியாவில் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் போது டிரம்ப் மற்றும் ஜின்பிங் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்புக்கு நீண்ட காலமாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் காரணமாக அது ஏறக்குறைய ரத்து செய்யப்படும் நிலையில் இருந்தது.
இந்த மாத தொடக்கத்தில், தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.
பட மூலாதாரம், Getty Images
சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்கு பதிலடியாக, நவம்பர் முதல் அனைத்து சீனப் பொருட்களுக்கும் 100 சதவீத வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார்.
இதன் பின்னர், இரு நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டில் கடுமையைக் குறைத்து பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை பரிசீலனை செய்தன.
இருப்பினும், சந்தையில் பதற்றம் அதிகரிப்பதற்கும் உறுதியற்ற தன்மையை உருவாக்குவதற்கும் எதிர் தரப்பே காரணம் என இரு தரப்பும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி வருகின்றன.
வரிகள் முதல் அரிய தாதுக்கள் வரை “சீனாவுடனான அனைத்தையும் கையாள்வேன்” என்று டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் டிரம்ப் தொடங்கிய வரிப் போருக்கான பதிலடியை, இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாக சீனா கொடுத்து வருவதால், அவர் சீனாவை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம்.
பட மூலாதாரம், Reuters
“இரு நாடுகளுமே எதிர்தரப்பைவிட தனக்கு வலியைத் தாங்கும் திறன் அதிகம் என்று நம்புகின்றன” என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் இணைப் பேராசிரியர் சோங் ஜா ஈன் கூறுகிறார். “ஒருவேளை அது பேச்சுவார்த்தை செயல்முறையின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.”
“ஆதிக்கச் சோதனை” என்பது டிரம்பின் உத்திகளில் ஒன்று என சோங் ஜா ஈன் கூறுகிறார். அமெரிக்காவின் அழுத்தத்திற்கு சீனா அடிபணிந்தால், அது எதிர்வரும் மாதங்களில் அமெரிக்க-சீன உறவுகளின் போக்கை தீர்மானிக்கக் கூடும்.
இருப்பினும், சீனா அடிபணிவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
“சீனாவில் தொடர்ந்து 13-வது ஆண்டாக ஆட்சியில் இருக்கும் ஜின்பிங், டிரம்புடனான இருதரப்பு உச்சிமாநாடு மூலம் தான், தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என சோங் ஜா ஈன் கூறுகிறார்.
அரிய தாதுக்களைத் தவிர, அமெரிக்க சோயாபீன் துறையையும் சீனா குறிவைத்துள்ளது. அமெரிக்க விவசாயிகள் டிரம்பின் முக்கிய ஆதரவாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2018 நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்த செப்டம்பர் மாதத்தில், அமெரிக்காவில் இருந்து சோயாபீன் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திவிட்ட சீனா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து இறக்குமதியை அதிகரித்துவிட்டது.
உலகின் மிகப்பெரிய சோயாபீன்ஸ் இறக்குமதியாளராக சீனா உள்ளது. சீனாவில் கால்நடை தீவனத்திற்காக சோயாபீன்ஸ் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவின் பதிலடி நடவடிக்கைகளை சீனாவால் தாங்க முடியுமா?
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், சீனாவின் நிலை பலவீனமடையக் கூடும். ஏனென்றால் அமெரிக்க இறக்குமதியாளர்கள் சீனாவிற்கு பதிலாக மாற்று சப்ளையர்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கான தேடலைத் தீவிரப்படுத்துவார்கள்.
இதற்கு உதாரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களின் உற்பத்தியில் பெரும்பகுதியை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றப் போவதாகக் அறிவித்தது. ஜூன் மாதத்தில், நைக் நிறுவனம் தனது சில உற்பத்தி மையங்களை சீனாவிலிருந்து மாற்ற திட்டமிட்டிருப்பதாகக் கூறியது.
அமெரிக்க வரிகளுக்கு எதிராக சீனா “நிரந்தர எதிர்ப்பு சக்தியை” உருவாக்கியுள்ளது என்று கருதுவது “புத்திசாலித்தனமாக இருக்காது”. அமெரிக்க டாலரைத் தவிர பிற நாணயங்களுக்கு எதிராக சீன நாணயம் (யுவான்) பலவீனமாக இருப்பதால் சீனா ஏற்றுமதி சந்தையில் போட்டித்தன்மையுடன் உள்ளது என எவன்ஸ்-பிரிட்சார்ட் கூறுகிறார்.
உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கவும், ரியல் எஸ்டேட் நெருக்கடியிலிருந்து மீளவும் சீனா போராடி வரும் நிலையில் ஏற்றுமதியே, சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாக உள்ளன.
டிரம்பை மதிப்பிடுவதில் சீனாவும் தவறு செய்யக்கூடும் என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் பதிலடி கொடுக்கும் திறனை குறைத்து மதிப்பிடும் “ஆபத்தான பழக்கத்தை” சீனா உருவாக்கியுள்ளது என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான ஸ்டிம்சன் மையத்தின் சன் யூன் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தகப் பேராசிரியர் நாய்ஸ் மெக்டோனாவின் கூற்றுப்படி, சீனாவின் தொழில்நுட்பத் துறையை குறிவைத்து அதன் மீது புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிக்கக்கூடும்.
உதாரணமாக, சீனா என்விடியாவின் மிகவும் மேம்பட்ட சிப்-களை வாங்குவதற்கு அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்துள்ளது.
இருப்பினும், தொழில்நுட்பத் துறையை அமெரிக்கா குறிவைப்பது சீனாவின் வளர்ச்சியைக் குறைக்கக் கூடும் என்றாலும், அது “அதை முற்றிலுமாக நிறுத்தாது” என்று பேராசிரியர் மெக்டோனா கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
முதலில் தலைவணங்கப் போவது யார்?
சந்தை எதிர்வினையாற்றும் விதத்தைப் பார்த்து, டிரம்ப் தனது நிலைப்பாட்டை மிதமாக்க வேண்டியிருந்தது என சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அக்டோபர் 10-ஆம் தேதி சீனாவின் அரிய வகை தாதுக்கள் தொடர்பான அறிவிப்புக்கு டிரம்ப் அளித்த கடுமையான எதிர்வினைக்குப் பிறகு அமெரிக்க பங்குச் சந்தை 2 டிரில்லியன் டாலர்களை இழந்தது.
சீனாவின் கொள்கைகள் சந்தை உணர்வால் அரிதாகவே பாதிக்கப்படுகின்றன என்றாலும், நாட்டின் முடிவெடுக்கும் கருவி மிகவும் மையப்படுத்தப்பட்டதாகும். சமீபத்திய தசாப்தங்களில் மிகவும் சக்திவாய்ந்த சீனத் தலைவராக ஜின்பிங் கருதப்படுகிறார்.
சில ஆய்வாளர்கள், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்கு சீனா முழுமையாகத் தயாராக உள்ளது என நம்புகின்றனர். டிரம்பின் பாணி மற்றும் உத்தி – கட்டணங்கள், தொழில்நுட்பப் போர்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயைக் கையாளுதல் – பற்றிய அதன் நீண்டகால ஆய்வின் அடிப்படையில் அது ஒரு “கடினமான விளையாட்டை” விளையாடுகிறது.
அமெரிக்க சிந்தனைக் குழுவான ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான ரியான் ஹாஸின் கூற்றுப்படி, “மாணவராக இருந்த சீனா இப்போது பேராசிரியராக” மாறிவிட்டது. அவரைப் பொறுத்தவரை, ஜின்பிங் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சீனா “எதிர் தாக்குதல்களில்” (தேவைப்படும்போது மட்டும் பதிலளிப்பது) இருந்து “சந்தர்ப்பவாத நடவடிக்கைக்கு”, அதாவது வாய்ப்பு கிடைக்கும்போது முன்முயற்சி எடுக்கும் ஒரு உத்திக்கு மாறியுள்ளது.
இந்த மாற்றம் சீனாவின் வளர்ந்து வரும் சக்தியுடன் இணைத்து பார்க்கப்படுகிறது. டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் தொடங்கிய அமெரிக்க-சீனா வர்த்தகப் போர், ஜின்பிங்கின் “தற்சார்பு கொண்ட சீனா” என்ற கொள்கையை மேலும் வலுவாக்கியது.
அப்போதிருந்தே, உள்நாட்டு தேசியவாதத்தை வலுப்படுத்தவும் அமெரிக்க சந்தையைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவுமே வர்த்தகப் போரை சீனத் தலைமை பயன்படுத்தி வருகிறது.
இதுவே, தனது விநியோகச் சங்கிலியை மூலோபாய ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கான நம்பிக்கையை சீனாவிற்கு அளித்துள்ளது. அரிய தாது விநியோகங்களைத் தடுக்கும் முடிவை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இருப்பினும், அமெரிக்க சிந்தனைக் குழுவான பசிபிக் மன்றத்தின் பேராசிரியர் எலிசபெத் லாரஸ், சீனத் தலைவர்கள் டிரம்பின் ஆணவத்தையும் பலவீனங்களையும் உணர்ந்துள்ளதாக எச்சரிக்கிறார்.
“தனது பொறுமையைச் சோதிக்காத வரை, வலிமையான தலைவர்களுடன் டிரம்பிற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அது நடக்கும்போது, அவர் பதிலடி கொடுப்பார். சீனத் தலைவர்கள் டிரம்பின் இந்தப் பண்பைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்று அவர் கூறுகிறார்.
டிரம்பின் “அவசர முடிவெடுக்கும் போக்கைப்” பற்றி சீனா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் லாரஸ் கூறுகிறார். வெள்ளை மாளிகையின் துணைத் தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர், வலதுசாரி ஆர்வலர் லாரா லூமர் போன்ற டிரம்ப் ஆலோசகர்களின் செல்வாக்கு குறித்தும் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கிறார்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் டிரம்புக்கும் ஜின்பிங்கிற்கும் இடையே சமரசம் ஏற்படலாம், ஆனால் இரு நாடுகளும் தங்கள் அடிப்படை வேறுபாடுகளை விரைவில் தீர்க்க முடியும் என்பது சாத்தியமில்லை.
கூடுதல் தகவல்கள் – கிரேஸ் சோய் மற்றும் அலெக்ஸாண்ட்ரா ஃபோஸ்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு