டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு திரும்புவது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் சில பகுதிகளில் போர் மற்றும் நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் சூழலில், இந்த தேர்தல் முடிவுகள் பல முனைகளில் தீவிர மாற்றங்களுக்கு உறுதியளிக்கிறது.
டிரம்ப் தனது பரப்புரையின் போது பரந்த கொள்கை உறுதிமொழிகளை முன்வைத்தார். ஆனால் அவை பெரும்பாலும் ஆழமான விவரங்கள் இல்லாமல் இருந்தன. அவை அனைத்துமே சர்வதேச விவகாரங்களில் தலையீடு இல்லாமை மற்றும் அமெரிக்க வர்த்தகப் பாதுகாப்பு கொள்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்காவை முன்னிலைப்படுத்தி (America First) இருந்தது.
அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளில் பல ஆண்டுகளாக இருக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அவரது வெற்றி வெளியுறவு விவகாரங்களுக்கான அணுகுமுறையில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
பரப்புரையின் போது அவர் தெரிவித்த கருத்துகள் மற்றும் 2017 முதல் 2021 வரையிலான அவரது பதவிக் காலம் ஆகியவற்றில் இருந்து, அவரது அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடியும்.
ரஷ்யா, யுக்ரேன் மற்றும் நேட்டோ
பிரசாரத்தின் போது, ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரை “ஒரே நாளில்” முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று டிரம்ப் பலமுறை கூறினார். எப்படி என்று கேட்டபோது, அவர் ஒரு ஒப்பந்தத்தை குறிப்பிட்டார், ஆனால் அதன் விவரத்தை பகிர மறுத்துவிட்டார்.
மே மாதம் டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்புத் தலைவர்கள் இருவரால் எழுதப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், அமெரிக்கா யுக்ரேனுக்கு ஆயுத விநியோகத்தைத் தொடர வேண்டும், ஆனால் யுக்ரேன் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ரஷ்யாவை கவர, யுக்ரேன் நேட்டோவுக்குள் நுழைவதை தாமதப்படுத்த மேற்குலகம் உறுதியளிக்கும். டிரம்பின் முன்னாள் ஆலோசகர்கள், யுக்ரேன் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து அதன் முழுப் பகுதியையும் திரும்பப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது என்கின்றனர். ஆனால், தற்போதைய சூழலின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
டிரம்பை எதிர்க்கும் ஜனநாயகக் கட்சியினர், அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இணக்கமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அவரது அணுகுமுறை யுக்ரேன் சரணடைவதற்கு சமம் என்று கூறுகின்றனர். இது ஐரோப்பா முழுவதையும் ஆபத்தில் ஆழ்த்தும் என்பது அவர்களது கருத்து.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், அமெரிக்க வளங்கள் குறைவதை நிறுத்துவதும் தனது முதன்மையான நோக்கம் என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
முன்னாள் ஆலோசகர்களின் ஆய்வுக் கட்டுரை, டிரம்பின் சொந்த சிந்தனையை எவ்வளவு தூரம் பிரதிபலிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர் பெறப் போகும் ஆலோசனைளுக்கு இது வழிகாட்டியாக இருக்கும்.
நேட்டோ கூட்டமைப்பு என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனுக்கு எதிரான அரணாக அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடுகள் உதவிக்கு வர அவை ஒப்புக் கொண்டுள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது “அமெரிக்க நலனுக்கே முன்னுரிமை” அணுகுமுறையானது, நேட்டோவின் எதிர்காலம் பற்றிய மூலோபாய பிரச்னையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நேட்டோ தற்போது 30க்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்டுள்ளது. டிரம்ப் நீண்ட காலமாக இந்த கூட்டமைப்பில் சந்தேகம் கொண்டவராக இருந்து வருகிறார், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதை ஐரோப்பா தவறாகப் பயன்படுத்துகிறது என்று கூறும் டிரம்ப், இந்த கூட்டணி குறித்து நீண்ட காலமாக கேள்வி எழுப்பி வருகிறார்.
அட்லாண்டிக் கடல் கடந்த பாதுகாப்பு உறவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நேட்டோவில் இருந்து அவர் உண்மையிலேயே அமெரிக்காவை வெளியேற்றுவாரா என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளது.
அவரது ஆதரவு நாடுகளின் ஆலோசகர்கள் சிலரின் கூற்றுப்படி, அவரது கடுமையான நிலைப்பாடு, கூட்டணியின் பாதுகாப்பு பட்ஜெட் தேவைகளை கடைபிடிக்க உறுப்பினர்களை வற்புறுத்துவதில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் உண்மை என்னவெனில், நேட்டோ தலைவர்கள், நேட்டோ கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு டிரம்பின் வெற்றி எவ்வாறு பங்களிக்கும், எதிரி நாட்டு தலைவர்களால் அவரது வெற்றி எவ்வாறு உணரப்படுகிறது என்பதைப் பற்றி தீவிரமாக கவலைப்படுவார்கள்.
மத்திய கிழக்கு விவகாரம்
யுக்ரேனைப் போலவே, மத்திய கிழக்கிலும் “அமைதியை” கொண்டு வருவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார் . காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போரையும், லெபனானில் இஸ்ரேல்-ஹெஸ்பொலா போரையும் அவர் முடிவுக்குக் கொண்டுவருவதாக கூறியிருக்கிறார். ஆனால் எப்படி என்பதை கூறவில்லை.
தான் அதிகாரத்தில் இருந்திருந்தால் ஜோ பைடனை காட்டிலும் போரை நிறுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியும் என்று டிரம்ப் கூறுகிறார். ஹமாஸ் குழுவிற்கு நிதியளிக்கும் இரான் மீதான தனது “அதிகபட்ச அழுத்தம்” கொடுக்கும் கொள்கையின் காரணமாக, ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியிருக்காது என்றும் அவர் கூறினார்.
டிரம்ப்பின் முந்தைய ஆட்சி காலத்தில் இரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றும் கொள்கையை செயல்படுத்த முயற்சித்தார்.
இரானுக்கு எதிராக அதிக தடைகளை விதித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் தான் இரானின் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவத் தளபதியான ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். டிரம்ப் இதுபோன்ற நடவடிக்கைகளை மீண்டும் கையில் எடுக்கலாம்.
அதேபோன்று, வெள்ளை மாளிகையில் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஆதரவான கொள்கைகளை கடுமையாக இயற்றினார். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக பெயரிட்டு அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றினார். இது டிரம்பை ஆதரிக்கும் பழமைவாத கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தியது. குடியரசுக் கட்சிக்கு இவர்களின் வாக்குகள் மிகவும் முக்கியம்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “வெள்ளை மாளிகையில் இஸ்ரேலின் சிறந்த நண்பர்” என்று டிரம்பை குறிப்பிட்டு கூறினார். ஆனால் அவரது கொள்கை இப்பகுதியில் சீர்குலைக்கும் விளைவை ஏற்படுத்தியதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
பாலத்தீனர்களின் தேசிய மற்றும் மத வாழ்வின் வரலாற்று மையமாக விளங்கும் ஜெருசலேமுக்கான தங்கள் உரிமையை அமெரிக்கா கருத்தில் கொள்ளாததால், பாலத்தீனர்கள் டிரம்ப் நிர்வாகத்தை புறக்கணித்தனர்.
இஸ்ரேலுக்கும் பல அரபு முஸ்லிம் நாடுகளுக்கும் இடையிலான ராஜ தந்திர உறவுகளை சீராக்க ஒரு வரலாற்று ஒப்பந்தத்தை டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போது அவர்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டனர். இது “ஆபிரகாம் உடன்படிக்கை” என்று அழைக்கப்பட்டது.
பரப்புரையின் போது டிரம்ப் பல கருத்துகளை முன்வைத்தார். காஸா போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அவர் நெதன்யாகுவுடன் சிக்கலான உறவைக் கொண்டிருந்தார். ஆனால், நிச்சயமாக அவர் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் திறன் டிரம்புக்கு உள்ளது.
ஹமாஸுடன் தொடர்பு வைத்திருக்கும் முக்கிய அரபு நாடுகளில் உள்ள தலைவர்களுடனும் வலுவான உறவைப் பெற்ற வரலாறும் அவருக்கு உண்டு.
இஸ்ரேலிய தலைமைக்கு வலுவான ஆதரவைக் காட்ட வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு இடையே அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் அவரது கணிக்க முடியாத தன்மையை ஒரு ராஜதந்திர சொத்தாக சித்தரிக்கின்றனர். ஆனால், மிகவும் நிலையற்ற மத்திய கிழக்கில் ஏற்கனவே இருக்கும் நெருக்கடிக்கு மத்தியில், எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காஸா போர்நிறுத்தத்தைப் பெற பைடன் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட இராஜதந்திர செயல்முறையை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை டிரம்ப் தீர்மானிக்க வேண்டும்.
சீனா மற்றும் வர்த்தகம்
சீனாவுடனான அமெரிக்காவின் அணுகுமுறை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுக் கொள்கையாகப் பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கங்களைக் கொண்டுள்ளது.
டிரம்ப் பதவியில் இருந்த போது, சீனாவை “மூலோபாய போட்டியாளர்” என்று முத்திரை குத்தினார். அமெரிக்காவில் சில சீன இறக்குமதிகள் மீது வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களின் இறக்குமதிகளுக்கு கடுமையான வரிகளை விதித்தது.
வர்த்தக மோதலைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால், கோவிட் தொற்றுநோய் சூழல் உருவானதால் அதற்கான சாத்தியம் இல்லாமல் போய் விட்டது. கோவிட் தொற்றை ஒரு “சீன வைரஸ்” என்று டிரம்ப் அழைத்ததால், சீனா-அமெரிக்கா உறவுகள் மேலும் மோசமடைந்தன.
பைடன் நிர்வாகம் சீனாவிற்கான வெளியுறவு கொள்கைகளில் மிகவும் பொறுப்பான அணுகுமுறையை கையாள்வதாகக் கூறிக் கொண்டாலும், உண்மையில் இறக்குமதிகள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த பல வரிகளை பைடன் நிர்வாகமும் அப்படியே நடைமுறைப்படுத்தியது.
டிரம்ப் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை “புத்திசாலி” மற்றும் “ஆபத்தானவர்” என்றும், 1.4 பில்லியன் மக்களை “இரும்புக்கரம்” கொண்டு கட்டுப்படுத்தும் தலைவர் என்றும் புகழ்ந்துள்ளார்.
சீனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மற்ற பிராந்திய நாடுகளுடன் வலுவான அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மைகளை கட்டியெழுப்புவதற்கான பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறையை டிரம்ப் பின்பற்றாமல் போக வாய்ப்புள்ளது.
தன்னாட்சி செய்துகொள்ளும் தைவானுக்கான ராணுவ உதவியை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. சீனா தைவானை பிரிந்து சென்ற மாகாணமாகவே பார்க்கிறது.
டிரம்ப் அக்டோபரில் ஒரு உரையில், “நான் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினால், தைவான் மீதான சீனாவின் முற்றுகையைத் தடுக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனெனில், சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு தெரியும், அப்படி நடந்தால் நான் சீன இறக்குமதிகள் மீது கடுமையான வரிகளை விதிப்பேன்” என்று பேசினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு