அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு அவர் அதிபராக பதவியேற்றார்.
டிரம்பின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் “எதிர்காலம்” எப்படி இருக்கும் என்பதை டிரம்ப் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.
“அமெரிக்காவின் பொற்காலம் இன்று துவங்குகிறது. இனி நம் நாடு செழிப்பாகவும், மதிப்புக்குரியதாகவும் இருக்கும். நான் எப்போதும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுப்பேன் என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்” என்றார் அவர்.
டிரம்பின் முதல் உரையில் இடம்பெற்ற ஐந்து முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
“அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசரநிலை”
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக குடியேறுவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறிய பல லட்சக் கணக்கானவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கவுள்ளது என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும், “மெக்சிகோவிலேயே இருங்கள்” என்ற கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது மற்றும் எல்லையில் அதிக துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, விரைவில் மெக்சிகோ வளைகுடாவின் பெயர் ” அமெரிக்க வளைகுடா” என மாற்றப்படும் என்றார் டிரம்ப்.
பனாமா கால்வாய் – சீனாவை சாடும் டிரம்ப்
பனாமா கால்வாய் நிர்வாக உரிமையை பனாமா நாட்டிற்கு அமெரிக்கா வழங்கியது “ஒரு முட்டாள்தனமான பரிசு” என்று குறிப்பிட்ட டிரம்ப், “பனாமா கால்வாயை சீனா இயக்குகிறது” என்று கூறினார்.
அதை சீனாவிடம் நாங்கள் கொடுக்கவில்லை, திரும்பப் பெறுவோம் என்றும் தெரிவித்தார். அவர் இதை கூறிய போது, கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். முன்னாள் அதிபர் பைடனும் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸும் எந்த எதிர்வினையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
கடந்த மாதம், டிரம்ப், பனாமா கால்வாய்க்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது அதன் மீதான கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பனாமாவை வலியுறுத்தியிருந்தார்.
பனாமா கால்வாய் சீனாவுக்கானது அல்ல என்றும் இந்த கால்வாய் தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது என்று கூறியிருந்தார். ஆனால், இந்த கால்வாய் மீது சீனா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று பனாமா அதிபர் கூறுகிறார்.
“அமெரிக்க விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வார்கள்”
டிரம்ப், அமெரிக்காவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று பேசினார். அமெரிக்கா தனது செல்வத்தை பெருக்கும், தனது எல்லையை விரிவுபடுத்தும், செவ்வாய் கிரகத்தில் கொடியை நாட்டும் என்று அவர் உறுதிபூண்டார்.
“நாங்கள் நட்சத்திரங்களை அடைந்து செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கக் கொடியை ஏற்றுவோம்,” என்று அவர் கூறினார்.
மத்திய கிழக்கு விவகாரம் : டிரம்ப் கூறியது என்ன?
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் தலைவராக இருப்பேன் என்று டிரம்ப் தனது தொடக்க உரையில் கூறினார்.
காஸாவில் ஹமாஸிடம் பணய கைதிகளாக இருந்த மூன்று இஸ்ரேலியர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் குடும்பத்தினருடன் இணைந்ததை அவர் குறிப்பிட்டு பேசினார்.
“உலகின் மிகப் பெரிய, சக்திவாய்ந்த மற்றும் மதிப்புக்குரிய நாடாக அமெரிக்கா அதன் சரியான இடத்தை மீண்டும் பெறும். உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், அவர்கள் போற்றும் வகையிலும் மாறும்” என்று டிரம்ப் கூறினார்.
இரு பாலினங்கள் மட்டுமே
இன்று முதல் அமெரிக்க அரசு கொள்கையின் படி ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்கள் மட்டுமே இருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
பைடன் தலைமையிலான நிர்வாகம், புலம்பெயர்ந்தோர் நெருக்கடியைக் கையாண்ட விதத்தை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
பிபிசி ராஜதந்திர விவகார நிருபர் பால் ஆடம்ஸ் இந்த உரை உலகிற்கு டிரம்பின் தீர்க்கமான செய்தியை தெரிவிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
டிரம்பின் பேச்சு உலக அரங்கில் அமெரிக்காவின் பலம் மற்றும் சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டும் ஒரு வலுவான செய்தியை அளித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் டிரம்ப் பேசினார். கட்டணங்கள் குறித்தும் டிரம்ப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “மற்ற நாடுகளுக்கு வரி மற்றும் கட்டணங்கள் விதித்து நமது மக்களை பணக்காரர்களாக்குவோம்” என்று டிரம்ப் கூறுகிறார்.
பணவீக்கம் மற்றும் எரிசக்தி தேவைகள் அதிகரிப்பது குறித்தும் டிரம்ப் பேசினார். தேர்தல் பிரசாரத்தில் இவற்றை முக்கிய பிரச்னைகளாக அவர் முன்வைத்திருந்தார்.
பணவீக்கத்தை குறைக்கவும், செலவுகள் மற்றும் விலையை விரைவாகக் குறைக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தனது அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துவதாக அவர் கூறினார்.
டிரம்ப் “தேசிய எரிசக்தி அவசரநிலையை” அறிவிப்பதாகவும் கூறினார். தனது ஆட்சியில் அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை விரைவுபடுத்துவதற்கான வாக்குறுதியை அளித்தார்.
அமெரிக்கா மீண்டும் ‘பொருட்களின் உற்பத்தி மையமாக’ மாறும் என்றார்.
உலகிலேயே அதிக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம் உள்ளது, அதை முழுமையாக பயன்படுத்துவோம் என்று டிரம்ப் கூறினார். ‘டிரில் பேபி டிரில்’ என்ற கோஷத்தையும் முன் வைத்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு இனி வரும் காலங்களில் இந்தியாவையும் பாதிக்கும். எண்ணெய் நுகர்வில் உலக அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே உள்ளது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதில் பெரும் பகுதி அமெரிக்காவில் இருந்து வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு