பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவுடன் இணைந்து அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகத் தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.
இந்த “தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு” அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எரிபொருள் ஆதாரங்களில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஒப்பந்தம் தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. அணு ஆயுதம் தாங்கிய வட கொரியா மற்றும் மேற்கில் விரிவாக்கக் கொள்கையைக் கொண்ட சீனாவுடனான தென் கொரிய எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து வரும் ஒரு காலகட்டத்தில் இது வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே.
ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது என்ன?
அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் தலைவர்களும் கடந்த மாதம் பரஸ்பர வரிகள் 25%லிருந்து 15% ஆக குறைக்க ஒரு பரந்த வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் கொரியா மீது 25% வரியை விதித்திருந்தார். தென் கொரியா அமெரிக்காவில் 350 பில்லியன் டாலர் (265 பில்லியன் பவுண்ட்) முதலீடு செய்வதாகக் கூறிய பிறகு, தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கால் பேச்சுவார்த்தை மூலம் அதை 15% ஆக குறைக்க முடிந்தது. இதில் 200 பில்லியன் டாலர் பண முதலீடும் கட்டுமானத்தில் 150 பில்லியன் டாலர் முதலீடும் அடங்கும்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகை அறிக்கையில், “தென் கொரியா அணுசக்தி மூலம் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. [மற்றும்] எரிபொருள் ஆதாரங்களுக்கான வழிகள் உட்பட இந்தத் திட்டத்திற்கான தேவைகளை மேம்படுத்த நெருக்கமாகச் செயல்படும்” என்று அமெரிக்கா கூறியுள்ளது.
டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ‘ட்ரூத் சோஷியல்’-இல் வெளியிட்ட ஒரு முந்தைய பதிவில், இந்த கப்பல்கள் தென் கொரிய நிறுவனமான ஹன்வா (Hanwha) நடத்தும் பிலடெல்பியாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் என்று கூறியிருந்தார்.
தற்போது அணுசக்தி மூலம் இயங்கும் மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கும் நாடுகள் ஆறு மட்டுமே. அவை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இந்தியா.
தென் கொரியாவிடம் ஏற்கனவே சுமார் 20 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் டீசல் மூலம் இயக்கப்படுவதால், அடிக்கடி கடலின் மேற்பரப்புக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிக தொலைவு மற்றும் வேகத்தில் செயல்பட முடியும்.
“அவர்களிடம் இப்போது இருக்கும் பழைய பாணியிலான, வேகமற்ற டீசல் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பதிலாக, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளேன்,” என்று டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’-இல் எழுதினார்.
தென் கொரியா சிவிலியன் அணுசக்தித் துறையில் ஒரு முக்கியமான நாடாகத் திகழ்கிறது. இது 1970களில் அணு ஆயுதத் திட்டத்தைக் கொண்டிருந்தது, ஆனால் அமெரிக்க அழுத்தத்திற்குப் பிறகு அதைக் கைவிட்டது.
தென் கொரியா இறக்குமதியை முழுமையாகச் சார்ந்திருப்பதால், அதன் யுரேனியத்தைச் செறிவூட்டும் அல்லது மறுசுழற்சி செய்யும் திறன் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தென் கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை விரும்புவது ஏன்?
வட கொரியா சமீபத்தில் தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்ததற்கு பதிலடியாக, இந்த சமீபத்திய கப்பல் திட்டம் வட கொரியாவை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த மாதம் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (APEC) உச்சி மாநாட்டில் அதிபர் லீ, தென் கொரியாவிற்கு இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தேவை என்று டிரம்பிடம் கூறியிருந்தார்.
தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரான ஆன் கியு-பேக் கடந்த வாரம் அளித்த தொலைக்காட்சி நேர்காணலில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் தென் கொரியாவுக்கு ஒரு “பெருமைக்குரிய சாதனை” என்றும், வட கொரியாவுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஒரு பெரிய பாய்ச்சல் என்றும் கூறினார்.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் மறைந்து செயல்படும் தன்மை (stealth) வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை “இரவில் விழித்திருக்க” வைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
வட கொரியாவிடம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளனவா?
வட கொரியாவும் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தைத் தொடர்கிறது என்றும் அது ரஷ்யாவின் உதவியுடன் இருக்கலாம் என்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தான் தயாரித்து வருவதாகக் கூறும் ஒரு அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளத்தை வடகொரிய அதிபர் கிம் பார்வையிடுவதைக் காட்டும் வகையிலான படங்களை மார்ச் 2025 இல் வடகொரியா வெளியிட்டது.
வடகொரியா அடுத்த சில ஆண்டுகளில் இந்த நீர்மூழ்கிக் கப்பலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட கொரியா தனது பரந்த அணு ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தோராயமாக 50 அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தென் கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவது, கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ஆயுதப் போட்டியில் அது தொடர்ந்து முன்னேற உதவும் என்று சேஜோங் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஜோ பீ-யூன் கருத்துத் தெரிவித்தார்.
“வட கொரியாவின் அணு ஆயுதம் ஒரு உறுதி செய்யப்பட்ட உண்மை” என்று அவர் பிபிசியிடம் கூறினார். “[தென் கொரியா] அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவது அதிகரித்து வரும் பதற்றமான போக்கின் ஒரு படி மட்டுமே.”
கொரிய தீபகற்பத்தில் இது பதற்றத்தை தூண்டுமா?
அணுசக்தி மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தென் கொரியாவின் பாதுகாப்புக் திறன்களுக்கு எவ்வளவு பங்களிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில நிபுணர்களின் கூற்றுப்படி, அவை மிகவும் விலை உயர்ந்தவை என்றாலும், கொரிய தீபகற்பத்தில் உள்ள அதிகார சமநிலையை அவை பெரிதாக மாற்றப் போவதில்லை.
அசன் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் (Asan Institute for Policy Studies) ஆராய்ச்சியாளரான யாங் உக், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் முதன்மை நோக்கம், வட கொரியாவின் அணு அச்சுறுத்தலுக்குத் தங்கள் அரசு பதிலளிக்கிறது என தென் கொரிய வாக்காளர்களுக்கு உறுதியளிப்பதே என்று பிபிசியிடம் கூறினார்.
“வட கொரியாவை எதிர்கொள்ளத் தென் கொரியாவால் அதன் சொந்த அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது,” என்று யாங் கூறினார். “அவர்களால் என்ன செய்ய முடியும்? அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் களமிறக்க முடியும்.”
இது அணு ஆயுதங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கான அவர்களின் நியாயத்தை வலுப்படுத்துவதால் வட கொரியா இந்த மாற்றத்தில் மகிழ்ச்சியடையக்கூடும் என்று யாங் நம்புகிறார், அதாவது வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோருவது மிகவும் கடினமாகிவிடும்.
இருப்பினும், இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் மூலம் தென் கொரியா பெறும் உத்தி ரீதியான நன்மையை ஜோ வலியுறுத்தினார், இது ஒரு “பெரிய மாற்றம்” என்று விவரித்தார், இதன் பொருள் “தென் கொரியா இப்போது ஒரு பிராந்திய சக்தி.”
“ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் சிறந்த அம்சம் அதன் வேகம்” என்று அவர் கூறினார். “அது இப்போது வேகமாகவும் தூரமாகவும் செல்ல முடியும், மேலும் தென் கொரியா அதிக நாடுகளுடன் இணைந்து செயல்பட முடியும்.”
அமெரிக்காவிற்கு என்ன பலன்?
வாஷிங்டனைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்கான ஆதரவு வட கொரியா மற்றும் சீனா ஆகிய இரண்டின் மீதும் அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
” பாதுகாப்பிற்கான செலவினச் சுமையை டிரம்ப் தென் கொரியாவின் முதுகில் வைத்துள்ளார்,” என்று யாங் விளக்கினார். “தென் கொரியா தனது பாதுகாப்புச் செலவினத்தை மிகவும் அதிகரிக்கும். அவர்கள் சீனா மற்றும் வட கொரியா மீது அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்காவின் பினாமியாக செயல்படுவார்கள்.”
பட மூலாதாரம், Getty Images
தென் கொரியாவில் உத்தி ரீதியாக செல்வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டுமே நீண்ட காலமாகப் போட்டியிட்டு வருகின்றன, இதனால் தென் கொரியா ஒரு புவிசார் அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் செயல்பட வேண்டியுள்ளது. சமீப காலமாக, சீனா தென் கொரியாவின் கடல் எல்லைக்கு அருகில் தனது கடற்படை நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. இது தென் சீனக் கடலில் காணப்படுவதைப் போன்ற ஒரு நடவடிக்கைதான்.
தென் கொரியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்து சீனா”மிகவும் கோபமாக” இருக்க வேண்டும் என்று யாங் கூறினார்.
இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென் கொரியாவிற்கான சீனத் தூதர் டாய் பிங், “தென் கொரியா அனைத்து தரப்பினரின் கவலைகளையும் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்னையை விவேகத்துடன் கையாளும்” என்று நம்புவதாகக் கூறினார்.
டாய் மேலும் கூறுகையில், சீனா இந்த விஷயத்தில் ராஜதந்திர வழிகளை கடைபிடித்து வருவதாகவும், “கொரிய தீபகற்பத்திலும் பிராந்தியத்திலும் உள்ள (பாதுகாப்பு) நிலைமை இன்னும் சிக்கலானதாக உள்ளது” என்றும் கூறினார்.

அடுத்தது என்ன?
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பிலடெல்பியாவில் கட்டப்படும் என்றும், அமெரிக்காவிற்கு வேலைகளைக் கொண்டு வரும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனாலும், மிகக் குறுகிய காலக்கெடுவுக்குள் கட்டிவிடமுடியும் என்பதால் தென் கொரியாவிலேயே கட்டப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
கப்பல் கட்டும் தளத்தை வைத்திருக்கும் ஹன்வா இதுவரை இந்த விஷயத்தில் கருத்துத் தெரிவிக்கவில்லை.
அறிக்கைகளின்படி, தென் கொரியப் பிரதமர் கிம் மின்-சியோக் ஒரு நாடாளுமன்ற விசாரணையின் போது, பிலடெல்பியாவில் உள்ள தென் கொரியாவிற்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் அத்தகைய கப்பல்களைக் கட்டும் “திறன் இல்லை” என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்போது ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதால், அடுத்த கட்டம் இரு நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை சரிசெய்வதுதான். இது அமெரிக்கா அணு எரிபொருளை வழங்குவதற்கும், அதன் ராணுவ பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் அனுமதிக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு