பட மூலாதாரம், Getty Images
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், புதிதாக 10% உலகளாவிய வரியை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் தீர்ப்பை “மோசமானது” என்றும், தனது வர்த்தக கொள்கையை நிராகரித்த நீதிபதிகளை “முட்டாள்கள்” என்றும் குறிப்பிட்டார் டிரம்ப்.
வெள்ளை மாளிகை கடந்த ஆண்டு அறிவித்த பெரும்பாலான வரிகளை நீதிமன்றம் ரத்து செய்த பிறகு தனது திட்டத்தை வெளியிட்டார் டிரம்ப்.
6-3 என்கிற கணக்கில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில் டிரம்ப் தனது அதிகார வரம்புகளை மீறிவிட்டார் என நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்த வரிகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அமெரிக்க மாகாண அரசுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இது முக்கியமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பில்லியன்கணக்கான டாலர் வரிகளை திரும்பச் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் உலகளாவிய வர்த்தகத்தில் புதிய நிச்சயமற்றத் தன்மையையும் உருவாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சட்டப் போராட்டம் இல்லாமல் வரிகள் திருப்பித் தரப்பட மாட்டாது என்றும் இந்த விவகாரம் நீதிமன்றத்திலேயே பல ஆண்டுகள் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மற்ற சட்டங்களின் மூலம் தனது வரிகளைத் தொடர்வதாகக் கூறிய டிரம்ப், அவை அமெரிக்காவில் முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவித்ததாக வாதிடுகிறார்.
“நமக்கு மாற்று உள்ளது – சிறப்பான மாற்று உள்ளது, அதற்கு நாம் மிகவும் வலுவாக இருப்போம்,” எனத் தெரிவித்தார் டிரம்ப்.
பட மூலாதாரம், Getty Images
உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பொருட்கள் மீது டிரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக்கு எதிராக இந்த சட்டப்போராட்டம் நடந்தது.
முதலில் மெக்சிகோ, சீனா மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட இந்த வரிகள் பிறகு பல கூட்டணி நாடுகளுக்கும் விதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், டிரம்ப் இதனை “விடுதலை நாள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வரிகளை விதிக்க 1977-ஆம் ஆண்டின் சர்வதேச நெருக்கடி பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தை வெள்ளை மாளிகை மேற்கோள் காட்டியது. இந்தச் சட்டம் நெருக்கடிக்குப் பதில் நடவடிக்கையாக வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த அதிபருக்கு அதிகாரம் வழங்குகிறது.
ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு உள்நாட்டிலும் அமெரிக்காவுக்கு அனுப்பும் சரக்குகள் மீது திடீர் வரி உயர்வை எதிர்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியிலும் அதிருப்தி கிளம்பியது. இதனால் விலைகள் உயரக்கூடும் என கவலை நிலவியது.
கடந்த ஆண்டு மாகாண அரசுகள் மற்றும் சிறு வணிகர்கள் சார்பாக நீதிமன்றத்தின் முன் வாதாடிய வழக்கறிஞர்கள், டிரம்ப் மேற்கோள் காட்டும் சட்டத்தில் “வரிகள்” என்கிற வார்த்தையே குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
வரிகள் விதிக்கும் தனது அதிகாரத்தையும் இதர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக விதிகளை “குப்பையில் போடுவதற்கான அதிகாரத்தை” அதிபருக்கு வழங்கவும் அமெரிக்க நாடாளுமன்றம் முனையவில்லை என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
கன்சர்வேடிவ் நீதிபதியான தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது தீர்ப்பில் இந்த பார்வையுடன் ஒத்துப்போனார்.
“நாடாளுமன்றம் தனது வரி அதிகாரங்களை வழங்கியபோது மிகவும் வெளிப்படையான வரிகளிலும் கட்டுப்பாடான அளவிலுமே செய்துள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.
“ஒருவேளை நாடாளுமன்றம் வரிகளை விதிப்பதற்கு தனித்துவமான மற்றும் அசாதாரணமான அதிகாரத்தை வழங்க முனைந்திருந்தால் மற்ற சட்டங்களில் நிலையாக உள்ளதைப் போல இதிலும் தெளிவாக குறிப்பிட்டிருக்கும்,” என்றும் தனது தீர்ப்பில் எழுதியுள்ளார்.
வரிகளை ரத்து செய்யும் இந்தத் தீர்ப்பில் நீதிமன்றத்தின் மூன்று லிபரல் நீதிபதிகளும் டிரம்பால் முன்மொழியப்பட்ட ஏமி கோனி பேரட் மற்றும் நீல் கோர்சுச் ஆகிய நீதிபதிகளும் இணைந்தனர்.
க்ளெரன்ஸ் தாமஸ், ப்ரெட் காவனாக் மற்றும் சாமுவேல் அலிடோ ஆகிய மூன்று கன்சர்வேடிவ் நீதிபதிகள் இந்தத் தீர்ப்பிலிருந்து மாறுபட்டனர்.
வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், தனது வர்த்தக கொள்கைக்கு எதிராக தீர்ப்பளித்த குடியரசு கட்சியால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளை நினைத்து “முற்றிலும் அவமானப்படுவதாக” தெரிவித்தார்.
அவர்கள் “முட்டாள்களாகவும் தலையாட்டி பொம்மையாகவும்” மற்றும் “தேசப்பக்தி இல்லாதவர்களாகவும் அரசியலமைப்பு மீது விசுவாசம் இல்லாமலும்” இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த தீர்ப்பை அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்றுள்ளளன. அமெரிக்க பங்குச் சந்தையில் பங்குகள் உயர்வைக் கண்டன.
“எனது இதயத்திலிருந்து ஒரு ஆயிரம் பவுன்ட் எடை நீக்கப்பட்டதைப் போல உணர்கிறேன்,” என்கிறார் பெத் பெனிக். மின்னசோடாவில் உள்ள இவரது நிறுவனமான பிசி பேபி ப்ராடக்ட்ஸ் சீனாவில் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சிறு நிறுவனங்களில் ஒன்றான டெர்ரி ப்ரெசிசன் சைக்கிளிங்கின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹோல்ம் இந்த தீர்ப்பை ஒரு “நிவாரணம்” எனக் குறிப்பிட்டார்.
“எங்களின் விநியோக சங்கிலி மீண்டும் எழுந்து இயல்பான நிலையில் செயல்படுவதற்கு பல மாதங்கள் ஆகும் என்றாலும் முறையற்ற விதத்தில் வசூலிக்கப்பட்ட வரிகளை அரசாங்கம் திரும்பிச் செலுத்துவதை எதிர்நோக்கி இருக்கிறோம்.” என அவர் தெரிவித்தார்.
எனினும் வரிகள் திரும்பிச் செலுத்தப்படுவதும் வரிக் கட்டணங்களில் இருந்தான நிவாரணமும் கைக்கு எட்டாமல் போகலாம்.
வெள்ளிக்கிழமை இதுவரை பயன்படுத்தப்படாத சட்டமான செக்சன் (Section) 122-ஐ பயன்படுத்தி புதிதாக 10% வரிகளை விதித்துள்ளார் டிரம்ப். இந்தச் சட்டத்தின் கீழ் 150 நாட்கள் வரை 15% வரிகள் விதிப்பதற்கான அதிகாரம் கிடைக்கிறது, 150 நாட்கள் கழித்து நாடாளுமன்றம் தலையிட வேண்டும்.
இது பிப்ரவரி 24-ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது.
இந்த உத்தரவில், சில குறிப்பிட்ட கனிமங்கள், இயற்கை வளங்கள் மற்றும் உரங்கள், ஆரஞ்சு மற்றும் மாட்டிறைச்சி போன்ற சில வேளாண் பொருட்கள், மருந்துகள் சில மின்னணு பொருட்கள் மற்றும் சில வாகனங்கள் உள்பட பல்வேறு வகையான விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விலக்கு கொடுக்கப்பட்ட பல வகை பொருட்களுக்கும் இந்த உத்தரவு பரந்துபட்டதாக உள்ளது, இதில் எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு கிடைக்கும் என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
வரிகளின் கீழ் வரும் பெரும்பாலான பொருட்களுக்கு வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் கனடாவும் மெக்சிகோவும் விலக்கு பெறும்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு எவ்வளவு வரி?
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பிரிட்டன், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் கூட்டமைப்புகள், முன்னதாக பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது செக்சன் 122-இன் கீழ் விதிக்கப்பட்டுள்ள புதிய 10% வரிகளை எதிர்கொள்வார்கள் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தங்களின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகளுக்கு இந்த நாடுகள் தொடர்ந்து உடன்படுவார்கள் என டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
செக்சன் 232 மற்றும் செக்சன் 301 போன்றவற்றையும் வெள்ளை மாளிகை கவனத்தில் கொள்ளலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இவை பாதுகாப்பு ஆபத்துகள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எதிர்கொள்ள இறக்குமதி வரிகளை விதிக்க அனுமதிக்கின்றன.
கடந்த ஆண்டு கார்கள், எஃகு, அலுமினியம் போன்ற துறைகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் உட்பட சில வரிகளுக்கு இவற்றை டிரம்ப் பயன்படுத்தி இருந்தார். இவை நீதிமன்ற தீர்ப்பால் ரத்து செய்யப்படவில்லை.
“இன்று இந்த விவகாரம் மேலும் சிக்கலானதாகவும் குழப்பமானதாகவும் மாறியுள்ளது” என்கிறார் ஜெஃப்ரி கெர்ட்ஸ். இவர் வாஷிங்டனில் உள்ள புதிய அமெரிக்க பாதுகாப்புக்கான மையத்தின் மூத்த ஆய்வாளராக உள்ளார்.
ஆனால் முதன்மையான வர்த்தக கூட்டணி நாடுகள் இந்த தீர்ப்புக்கு பெரிய அளவில் எதிர்வினை ஆற்றவில்லை.
“அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் கருத்தில் எடுத்துக் கொண்டு கவனமாக ஆராய்ந்து வருகிறோம்,” என ஐரோப்பிய ஆணையத்தில் செய்தித் தொடர்பாளரான ஒலோஃப் கில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய அரசாங்கத் தரவுகளின்படி இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா குறைந்தபட்சம் 130 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வரிகளை வசூலித்துள்ளது.

சமீபத்திய வாரங்களில், செலுத்திய வரிகளை திரும்பப் பெறும் நோக்கில் சில்லறை வணிக நிறுவனமான காஸ்ட்கோ, அலுமினியம் உற்பத்தி நிறுவனமான அல்கோ மற்றும் பம்பிள் பீ போன்ற உணவு இறக்குமதி நிறுவனம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் வரிகளை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்துள்ளன.
ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பில் வரிகள் திரும்பிச் செலுத்தப்படுவது பற்றி நேரடியாக குறிப்பிடப்படவில்லை. அந்த செயல்முறை எவ்வாறு வேலை செய்யும் என்கிற கேள்வி சர்வதேச வர்த்தகத்துக்கான நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி ப்ரெட் காவனாக் தனது மாற்றுத் தீர்ப்பில், இந்தச் சூழல் “குழப்பமானதாகும்” என எச்சரித்துள்ளார்.
வழக்கு நடத்துவதற்கான செலவுகள், சிறு நிறுவனங்கள் நிதி சேகரிப்பதை கடினமாக்கக்கூடும் என்கிறார் கேபிஎம்ஜி யூஎஸ் என்கிற நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணரான டயான் ஸ்வோங்க்.
“துர்திருஷ்டவசமாக உங்களின் ஆர்வத்தைக் கட்டுப்படுத்துங்கள் என்று நான் கூறுவேன். இருந்தாலும் நிவாரணம் பெற வேண்டும் என்கிற உங்களின் ஆர்வம் எனக்குப் புரிகிறது,” என அவர் தெரிவித்தார்.
நிறுவனங்களுக்கான சிறந்த சூழல் என்னவென்றால், வரிகளை திரும்பப் பெறுவதற்கு வழக்கு தொடர வேண்டிய தேவையில்லாத ஒரு நடைமுறையை அரசு உருவாக்குவது தான் என்கிறார் சட்ட நிறுவனமான பில்ஸ்பெரியின் தலைவர் ஸ்டீவ் பெக்கர்.
“தங்களின் பணம் திரும்பக் கிடைத்துவிடும் என நிறுவனங்கள் உறுதியாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது அரசாங்கத்தின் கையில் தான் இருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
செய்தி சேகரிப்பில் பங்களிப்பு: டேனியல் கெய் மற்றும் வேர்ல்ட் பிசினஸ் எக்ஸ்பிரஸ்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு