அமெரிக்க அதிபர் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகள் குறித்து உலகத் தலைவர்கள் விரைந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ரஷ்ய அதிபரான விளாதிமிர் புதினிடமிருந்து எந்த கருத்தும் இதுவரை வரவில்லை.
மேலும், இதற்கு பிறகு நடக்கக்கூடிய நிகழ்வுகளை ஆறஅமர உட்கார்ந்து பார்ப்பதற்கான சூழல் புதினுக்கு இருப்பதால், அவர் எதுவும் சொல்லத் தேவையில்லை.
யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி உடனான இந்த வெளிப்படையான வாய்ச்சண்டை “பெரிய காட்சிப் பொருளாக மாறும்” என டொனால்ட் டிரம்ப் கணித்திருந்தார்.
தன்னால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் அதிபரான ஸெலன்ஸ்கி, உலக ஊடகங்களின் முன்னிலையில் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரால் கோபமாக விமர்சிக்கப்படுவதை விளாதிமிர் புதின் ரசித்திருக்கலாம் என்பதற்கான சிறு முகாந்திரமும் உள்ளது.
முன்னாள் அதிபர் மற்றும் தற்போதைய ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரான டிமிட்ரி மெத்வதேவ் தமது டெலகிராம் பதிவில், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி “ஓவல் அலுவலகத்தில் அறையப்பட்டிருக்கிறார்” என கூறியுள்ளார்.
யுக்ரேனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என அமெரிக்காவை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெலகிராமில் எழுதியுள்ள ரஷ்ய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் மரிய ஸகரோவா, யுக்ரோன் அதிபரை தாக்காமல் இருந்தது டிரம்ப் மற்றும் ஜே.டி.வான்ஸின் “அதிசயமான சுயகட்டுப்பாடு” என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா – யுக்ரேன் உறவுகள் சேதமடையும் அபாயத்தில் இருந்தாலும், அமெரிக்கா – ரஷ்யா உறவுகளில் இதற்கு மாறான நிலை ஏற்பட்டிருப்பது தான் நாம் இப்போது இருப்பது புதிய உலகு என்பதற்கான யதார்த்தமான அறிகுறியாக இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்கா – யுக்ரேன் உறவுகள் சேதமடையும் அபாயத்தில் உள்ளன
அமெரிக்கா – ரஷ்யா உறவில் புதிய சகாப்தம்?
பட மூலாதாரம், Reuters
சமீபத்திய வாரங்களில் டிரம்ப் மற்றும் புதின் தொலைபேசியில் பேசியதோடு, நெருக்கமாக செயல்படுவதற்கு உறுதியேற்றுள்ளனர்.
இருதரப்புக்கான உச்சி மாநாடு விரைவில் நடைபெறலாம் என்ற பேச்சும் உலவுகிறது. இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மீட்டெடுப்பதற்கும், சாத்தியமான பொருளாதார ஒத்துழைப்பை விவாதிப்பதற்குமான கீழ் மட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
அரிய வகை கனிமங்கள் மற்றும் அலுமினிய உற்பத்தியைச் சார்ந்த லாபகரமான கூட்டுத் திட்டங்களை அமெரிக்காவிடம் புதின் முன்வைத்துள்ளார்.
யுக்ரேன்-அமெரிக்க உறவில் ஏற்படும் முறிவின் தாக்கங்கள் யுக்ரேனுக்கு மிகத் தீவிரமானவை, ஆனால் ரஷ்யாவுக்கு மிகவும் சாதகமானவை.
ஐரோப்பிய தலைவர்கள் ஒற்றுமையுடன் வலுவான ஆதரவு அளித்தாலும் கூட, யுக்ரேனுக்கு அமெரிக்க ஆயுதங்கள் வருவது நிறுத்தப்பட்டால், ரஷ்யப் படைகளுக்கு எதிராக யுக்ரேனியர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முடியாது.
யுக்ரேன் போர் ரஷ்யாவின் போக்கில் சென்று கொண்டிருப்பதாக ரஷ்ய தலைமை சில காலமாக நம்புகிறது. ஓவல் அலுவலகத்தில் நடந்த கூச்சல் குழப்பம் அந்த கருத்தை உறுதிப்படுத்துகிறது.