பட மூலாதாரம், AFP via Getty Images
யுக்ரேன் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகையில் உலகத் தலைவர்கள் அரிதாக ஒன்றுகூடும்போது நிச்சயம் அது வழக்கமான நாளாக இருக்காது.
ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கு இடையேயான சந்திப்பாக அறிவிக்கப்பட்டது, தற்போது ஒரு மாநாடு போன்று மாறியுள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ தலைவர்கள், மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் அதற்கான நிபந்தனைகள் குறித்தும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ஒன்றுகூடியுள்ளனர்.
அமெரிக்கா தனது நிலைப்பாட்டை யுக்ரேனுக்கு சாதகமாக இல்லாத ஒன்றாக மாற்றியுள்ளது என்பது, வளர்ந்து வரும் ஐரோப்பிய கவலைகளுக்கு காரணமாக உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் மற்றும் கலந்துகொள்ளாத ஒருவருக்கு (ரஷ்யா) நீண்ட விவாதங்களுக்குப் பிறகு வெற்றிகரமான முடிவு என்பது என்னவாக இருக்கும் என்பது குறித்து நாங்கள் விவாதித்திருக்கிறோம்.
“ஒப்பந்தம் வந்தால் போதும்” – அமெரிக்கா
டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது, தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே இந்த மோதலுக்கு தீர்வு காண்பதாக கூறியிருந்தார், ஆனால் ஆறு மாதங்கள் கழிந்தும் அதை அவரால் எட்ட முடியவில்லை.
காலப்போக்கில், எந்தவொரு ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும் விட இந்த ஒப்பந்தத்தில் டிரம்ப் அதிக ஆர்வம் காட்டியதால், விதிமுறைகள் மாறிவிட்டன.
வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்ததிலிருந்து, டிரம்ப் மாஸ்கோ மீதான தனது விமர்சனத்தையும், பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தலையும் கைவிட்டு, அதற்கு பதிலாக ஜெலன்ஸ்கி மீது அழுத்தத்தைக் குவிக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு சமூக ஊடகப் பதிவில், யுக்ரேன் நேட்டோ அமைப்பில் இணைய வேண்டும் என்ற நம்பிக்கையை அந்நாட்டு அதிபர் கைவிட வேண்டும் என்றும், 2014 இல் புதின் சட்டவிரோதமாக க்ரைமியாவை இணைத்ததை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
ரஷ்யாவின் மேலதிக ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கும் என்று டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஆனால் அதுகுறித்த விவரங்கள் தெளிவாக இல்லை.
இதுவரை, யுக்ரேனின் எதிர்கால பாதுகாப்புக்கு அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய கோரிக்கைகளை அமெரிக்கா எதிர்த்தது. அது உண்மையில் மாறிவிட்டதா என்பதை அறிய அனைவருடைய கவனமும் வெள்ளை மாளிகையை நோக்கி உள்ளது.
விட்டுக்கொடுக்க மறுக்கும் யுக்ரேன்
பொறுமையிழந்து காணப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னிலையில், தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி இருக்கிறார். தற்போதைய நிலையில் டிரம்ப் புதினின் கருத்துக்களால் தூண்டப்பட்டவராக அறியப்படுகிறார். ஏற்கெனவே அமைதிக்கு இடையூறாக ஜெலன்ஸ்கி இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஜெலென்ஸ்கியிடம் ரஷ்யாவுக்கு நிலத்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறலாம். 2022 முதல் ஆயிரக்கணக்கான யுக்ரேனிய வீரர்கள் உயிரைக் கொடுத்து போராடிய பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளிலிருந்து பின் வாங்குவது என்பது யுக்ரேனுக்கு கடினமான முடிவாக இருக்கும்.
இது புதிய நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்புக்கான ஏவுதளமாக ரஷ்யா பயன்படுத்த வழிவகுக்கும். எனவே ரஷ்யா மீண்டும் தாக்கினால், பதிலடி கொடுக்கும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் நிலச் சலுகைகளை வழங்க ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ள முடியாது. பாதுகாப்பு உத்தரவாதங்கள் நேட்டோவால் வழங்கப்பட்டிருக்கலாம், ஆனால் யுக்ரேன் நேட்டோ கூட்டணியில் சேராது என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
எந்த மாற்று பாதுகாப்பு உத்தரவாதங்களின் விவரங்களும் இன்னும் உருவாக்கப்படவில்லை, ஆனால் அவை இல்லாமல் ஜெலன்ஸ்கி எந்த உறுதிமொழிகளையும் எடுப்பது கடினமாக இருக்கும்.
உடனடி போர் நிறுத்தத்தை விரும்புவதிலிருந்து முழு அமைதி ஒப்பந்தத்தை நோக்கி டிரம்ப் நகர்ந்துவிட்டதாகத் தோன்றுவதும் யுக்ரேனை கவலையடையச் செய்கிறது. இதனால் ஏற்படும் தாமதத்தால், ரஷ்யாவின் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் தொடரலாம்.
பாதுகாப்புக்கான உத்தரவாதம் – ஐரோப்பாவின் கோரிக்கை
ஐரோப்பியத் தலைவர்கள் யுக்ரேனுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் எப்படி இருக்கும் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் எதிர்பார்ப்பார்கள்.
இந்த விஷயத்தில் அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகளில் இருக்கும் தெளிவின்மை, ஐரோப்பியர்களுக்கு கவலை அளிக்கிறது.
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க யுக்ரேனை அமெரிக்கா வலியுறுத்தக்கூடும் என்ற கருத்து குறித்த பதற்றமும் உள்ளது. ஐரோப்பிய கண்டம் ரத்தம் தெறிக்கும் போர்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் எல்லைகள் பலவந்தமாக மறுவரையறை செய்யப்படும் சூழ்நிலையைத் தவிர்க்க தலைவர்கள் விரும்புகிறார்கள்.
இந்த கவலைகளின் விவாதத்தின் ஐரோப்பாவின் இத்தனைத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு செல்லும் திடீர் முடிவை எடுத்துள்ளனர். கடந்த வாரம் டிரம்ப் – புதின் சந்திப்பு நடைபெற்ற, அலாஸ்கா உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்த ஒரு மெய்நிகர் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் விளைவாக ரஷ்யா மீதான டிரம்பின் விமர்சனத்தை கடுமைப்படுத்த முடிந்தது. ஆனால்,புதினை சந்தித்த பின்னர், அவர் மீண்டும் ரஷ்யாவின் பக்கம் சாய்வது போல் தோன்றுவதால், ஐரோப்பியத் தலைவர்கள் கண்டத்தின் நீண்டகால பாதுகாப்பு குறித்த தங்கள் கவலைகள் மாறவில்லை என்பதை அவருக்கு உணர்த்த முயற்சிப்பார்கள்.
ரஷ்யா எதிர்பார்ப்பது என்ன?
இன்று வெள்ளை மாளிகையில் நடைபெறும் சந்திப்பில் ரஷ்ய பிரதிநிதிகள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனாலும்,அதனை ஒரு பொருட்டாக கருதாத அளவுக்கு,கடந்த வாரம் டிரம்ப் மீது புதின் போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் கருதப்படுகிறது. இதனால் ரஷ்யா தனது பார்வை போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்று நம்பலாம்.
யுக்ரேன் நேட்டோவில் சேராது என்று டிரம்ப் ஏற்கெனவே கூறியுள்ளார்.மேலும் அந்த உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் அங்கீகரிக்கவும் ரஷ்யா விரும்புகிறது. டான்பாஸ் மீதான முழு கட்டுப்பாட்டையும் அது விரும்புகிறது, இது டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் இன்னும் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் நிலத்தை யுக்ரேன் விட்டுக்கொடுக்க வழிவகுக்கும்.
மிக முக்கியமாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இப்போது ஜெலன்ஸ்கியின் கையில் உள்ளது என்பதை டிரம்ப் மூலமாக ரஷ்யா பேசவைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஜெலன்ஸ்கி டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதை ரஷ்யா அறிந்திருக்கிறது. இந்த முண் டிரம்ப் நிரந்தரமாக பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகி, யுக்ரேனையும் ஐரோப்பியர்களையும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழியைத் தேட வழிவகுக்கும் என்பதே ரஷ்யாவின் வெற்றியாக இருக்கும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு