- எழுதியவர், ஐயப்பன் கோதண்டராமன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள, அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக அமெரிக்க தமிழர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் களமிறங்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அமெரிக்கர்கள் தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க தமிழர்களிடம் ஒருபுறம் இருந்தாலும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்புக்கும் ஆதரவு உள்ளது.
அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக வாக்களிக்க உள்ள நிலையில், அமெரிக்க தமிழர்கள் இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்கிறார்கள்? கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் குறித்த அவர்களின் கருத்து என்ன?
‘டிரம்ப் வந்தால் நிச்சயமற்ற தன்மை நிலவும்’
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் வடக்கு போடோமேக் பகுதியைச் சேர்ந்த முனைவர் சுரேஷ் பாபு, சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (IFPRI- ஐ.எஃப்.பி.ஆர்.ஐ) மூத்த ஆராய்ச்சியாளராகவும், கற்றல் மற்றும் திறன் வலுப்படுத்தும் திட்டத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
பைடன் மற்றும் டிரம்ப் நிர்வாகங்களுக்கு இடையிலான பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் உணவுப் பாதுகாப்பு கொள்கையின் தாக்கங்கள் குறித்த தனது கருத்துகளை பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
“டிரம்பின் கொள்கைகள், விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஏற்றுமதி வரியை விதிக்க முயல்கிறது. இதன் விளைவாக உணவு உற்பத்திக்கு அமெரிக்க நுகர்வோர் அதிக விலை கொடுக்க நேரிடும். குடியரசுக் கட்சி உள்ளூர் மற்றும் கிராமப்புற விவசாயிகள் மீது கவனம் செலுத்துகிறது, உலகளாவிய உணவு உதவிகள் போன்றவற்றில் அக்கட்சி அக்கறை காட்டுவதில்லை” என்கிறார் சுரேஷ் பாபு.
இஸ்ரேல்-காஸா மற்றும் ரஷ்யா-யுக்ரேன் போர்களில் அமெரிக்காவின் புதிய அரசுடைய தலையீடு எவ்வாறு இருக்கும் என்பதன் அடிப்படையில் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறித்து தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிடுகிறார் சுரேஷ் பாபு.
கடந்த மாதம் நடைபெற்ற கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதத்தில், ‘ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேன் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா?’ என்ற கேள்விக்கு, “போரை நிறுத்த நான் விரும்புகிறேன்” என்று டிரம்ப் பதிலளித்தார். மேலும், தான் அதிபராக இருந்திருந்தால், இஸ்ரேல்-காஸா போர் தொடங்கியே இருக்காது என்றும் அவர் கூறினார்.
அந்த விவாதத்தில், இஸ்ரேல்-காஸா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ், காஸாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டுமெனவும், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
“டிரம்ப், மற்ற நாடுகளுக்கான அமெரிக்காவின் செலவுகளைக் குறைக்கலாம். சில நிபந்தனைகளின் அடிப்படையில் உணவு உதவிகளைக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக காலநிலை மாற்ற பிரச்னைக்கு ஆதரவாக செயல்படுவது உள்பட, கமலா ஹாரிஸ் தரப்பினர் இப்போது என்ன செய்கிறார்களோ, அதையே தொடர்வார்கள்” என்கிறார் சுரேஷ் பாபு.
“இந்த காலநிலை மாற்ற கொள்கைகளுக்கு டிரம்ப் உதவ மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக அவரது முதல் பதவிக் காலத்தில், உலகளாவிய காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கியது ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது.
முந்தைய டிரம்ப் நிர்வாகம் நேட்டோவின் ஈடுபாட்டைக் குறைக்க வலியுறுத்தியதை, அதாவது சில நாடுகளுடனான உறவுக்கு முட்டுக்கட்டை போடுவதை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம்” என்று கூறுகிறார் சுரேஷ் பாபு.
எனவே டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வறுமை, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்த உலகளாவிய நடவடிக்கைகளில் ஒரு தொய்வு இருக்கும் என்கிறார் சுரேஷ் பாபு.
மேலும், “கமலா ஹாரிஸ் நிர்வாகம் உணவுப் பாதுகாப்புக் கொள்கையில் கடுமையான மாற்றங்களைக் கொண்டு வராது, அவர்கள் பைடன் கொள்கையைப் பின்பற்றுவார்கள். கொள்கை ஸ்திரத்தன்மை இருக்கும். அதுவே, டிரம்ப் மீண்டும் வந்தால், அவர்கள் வரிகளை அதிகரிப்பது பற்றிப் பேசி வருவதால் கொள்கை நிச்சயமற்ற தன்மை நிலவும்.”
“இதன் காரணமாக நுகர்வோர், உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் போன்ற முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்கள் முதலீடு செய்ய மாட்டார்கள், இது பொருளாதாரத்தைப் பாதிக்கும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
‘தமிழர்களை பாதிக்கும் சட்டவிரோத குடியேற்றங்கள்’
அமெரிக்காவின் சட்டவிரோத குடியேற்ற நிலைமைகள், சட்டப்பூர்வமாக குடியேறும் தமிழர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி பிபிசி தமிழிடம் விவரித்தார் குடியரசுக் கட்சி ஆதரவாளரும், விர்ஜீனியாவின் பிராம்பிள்டனில் தனது குடும்பத்துடன் வசிப்பவருமான ராம் வெங்கடாசலம்.
“ஹெச்1பி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, 90களின் முற்பகுதியில் இங்கு வேலைக்கு வந்தவர்களுக்கு நேரடியாக கிரீன் கார்டு வழங்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, பணியாளர்கள் அதிகமாக வரத் தொடங்கினர்.”
“அதன் பிறகு ஏற்பட்ட தேக்கநிலையால் ஹெச்1பி விசா அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுவாக இரு தரப்பும் சட்டபூர்வ குடியேற்றத்தை ஆதரித்தனர், ஆனால் சமீபத்தில்தான் தெற்கு மற்றும் வடக்கு எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துள்ளது,” என்கிறார் ராம்.
ராம் தற்போது விர்ஜீனியா ஆளுநர் க்ளென் யங்கின் நியமித்த ‘விர்ஜீனியா அறிவியல் அருங்காட்சியகத்தின் அறங்காவலர் குழுவில்’ பணியாற்றுகிறார்.
பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் சட்டப்பூர்வமாகவே இங்கு வருகிறார்கள் எனக் கூறும் ராம், அவர்கள் EB1, EB2, EB3 ஆகிய பிரிவுகளில் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்கிறார்.
ஆனால், “அப்போது, சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கையாள்வதில் (யு.எஸ்.சி.ஐ.எஸ் அமைப்பு) அதிக நிதி மற்றும் மனித வளங்கள் செலவிடப்படுவதால், தமிழர்களுக்கு கிரீன் கார்டு கிடைப்பதில் பின்னடைவு ஏற்படுவதாக” அவர் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, ஒபாமாவின் நிர்வாகத்தில்கூட சட்டவிரோதமாக நுழைபவர்களை நாடு கடத்தும் விகிதம் அதிகமாக இருந்தது, அது டிரம்ப் நிர்வாகத்திலும் தொடர்ந்தது. “ஆனால் பைடன் நிர்வாகத்தில் நாடு கடத்தல் விகிதம் குறைக்கப்பட்டது. இது பைடன் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவித்து, ஆதரித்ததைக் காட்டுகிறது.”
“பைடன் நிர்வாகம் குடிமக்கள் அல்லாதவர்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதாக” ராம் கூறுகிறார்.
‘பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தரப்புக்கு ஆதரவு’
விர்ஜீனியாவின் ஸ்டெர்லிங் நகரில் வசிப்பவரும், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான நிர்வாகத்தின் (Administration for Child and Families- ஏசிஎஃப்) திட்ட ஆய்வாளருமான ஷெரீன் அலி பிபிசி தமிழிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
“இளம் சிறுமிகளின் தாய் என்ற முறையில், பெண்களின் ஆரோக்கியத்தில் அரசாங்கம் எவ்வளவு அக்கறை காட்டுகிறது என்பதில் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம்,” என்கிறார் ஷெரீன்.
டிரம்ப் நிர்வாகத்தின்போது, ஜூன் 24, 2022 அன்று, அமெரிக்க உச்ச நீதிமன்றம், ரோ vs வேட் வழக்கில் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளுக்கான 50 ஆண்டுகால கூட்டாட்சி பாதுகாப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, மாகாணங்கள் தங்கள் சொந்தத் தடைகளை வடிவமைக்க வழிவகுத்தது. இந்நிலையில், டிரம்பின் கருக்கலைப்பு தடை உத்தரவை திரும்பப் பெறுவேன் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய ஷெரீன் அலி, “இப்போதைய சூழலில், டெக்சாஸில் மிகவும் கடுமையான கருக்கலைப்பு சட்டம் உள்ளது. மருத்துவ சூழ்நிலைகள் காரணமாக ஒரு பெண் கர்ப்பமாக இருக்க விரும்பவில்லை என்றாலும்கூட, பெண்களுக்கு தனது கர்ப்பம் குறித்து தீர்மானிக்கும் உரிமையை வழங்கும் வேறு மாகாணத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது” என்று கூறுகிறார் ஷெரீன் அலி.
கருக்கலைப்பு விவகாரத்தில் கமலா ஹாரிஸ் பெண்களின் உரிமையை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார். அமெரிக்க உச்சநீதிமன்றம் 2022இல் ரோ vs வேட் வழக்கை ரத்து செய்த பிறகு, அமெரிக்காவில் கருக்கலைப்பு தடைகள் அதிகரித்து வருவதைப் பற்றிப் பேசுவதற்காக அவர் நாடு முழுவதும் பயணம் செய்தார்.
“அவர் ‘தனிப்பட்ட சுதந்திரம்’ என்ற தலைப்பை அடிக்கடி முன்வைத்தார். கருக்கலைப்பு மருத்துவமனைக்குச் சென்ற முதல் துணை அதிபர் கமலாதான்,” என்கிறார் ஷெரீன் அலி.
பைடன் நிர்வாகத்தின் ‘குழந்தை பராமரிப்புக்கான குறைவான வரி’ மற்றும் தாய்மார்கள் தங்கள் குழந்தை ஆரம்பப் பள்ளியில் சேரும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக சீக்கிரம் வேலைக்குச் செல்ல உதவும் ‘உலகளாவிய ப்ரீகே’ திட்டத்தைத் தொடர்வோம் என்று கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார் ஷெரீன் அலி.
“குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட தெற்காசிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேவைகளை ஆதரிக்கும் ஒரு லாப நோக்கற்ற அமைப்பில் நான் பணிபுரிகிறேன். எனவே பெண்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு தொடர்பான அனைத்து திட்டங்களும் தெற்காசியர்களுக்கு உதவும் அமைப்புகளுக்கு உண்மையில் நன்மை பயக்கும்” என்று கூறுகிறார்.
‘இரு தரப்புக்கும் ஆதரவு இல்லை’
பிபிசி தமிழிடம் பேசிய விர்ஜீனியாவின் ஆல்டி பகுதியைச் சேர்ந்தவரும் வாஷிங்டன் டிசி-யில் டேட்டா ஆர்கிடெக்ட்டாக (Data Architect) பணிபுரிபவருமான அலியார் சாஹிப், “இந்தியாவுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க தேர்தல்களில் அதிக ஜனநாயக மற்றும் வெளிப்படைத் தன்மை உள்ளதாக” கூறுகிறார்.
அதிபர் வேட்பாளரை மக்கள் புரிந்து கொள்வதில், கொள்கைகள் குறித்த விவாதங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் கூறுகிறார் அலியார் சாஹிப்.
கடந்த மாதம், கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையில் நடைபெற்ற நேரடி விவாதம், அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உற்று நோக்கப்பட்டது.
ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்ற அந்த விவாதத்தில் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே வெளியுறவுக் கொள்கை சார்ந்து தீவிரமான விவாதம் நடைபெற்றது.
பிபிசி தமிழிடம் பேசிய அலியார் சாஹிப், “முன்கூட்டியே வாக்களிப்பது தேர்தல் நாளில் நீண்ட வரிசைகளைக் குறைக்க உதவுகிறது. இது பொதுமக்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சுமைகளையும் குறைக்கிறது. நான் கடந்த வாரமே வாக்களித்துவிட்டேன்” என்று கூறினார்.
“டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தவர்களை அவர் பழிவாங்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வேலை வாய்ப்பு, பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் சார்ந்து மாற்றங்கள் நிகழலாம். ஒரு விதத்தில், சட்டவிரோத குடியேற்றக் கட்டுப்பாடு நல்லதுதான். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும், வட்டி விகிதம் குறையும், ரியல் எஸ்டேட் சந்தை சிறப்பாக இருக்கும்” என்று கூறினார் அலியார் சாஹிப்.
‘கமலா ஹாரிஸ் ஒரு சிறந்த வேட்பாளர் அல்ல’
அதுவே கமலா ஹாரிஸ் நிர்வாகத்திடமிருந்து குடியேற்றம், பணக்காரர்களுக்கு அதிக வரி, குறைந்தபட்ச ஊதிய ஆதரவு ஆகியவற்றில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார் அலியார் சாஹிப்.
“கருக்கலைப்பு பிரச்னை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இரு தரப்பினராலும் விவாதிக்கப்படுகிறது. ஏனெனில் இது உணர்வுகள் மற்றும் மதம் தொடர்பானது. ஆனால், பெண்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து முடிவெடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
வழக்கமாக, கமலா ஹாரிஸ் வேட்பாளராக இருக்கும் ஜனநாயகக் கட்சியினரை ஆதரிப்பதாகக் கூறும் அலியார் சாஹிப், “இந்த முறை நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் இரு தரப்புக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். அதற்குப் பதிலாக சுற்றுச்சூழல், அகிம்சை, சமூக நீதி, ஜனநாயகம், போர் எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் பசுமைக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக” கூறினார்.
மேரிலாந்தை சேர்ந்த கணினி அறிவியல் மாணவியான அஞ்சலி வெங்கடேஷ் முதல் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கவுள்ளார்.
“கமலா ஹாரிஸ் ஒரு சிறந்த வேட்பாளர் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அவர் பெண்கள் உரிமை தொடர்பான பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அதற்காக நான் அவருக்கு வாக்களிப்பேன். இதற்கு, அவர் ஒரு ஆசிய அமெரிக்கர் என்பது முக்கியமான காரணம்” என்று பிபிசி தமிழிடம் அஞ்சலி கூறினார்.
“பைடன், கடன் தள்ளுபடி குறித்து உறுதியளித்தார், அதைச் செய்யவும் முயன்றார். ஆனால் அது சிலரால் தடுக்கப்பட்டது. அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றத் தொடர்ந்து முயல்வார்கள் என்று தான் நம்புவதாக” கூறுகிறார் அஞ்சலி வெங்கடேஷ்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு