- எழுதியவர், பென் பெவிங்டன்
- பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்க்டன்
-
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) நடைபெறவுள்ள நிலையில், தேசிய அளவிலும், முக்கியமான மாகாணங்களிலும் வெள்ளை மாளிகைக்கான போட்டி கடுமையாக உள்ளது.
சிறு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளதாகக் கருதப்படும் சூழலில், டொனால்ட் டிரம்போ, கமலா ஹாரிஸோ இரண்டு அல்லது மூன்று புள்ளிகளில் முன்னேறி வெற்றியை உறுதி செய்யலாம் என்று பார்க்கப்படுகிறது.
முக்கியமான மாகாணங்களில் வாக்காளர்களை ஈர்க்கவும், அவர்களுக்கு வாக்களிக்க ஊக்கம் தரவும் தாங்கள் வலுவான காரணங்களைக் கொண்டிருப்பதாக இரண்டு வேட்பாளர்களும் நம்புகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் 130 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக, தோல்வி அடைந்த அதிபர் வேட்பாளர் ஒருவர் மீண்டும் அதிபர் ஆவதற்குத் தேவையான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது?
டிரம்ப் அதிபராகக் கூடும், ஏன் தெரியுமா?
1. அவர் அதிகாரத்தில் இல்லை
இந்தத் தேர்தலில் வாக்காளர்களின் முக்கியமான பிரச்னை பொருளாதாரம் தான். வேலைவாய்ப்பின்மை குறைவாக இருக்கும் சூழலில், பங்குச் சந்தையில் முன்னேற்றம் இருக்கின்ற நிலையில், விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியவில்லை என்று அநேக அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.
கடந்த 1970களுக்குப் பிறகு இதுவரை இல்லாத வகையில், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்துள்ள பணவீக்கம், ‘நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?’ என்று வாக்காளர்களை நோக்கிக் கேட்க டிரம்பிற்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி, 2024-ஆம் ஆண்டு உலகெங்கிலும் நடைபெற்ற தேர்தல்களில் பல தலைவர்களை மக்கள் அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துள்ளனர். அமெரிக்க வாக்காளர்களும் மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்கர்களில் கால்வாசி பேர் மட்டுமே அமெரிக்கா சென்று கொண்டிருக்கும் பாதையில் திருப்தி அடைந்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பொருளாதாரம் மோசமாக உள்ளது என்ற கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர்.
கமலா ஹாரிஸ் மாற்றத்திற்கான வேட்பாளர் என்று தன்னை நிறுவ முயன்றார். ஆனால் துணை அதிபராக, மக்களின் அபிப்ராயத்தைப் பெறாத அதிபரான ஜோ பைடனிடம் இருந்து விலகி நிற்க முயல்கிறார்.
2. டிரம்புக்கு குறையாத ஆதரவு
அமெரிக்க நாடாளுமன்றமான கேபிட்டலில் (Capitol) 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்ற வன்முறை, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், குற்ற நிரூபனங்கள், ஆகியவை இருந்தும் கூட ஆண்டு முழுவதும் டிரம்புக்கான ஆதரவு 40% அல்லது அதற்கு மேல் இருந்தது.
ஜனநாயகக் கட்சியினரும், டிரம்ப் வேண்டாம் என்றும் கூறும் பழமைவாதிகளும், அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் டிரம்ப் அரசியல் ஆதாயத்திற்காக பழிவாங்கப்பட்டேன் என்று கூறிய போது அவரின் ஆதரவாளர்கள் பலரும் அதனை ஒப்புக் கொண்டனர்.
‘அவர் இப்படிப்பட்டவர் தான்’ என்ற முன்முடிவு இல்லாத வாக்களர்களை டிரம்ப் வென்றுவிட்டால் போதும்.
3. சட்டத்திற்குப் புறம்பாக குடியேறுபவர்கள் பற்றிய எச்சரிக்கை
பொருளாதார நிலை மட்டுமின்றி, தேர்தல் பல நேரங்களில் உணர்ச்சிப்பூர்வமான முடிவுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்தவரை அது ‘கருக்கலைப்பு’ உரிமை பற்றியது.
டிரம்புக்கோ அந்த உணர்ச்சிப்பூர்வமான பிரச்னை ‘குடியேறிகள்’ தொடர்பானது.
பைடன் ஆட்சியில், எல்லையில் நுழைந்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கை வரலாறு காணாமல் உயர்ந்திருக்கும் நிலையில், சட்டவிரோதக் குடியேறிகளின் பிரச்னை எல்லையைத் தாண்டி வெகு தூரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் வாக்காளர்கள் டிரம்பையே அதிகம் நம்புகின்றனர் என்று கருத்துக்கணிப்பு காட்டுகிறது. மேலும், கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் தற்போது அவர் லத்தீன் அமெரிக்க மக்களுடன் சிறப்பாகப் பணியாற்றுகிறார் என்றும் மக்கள் கருதுவதாக அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.
4. கல்லூரி படிப்பை முடிக்காதவர்களின் ஆதரவு
சங்கப் பணியாளர்கள் போன்ற மறக்கப்பட்ட, கைவிடப்பட்ட வாக்காளர்களை டிரம்ப் அணுகிய விதம் அமெரிக்காவின் அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. இது பாரம்பரியமாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த பலரை குடியரசுக் கட்சியின் ஆதர்வாளர்களாக மாற்றியிருக்கிறது. அமெரிக்கத் தொழிற்சாலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு சுங்கக் கட்டணங்களை விதிக்கும் அவரது கொள்கையும் இதற்கு உதவியிருக்கிறது.
முக்கியமான மாகாணங்களின், கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் டிரம்பிற்கு ஆதரவு அதிகரிக்கும் பட்சத்தில், கல்லூரி படிப்பை முடித்த குடியரசுக் கட்சியினர் அவைடமிருந்து விலகியதன் இழப்பை ஈடுசெய்யும்.
5. நிலையற்ற உலகில் பலமான மனிதராகப் பார்க்கப்படும் டிரம்ப்
டிரம்பின் விமர்சகர்கள், சர்வாதிகார ஆட்சி நடத்தும் தலைவர்களுடன் அவர் கூட்டாகச் செயல்படுவது, அமெரிக்காவின் சர்வதேச உறவுகளை பாதிக்கிறது என்கின்றனர்.
டிரம்ப் ‘எதிர்பாராத வகையில் முடிவுகள் எடுக்கும் தனது குணத்தை’ தன்னுடைய பலமாகக் கருதுகிறார். மேலும், அவர் அதிபராக இருந்த காலத்தில் பெரிய போர்கள் ஏதும் ஆரம்பமாகவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
கோடிக்கணக்கில் நிதியை யுக்ரேனுக்கும், இஸ்ரேலும் அமெரிக்கா அனுப்புகின்ற சூழலில், நிறைய அமெரிக்கர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் அமெரிக்கா பைடனின் ஆட்சியின் கீழ் பலவீனமாக இருக்கிறது என்று கருதுகின்றனர்.
பல வாக்காளர்கள், குறிப்பாக ஆண்கள், கமலா ஹாரிஸைக் காட்டிலும் டிரம்ப் மிகவும் பலமானவர் என்று நம்புகின்றனர்.
கமலா ஹாரிஸ் வெல்லக் கூடும், ஏன் தெரியுமா?
1. அவர் டிரம்ப் இல்லை
டிரம்பிடம் பல சாதகங்கள் இருப்பினும் கூட, அவர் மக்களைப் பிளவுபடுத்தும் நபராகவே இருக்கிறார்.
2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிக வாக்குகளைப் பெற்ற நபராக டிரம்ப் வரலாறு படைத்தார். ஆனாலும் அதனைவிட 70 லட்சம் வாக்காளர்கள் பைடனுக்கு ஆதரவு அளித்தனர்.
இந்த முறை, கமலா ஹாரிஸ், டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்ற அச்சத்தைப் பயன்படுத்துகிறார். அவரை ஒரு ‘பாசிஸ்ட்’ என்று அழைத்தார் கமலா ஹாரிஸ். மேலும், டிரம்ப் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரை விமர்சித்தார்.
ஜூலை மாதம் ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் ( Reuters/Ipsos) நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில், அமெரிக்காவின் நிலைமை ‘கைமீறிப் போவதாக’, ஐந்தில் நான்கு அமெரிக்கர்கள் உணர்வதாகத் தெரிய வந்துள்ளது.
மிதமான குடியரசுக்கட்சி ஆதரவாளர்களும், சார்பற்ற நிலையைக் கொண்ட மக்களும் அமெரிக்காவின் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் வேட்பாளராக தன்னைக் காண்பார்கள் என்று கமலா ஹாரிஸ் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
2. அவர் பைடனும் இல்லை
ஜோ பைடன் தேர்தலில் இருந்து பின்வாங்கிய போது, ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களே அக்கட்சி இந்தத் தேர்தலில் தோற்றுவிடும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
டிரம்பை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையில் இணைந்து, கட்சி உடனடியாக கமலா ஹாரிஸை வேட்பாளராகத் தேர்வு செய்தது.
ஆரம்ப காலத்தில் இருந்தே வேகமாகச் செயல்பட்ட அவர், மிக தெள்ளத்தெளிவான செய்தியை மக்களிடம் கூறி அவர்களுக்கு ஆர்வமூட்டினார்.
பைடனின் மோசமான கொள்கைகளுடன் கமலா ஹாரிஸை இணைத்து குடியரசுக் கட்சியினர் அவர்டை விமர்சித்து வந்தாலும் கூட, அவர்களது சில விமர்சனங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார் ஹாரிஸ்.
மற்றொரு முக்கியமான விஷயம், வயது.
பைடன் மீண்டும் ஆட்சிக்கு வரத் தேவையான உடற்தகுதிகளைக் கொண்டிருக்கிறாரா என்ற கவலை வாக்காளர்களுக்கு இருந்தது என்பதை கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்ச்சியாக நிரூபித்தன.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது டிரம்ப் வெற்றி பெற்றால், வெள்ளை மாளிகைக்குச் செல்லும் மிகவும் வயதான அதிபராக இருப்பார்.
3. பெண்கள் உரிமைகளுக்கு முன்னுரிமை
பெண்களின் கருக்கலைப்பு உரிமையையும், கருக்கலைப்பிற்கான அரசியல் சாசன உரிமையையும் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பிறகு நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இதுவாகும்.
கருக்கலைப்பு உரிமைகள் மீது கவனம் செலுத்தும் வாக்காளர்கள் அனைவரும் ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர். கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல்களிலும் இதை நாம் பார்த்தோம். குறைப்பாக 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல். இந்தப் பிரச்னை நிச்சயமாக முடிவுகளில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த முறை, அரிசோனா உள்பட வெற்றியை தீர்மானிக்கும் 10 மாகாணங்களில், கருக்கலைப்புச் சட்டங்களை எவ்வாறு ஒழுங்குமுறை செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டது. இது ஹாரிஸுக்கு ஆதரவாக முடியக்கூடும்.
அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றை உருவாக்கக் கூடும் என்பதும் கமலாவின் முக்கியத்துவத்தை, பெண் வாக்காளர்கள் மத்தியில், பலப்படுத்தும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
4. கமலாவின் ஆதரவாளர்கள் நிச்சயம் வாக்குச்சாவடிக்கு வருவார்கள்
ஹாரிஸுக்கு ஆதரவு அளிக்கும் குழுக்களான, கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள், முதியவர்கள் ஆகியோர் நேரடியாக வந்து வாக்களிப்பார்கள்.
வாக்களிக்க அதிகமாக ஆர்வத்தைக் காட்டும் குழுக்கள் (high-turnout groups) மத்தியில் ஜனநாயகக் கட்சியினர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.
இளம் ஆண்கள் மற்றும் கல்லூரிப் படிப்பை முடிக்காத குழுக்கள் என்று குறைவான ஆர்வத்தை வெளிப்படுத்தும் குழுக்களின் ஆதரவை டிரம்ப் பெற இயலும்.
நியூயார்க் டைம்ஸ்/சியென்னா நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், பதிவு செய்த வாக்காளர்களில் டிரம்பிற்கான ஆதரவு அதிகமாக இருந்தாலும் 2020-ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வரவில்லை, என்று தெரிவிக்கிறது.
இந்தச் சூழலில் இப்போதைய கேள்வி, இந்த முறையாவது அவர்கள் வாக்களிக்க வருவார்களா?
5. அதிக நன்கொடை- அதிக செலவு
அமெரிக்கத் தேர்தல் அதிகமான செலவீனங்களைக் கொண்டது என்பதில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால் 2024-ஆம் ஆண்டு தேர்தல் மிகப்பெரும் செலவில் நடத்தப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகும்.
ஆனால், அதிகம் செலவு செய்யும் ஆற்றல் ஹாரிஸுக்கு உள்ளது. ஜூலை மாதம் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் அதிகமான நன்கொடைகளைப் பெற்றிருக்கிறார். இது 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து டிரம்புக்கு வந்த நன்கொடைகளைக் காட்டிலும் அதிகம் என்று கூறுகிறது ‘ஃபினாசியல் டைம்ஸ்’ பத்திரிகையின் சமீபத்திய கருத்துக்கணிப்பு.
மேலும், விளம்பரங்களுக்காக டிரம்பை விட இரண்டு மடங்கு கமலா ஹாரிஸ் செலவிட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கடுமையான போட்டியில் இந்த அம்சமும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியல் விளம்பரங்களின் வெள்ளத்தால் ஆடிப்போகியிருக்கும் முக்கியமான மாகாணங்களின் (swing states) வாக்காளர்களின் கையில் இந்தத் தேர்தலின் முடிவு இருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.