நவம்பர் 5ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று முடிவடையவுள்ள பொதுத் தேர்தலில் தங்களது அடுத்த அதிபர் யார் என்பதைத் தீர்மானிக்க அமெரிக்கர்கள் வாக்களிக்கின்றனர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன், வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைப் பொறுத்து, பல மணிநேரங்கள், நாட்கள் அல்லது வாரங்களுக்குக்கூட வெற்றியாளர் யார் என்பது கணிக்கப்படாமல் போகலாம்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்களை இங்குக் காண்போம்.
அமெரிக்க தேர்தல் 2024 முடிவுகள் எப்போது வெளியாகும்?
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே பல வாரங்களாக நெருக்கமான போட்டி நிலவுகிறது.
தேர்தல் நாள் (நவம்பர் 5) நெருங்கி வருவதால் தேசிய மற்றும் ஸ்விங் மாகாண தேர்தல்கள் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளன. மேலும், முடிவுகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிகள் பதிவாகலாம். இதனால் மறு எண்ணிக்கை தேவைப்படலாம்.
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஏழு ஸ்விங் மாகாணங்கள் உள்பட தனிப்பட்ட மாகாணங்கள், 2020 முதல் தங்கள் தேர்தல்களை எவ்வாறு நிர்வகித்தன என்பதில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த ஆண்டு சில முடிவுகள் மிகவும் தாமதமாக வெளிவரக்கூடும்.
மறுபுறம், மிச்சிகன் போன்ற இடங்களில் வாக்கு எண்ணிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது நடைபெற்ற கடந்த 2020 தேர்தலைவிட இந்த முறை மிகக் குறைவான தபால் வாக்குகளே பதிவாகும்.
அதாவது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இதன் பொருள். இதனால், தேர்தல் நாள் இரவிலேயே முடிவுகள் கிடைக்கலாம் அல்லது, மறு நாள் காலையில் அல்லது சில நாட்கள், சில வாரங்களுக்குப் பிறகுகூட வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படலாம்.
2020 அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியானது?
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தல், 2020, நவம்பர் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்தது. ஆனால் அமெரிக்க தொலைக்காட்சி சேனல்கள் நவம்பர் 7 சனிக்கிழமை காலை வரை ஜோ பைடனை வெற்றியாளராக அறிவிக்கவில்லை.
தேர்தல் நாள் இரவில் அமெரிக்கர்கள் உறங்கச் சென்றபோது, டிரம்ப் ஆதரவாளர்கள் தங்களுக்கான வெற்றி நெருங்கிவிட்டது என்று நம்பினர். ஆனால் உண்மையில், இரு வேட்பாளர்களுமே அதிபராகத் தேர்வு செய்யப்படுவதற்குத் தேவையான 270 ‘தேர்வாளர் குழு’ வாக்குகளை எட்டும் தூரத்தில் இருந்தனர்.
பெரும்பான்மையான மாகாணங்கள் 24 மணிநேரத்திற்குள் தங்கள் தேர்தல் பந்தய முடிவுகளை வெளியிட்டாலும், பென்சில்வேனியா, நெவாடா உள்பட ஒரு சில முக்கிய மாகாணங்கள் அவ்வாறு செய்யவில்லை.
பென்சில்வேனியா 19 ‘தேர்வாளர் குழு’ வாக்குகளைக் கொண்டது. அந்த மாகாண வாக்குகள் ஜனநாயகக் கட்சியினரை நோக்கிச் சாய்ந்து கொண்டிருந்தது. சனிக்கிழமை காலையில், அந்த ஸ்விங் மாகாணத்தின் புதிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பைடன்தான் அங்கு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்தன.
சிஎன்என் (CNN) சேனல்தான் முதலில் முடிவை அறிவித்தது. அடுத்த 15 நிமிடங்களில் மற்ற அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் அதைப் பின்தொடர்ந்து முடிவுகளை அறிவித்தன.
வழக்கமாக அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்?
பொதுவாக, தேர்தல் நாள் இரவில் தாமதமாக உறங்கச் செல்லும் நேரத்தில் அல்லது குறைந்தபட்சம் அடுத்த நாள் அதிகாலை நேரத்தில் புதிய அதிபர் யார் என்பதை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வாக்காளர்கள் பழகிவிட்டனர்.
உதாரணமாக, 2016ஆம் ஆண்டில், டிரம்ப் முதன்முதலில் அதிபராக வென்றபோது, தேர்தலுக்கு அடுத்த நாள் அதிகாலைக்கு சற்று முன்பு அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
பராக் ஒபாமா, 2012ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டபோது, வாக்குப்பதிவு நாளின் நள்ளிரவுக்கு முன்பே அவரது வெற்றி கணிக்கப்பட்டது.
ஆனால் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் ஜான் கெர்ரி இடையிலான 2000ஆம் ஆண்டு அதிபர் தேர்தல், இந்த நூற்றாண்டில் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக உள்ளது.
இரு வேட்பாளர்களும் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒரு நெருக்கமான போட்டியை எதிர்கொண்டனர். டிசம்பர் 12 வரை யார் வெற்றியாளர் என்பது முடிவு செய்யப்படவில்லை.
அப்போது அமெரிக்க உச்சநீதிமன்றம் மாகாணத்தின் மறுவாக்கு எண்ணிக்கை செயல்முறையை முடிவுக்குக் கொண்டு வரத் தீர்மானித்தது. சான்றளிக்கப்பட்ட வெற்றியாளராக புஷ் அறிவிக்கப்பட்டு, வெள்ளை மாளிகை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கவனிக்க வேண்டிய முக்கிய மாகாணங்கள் எவை?
நாடு முழுவதும், முதல் வாக்கெடுப்புகள் செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க நேரப்படி மாலை 6 மணிக்கு (1800 EST), அதாவது இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு முடிவடையும். கடைசி வாக்கெடுப்புகள் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு (0100 EST), அதாவது இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு முடிவடையும்.
ஆனால் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய ஏழு மாகாணங்களின் முடிவுகளால்தான் இந்த அதிபர் தேர்தல் போட்டி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 7 மணிக்கு (1900 EST), அதாவது இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு – ஜார்ஜியா மற்றும் ஐந்து பிற மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிவடையும். மேலும் மூன்று மாகாணங்களில் குறிப்பிட்ட சதவீத வாக்குப் பதிவு முடிவுக்கு வரும். அமெரிக்க தொலைக்காட்சி சேனல்கள், கென்டக்கி போன்ற குறைவான போட்டி நிலவும் மாகாணங்களின் முடிவுகளை, தேர்தல் நாள் இரவின் முதல் அறிவிப்புகளாக வழங்கத் தொடங்கும் நேரமும் இதுதான்.
இரவு 7:30 மணிக்கு (1930 EST), அதாவது இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு – வட கரோலினா உள்பட நான்கு மாகாணங்களில் வாக்குப் பதிவு முடிவடையும். அங்கு 2008 முதல் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர்கள் சந்தித்து வரும் தொடர்ச்சியான தோல்விகளுக்குத் தன்னால் முற்றுப் புள்ளி வைக்க முடியுமென கமலா ஹாரிஸ் நம்புகிறார்.
இரவு 8 மணிக்கு (2000 EST), அதாவது இந்திய நேரப்படி காலை 6.30 – பென்சில்வேனியா மற்றும் 16 பிற மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிவடையும். அதே நேரம் மிச்சிகன் மற்றும் நான்கு பிற மாகாணங்களிலும் குறிப்பிட்ட சதவீத வாக்குப்பதிவு முடிவுக்கு வரும்.
இரவு 9 மணிக்கு (2100 EST), அதாவது இந்திய நேரப்படி காலை 7.30 – மிச்சிகனில் மீதமுள்ள அனைத்து வாக்குப் பதிவுகளும் முடிவடையும். அரிசோனா, விஸ்கான்சின் மற்றும் 12 பிற மாகாணங்களிலும் குறிப்பிட்ட சதவீத வாக்குப்பதிவு முடிவுக்கு வரும்.
இரவு 10 மணிக்கு (2200 EST), அதாவது இந்திய நேரப்படி காலை 8.30 – நெவாடா மற்றும் இரண்டு பிற மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிவடையும். மேலும் இரண்டு மாகாணங்களில் குறிப்பிட்ட சதவீத வாக்குப் பதிவு முடிவுக்கு வரும்.
வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடத்தப்படுகிறது?
வழக்கமாக, தேர்தல் நாளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் முதலில் கணக்கிடப்படும். அதைத் தொடர்ந்து முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள், தபால் வாக்குகள், சந்தேகத்திற்குரிய வாக்குகள், பின்னர் வெளிநாட்டு மற்றும் ராணுவ வாக்குகள் கணக்கிடப்படும்.
உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் (சில நேரங்களில் நியமிக்கப்படுகிறார்கள், சில நேரங்களில் தேர்வு செய்யப்படுகிறார்கள்) கேன்வாசிங் (Canvassing) என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையில் தனிப்பட்ட வாக்குகளைச் சரிபார்க்கிறார்கள் மற்றும் எண்ணுகிறார்கள்.
வாக்குச் சீட்டுகளைச் சரிபார்ப்பது என்பது பதிவான வாக்குச் சீட்டு எண்ணிக்கையை, வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுவது. மேலும் இதில் ஒவ்வொரு வாக்குச் சீட்டையும் பிரித்துப் பார்த்து, ஏதேனும் சேதமடைந்துள்ளதா எனப் பரிசோதிப்பது மற்றும் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதை ஆவணப்படுத்துதல் மற்றும் விசாரித்தல் ஆகியவையும் அடங்கும்.
வாக்குச் சீட்டுகளை எண்ணுவது என்பது ஒவ்வொன்றையும் அவற்றின் முடிவுகளை அட்டவணைப்படுத்தும் மின்னணு ஸ்கேனர்களில் செலுத்துவதை உள்ளடக்குகிறது. சில சூழ்நிலைகளில் கைகளால் எண்ணுவது அல்லது இரண்டு முறை சரிபார்ப்பது தேவைப்படுகிறது.
கேன்வாசிங் செயல்முறையில் யார் பங்கேற்கலாம், வாக்குகள் செயலாக்கப்படும் வரிசை மற்றும் எந்தெந்த பகுதிகள் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன, வாக்கு எண்ணிக்கையில் பக்கச்சார்பான பார்வையாளர்கள் எவ்வாறு கண்காணிக்கலாம் மற்றும் தலையிடலாம் என்பது உள்பட ஒவ்வொரு மாகாணத்திலும் வட்டாரத்திலும் தேர்தல் தொடர்பான கடுமையான விதிகள் உள்ளன.
அதிபர் தேர்தல் முடிவை தாமதப்படுத்துவது எது?
குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளியானால், அது செய்தி ஊடகங்கள் தங்கள் கணிப்புகளை வெளியிடக் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.
அது மட்டுமல்லாது அத்தகைய முடிவுகள் மறுவாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டரீதியான சவால்கள் போன்ற பெரிய பிரச்னைகளையும் எழுப்புகின்றன.
உதாரணமாக, பென்சில்வேனியாவில், வெற்றியாளருக்கும் தோல்வியுற்றவருக்கும் இடையில் 0.005 சதவீத வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்தால், மாகாண அளவிலான மறுவாக்கு எண்ணிக்கை தானாகவே நடைமுறைக்கு வந்துவிடும். 2020ஆம் ஆண்டில், இந்த வித்தியாசம் 1.1 சதவீத புள்ளிகளுக்கு மேல் இருந்தது.
தாமதத்தை ஏற்படுத்தக் கூடிய பிற சூழ்நிலைகளில் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் (குறிப்பாக வாக்குச் சாவடிகளில்) மற்றும் 2020ஆம் ஆண்டில் ஜார்ஜியாவில் ஒரு வாக்குச்சீட்டு செயலாக்க தளத்தில் தண்ணீர் குழாய் வெடித்தது போன்ற வாக்கு எண்ணிக்கைக்கான தடைகள், ஆகியவை அடங்கும்.
அதிபர் தேர்தல் முடிவுகள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்?
ஒவ்வொரு அதிகாரப்பூர்வ வாக்கும் இறுதி முடிவுகளில் சேர்க்கப்பட்டவுடன், மறுவாக்கு எண்ணிக்கை போன்ற செயல்முறைகள் முடிந்த பிறகு, தேர்தல் முடிவுகள், முதலில் உள்ளூர் அதிகார வரம்புகளில், பின்னர் மாகாண அளவில், சான்றளிக்கப்படுகின்றன.
பிறகு ஒரு மாகாண நிர்வாகி (பொதுவாக ஆளுநர்) ‘தேர்வாளர் குழுக்களில்’ தங்கள் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்காளர்களின் பட்டியலுக்கு சான்றளிக்கிறார். இந்த வாக்காளர்கள் டிசம்பர் 17 அன்று அந்தந்த மாகாணங்களில் கூடி வாக்களித்து, அதை வாஷிங்டனுக்கு அனுப்புகிறார்கள்.
ஜனவரி 6 அன்று, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் செனட் சபை கூடி, தேர்வாளர் குழு வாக்குகளை எண்ணும் செயல்முறையில் ஈடுபடும். அதற்கு தற்போதைய துணை அதிபர் தலைமை தாங்குவார்.
முன்னாள் அதிபர் டிரம்ப், 2020 தேர்தலுக்குப் பிறகு, தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, அமெரிக்க தலைநகரை நோக்கி அணிவகுத்துச் செல்ல ஆதரவாளர்களை அணிதிரட்டினார். அப்போது அங்கு பைடனின் வெற்றியைச் சான்றளிக்க காங்கிரஸ் செனட் சபை கூடியிருந்தது.
முடிவுகளை நிராகரிக்குமாறு அவர் தனது துணை அதிபர் மைக் பென்ஸை வலியுறுத்தினார், ஆனால் பென்ஸ் மறுத்துவிட்டார்.
கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு, செனட் சபை உறுப்பினர்கள் மீண்டும் அணிதிரண்ட பின்னரும்கூட, 147 குடியரசுக் கட்சியினர் டிரம்பின் தோல்வியை மாற்ற வாக்களித்தனர்.
அப்போதிருந்து தனிப்பட்ட மாகாணங்களில் இருந்து அனுப்பப்பட்ட சான்றளிக்கப்பட்ட முடிவுகளை சட்டமியற்றுபவர்கள் ஆட்சேபிப்பதை தேர்தல் சீர்திருத்தங்கள் கடினமாக்கியுள்ளன.
மேலும் தேர்வாளர் குழு வாக்குகளை ஒருதலைபட்சமாக நிராகரிக்க துணை அதிபருக்கு அதிகாரம் இல்லை என்பதையும் தேர்தல் சீர்திருத்தங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
ஆயினும்கூட, தேர்தல் முடிவுகளில் சந்தேகத்தை விதைக்கப் பல குழுக்கள் தயாராகி வருவதால், 2024 வாக்குகளைச் சான்றளிப்பதைத் தாமதப்படுத்தும் முயற்சிகள் உள்ளூர் மற்றும் மாகாண அளவில் நடைபெறக் கூடும் என்று தேர்தல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டிரம்ப், அவரது சக வேட்பாளர் ஜே.டி.வான்ஸ் மற்றும் கேபிடல் ஹில்லில் உள்ள உயர்நிலை குடியரசுக் கட்சித் தலைவர்கள், எதிர்மறையான தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வார்களா என உறுதியாகக் கூற பல சந்தர்ப்பங்களில் மறுத்துவிட்டனர்.
புதிய அதிபர் பதவியேற்பது எப்போது?
அடுத்த அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்படுபவர், 2025, ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அமெரிக்க கேபிடல் வளாகத்தின் மைதானத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.
அமெரிக்க வரலாற்றில் நடைபெறவிருக்கும் 60வது அதிபர் பதவியேற்பு விழா இது.
இந்த நிகழ்வில் புதிய அதிபர் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியுடன் பதவியேற்பார், பின்னர் தொடக்க உரையை நிகழ்த்துவார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.