பட மூலாதாரம், EPA
பாலத்தீனத்தை தனிநாடாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நாவில் அங்கீகரித்தது, நூறாண்டு பழமையான இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் ஓர் வரலாற்று தருணமாக அமைந்தது.
ஆனால், இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டத்தை இந்த மோதல் அடைந்துள்ளதாக, முக்கிய ஐரோப்பிய நாடுகள் எப்படி நம்புகிறது என்பதை காட்டும் ராஜீய ரீயிலான சூதாட்டமாகவும் இது உள்ளது.
காஸாவில் தற்போது நடக்கும் பேரழிவுக்கு எதிர்வினையாகவும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்புக்கும் கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறுகையில், “வலியதை விட நியாயம் வெல்ல வேண்டும்” என தெரிவித்தார்.
பிரிட்டனுடன் இணைந்து, சௌதியால் ஆதரிக்கப்படும் மக்ரோங்கின் இந்த நடவடிக்கை, இரு நாடு தீர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட முறையே (இரு நாடு தீர்வு), இரு சமூகங்களுக்கு நியாயமான மற்றும் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான ஒரே வழியாக அவர்கள் நம்புகின்றனர்.
இதற்கு மாற்றாக “ஒரு நாடு” தீர்வை நியூ யார்க்கில் நடைபெற்ற ஐநா மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் முன்வைத்தார். இஸ்ரேலின் ஆதிக்கத்தையும் பாலத்தீனர்கள் “அடிபணிதலையும்” “ஒரு நாடு” தீர்வு என அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
பாலத்தீனர்களுக்கு எதிரான கூட்டு தண்டனை, பசி கொடுமை அல்லது எந்த விதமான இன அழிப்பையும் எதனாலும் நியாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.
இதனால் கோபமடைந்த இஸ்ரேல், இதற்கு எதிர்வினையாற்றும் என தெரிவித்துள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலத்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த நடவடிக்கை மற்றும் ஐநா மாநாடு ஆகியவற்றை அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் பணயக்கைதிகளை பிடித்ததற்காக ஹமாஸுக்கு வழங்கிய வெகுமதியாக இஸ்ரேல் பார்க்கிறது.
இஸ்ரேல் என்ன நினைக்கிறது?
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பு, இதற்கு எதிர்வினையாக இருக்க வேண்டும் என, சில இஸ்ரேலிய அமைச்சர்கள் விரும்புகின்றனர். இதன்மூலம் அப்பிராந்தியத்தில் பாலத்தீன நாட்டுக்கான சாத்தியத்தை நிரந்தரமாக நிராகரிக்க நினைக்கின்றனர்.
இரு நாடு தீர்வு எட்டப்படாமல் தடுப்பதே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் நோக்கமாக உள்ளது, பாலத்தீனர்களை நீக்கிவிட்டு யூத குடியிருப்புகளை அமைப்பதுதான் அவர்களின் கொள்கையாக உள்ளது.
பட மூலாதாரம், EPA
தங்களின் நட்பு நாடான இஸ்ரேலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது, பாலத்தீன அதிகார சபை (Palestinian Authority (PA) தலைவர் மஹ்மூத் அப்பாஸுக்கு கண்டனம் தெரிவிக்கிறது.
நியூ யார்க் மாநாட்டில் அவர் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது, எனினும் அவர் காணொளி வாயிலாக அதில் உரையாற்றினார்.
பாலத்தீன மாநாடு மற்றும் அதுகுறித்த டிரம்ப் நிர்வாகத்தின் எதிர்வினை, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலை எப்படி தீர்ப்பது என்பதில் இதுவரையில் இல்லாத அளவில் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது.
ஆனால், களச்சூழலை பொறுத்தவரையில் தங்களுக்கு குறுகிய வாய்ப்பே உள்ளதாக, ஐரோப்பியர்கள் நம்புகின்றனர்.
காஸாவில் நாள்தோறும் பாலத்தீனர்கள் பலர் கொல்லப்படும் நிலையில், காஸா நகரத்தில் இஸ்ரேல் தற்போது மூன்றாவது ராணுவ பிரிவை அனுப்பியுள்ளது; ஹமாஸ் இன்னும் தன்னுடன் சுமார் 50 பணயக்கைதிகளை வைத்துள்ளது, அவர்களுள் பலரும் இறந்துள்ளனர்; இதனிடையே மேற்கு கரை இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கம் மற்றும் அதுதொடர்பான வன்முறையின் பிடியில் உள்ளது.
அக்டோபர் 7 தாக்குதல்கள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகிவிட்டன, ஆனால் மேலதிக ராணுவ அழுத்தம் இஸ்ரேல் வலியுறுத்துவதைப் போன்று ஹமாஸ் சரணடைவதை நோக்கித் தள்ளும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.
மக்ரோங்கின் வியூகம்
ராஜீய ரீதியிலான முயற்சிகள் நல்லதொரு மாற்றாக இருக்கும் என்பதை காட்டுவதற்கான வழியாக மக்ரோங்கின் வியூகம் உள்ளது.
அதாவது, முதலில் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான செயல்படுத்தத்தக்க தீர்வு, அடுத்ததாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் என்ற இருநாட்டு தீர்வை நீண்ட கால தீர்வாக அடைவது.
இஸ்ரேலின் வியூகம் தோல்வியடைந்துவிட்டதாக கூறும் ஐரோப்பிய நாடுகள், அது பொதுமக்களை மேலும் துன்புறுத்துதல் மற்றும் மீதமுள்ள பணயக்கைதிகளை ஆபத்தில் தள்ளுதல் ஆகியவற்றுக்கே இட்டுச் செல்லும் என வாதிடுகின்றன.
முக்கியமாக, ஐநா மாநாட்டை சௌதி அரேபியா தலைமை தாங்கி நடத்தியது, மேலும் அரபு லீக்கால் (Arab League) ஆதரிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், முக்கியமான அரபு நாடுகள் ஹமாஸை ஆயுதங்களை கைவிட்டு, அவற்றை பாலத்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் தங்கள் ராஜீய ரீதியிலான நடவடிக்கை எத்தகைய செல்வாக்கை அந்த அமைப்பு மீது செலுத்த முடியும் என்பதையும், எதிர்காலத்தில் பாலத்தீனர்களுக்கு ஹமாஸ் தலைமை தாங்குவதை தடுக்க முடியும் என்பதையும் காட்டுவதாக பிரான்ஸ் வாதிடுகிறது.
இந்த நடவடிக்கை மூலம், நெதன்யாகு மற்றும் டிரம்புக்கு அதன் நீண்ட கால இலக்கான சௌதி அரேபியாவுடனான உறவுகளை இயல்பாக்கிக்கொள்வதற்கு வழிகோலுவதால், இது இஸ்ரேலுக்கு ஓர் ஊக்கத்தையும் அளிப்பதாக மக்ரோங் நம்புகிறார்.
பட மூலாதாரம், EPA
ஆனால், அமெரிக்காவின் விருப்பங்களுக்கு எதிராக பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் முடிவு, ராஜீய ரீதியிலான ஆபத்தாகவே உள்ளது.
ஐநா மேடை முன்பு மக்ரோங் நின்றிருப்பதை பார்க்கும்போது, காஸாவின் “ஓர் கெட்ட கனவிலிருந்து” தப்பிக்க வழி தேடும், பகிரப்பட்ட இஸ்ரேலிய-பாலத்தீன எதிர்காலத்தைத் தேடும் ஓர் உலகத் தலைமைப் பொறுப்பை வகிக்க முயற்சிக்கும் ஓர் அதிபரை நீங்கள் காண்கிறீர்கள் என, ஐநா பொதுச் செயலாளர் விவரித்தார்.
ஆனால் அதிகாரத்தைப் பொறுத்தமட்டில், மக்ரோங் அதற்கானவர் அல்ல.
அமெரிக்கா இந்த முயற்சிகளுக்கு தலைமை தாங்காத வரை, அந்நாட்டால் மட்டுமே அனைத்துத் தரப்பிலிருந்தும் உருவாக்கப்படக்கூடிய அழுத்தம் ஏற்படாது.
டிரம்பின் நிராகரிப்பு
ஐரோப்பாவின் அணுகுமுறையை டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
டிரம்ப் செவ்வாய்கிழமை ஐ.நாவில் உரை நிகழ்த்தினார். இதில் பேசிய அவர் “பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிப்பது, ஹமாஸின் அட்டூழியங்களுக்கு வெகுமதி அளிப்பதாகும்” என்று பேசினார்.
அதன் பின் அவர் அரபு நாடுகளின் தலைவர்களை டிரம்ப் சந்திக்கிறார். ஆனால், திங்களன்று அத்தலைவர்கள் மேற்கொண்ட பணிக்கு முற்றிலும் மாறானதாக இது உள்ளது.
முக்கியமான நாடுகளிடையே போதிய ஒத்துழைப்பு இல்லாதது அது செயலிழந்த உணர்வை அதிகரிக்கிறது, ஏனெனில் இம்மாத தொடக்கத்தில் இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்களை கத்தாரில் தாக்கியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-ஹமாஸுக்கு இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு இன்னும் கத்தார் தயங்குகிறது. கத்தார் இரு தரப்புக்கும் இடையே முன்பு மத்தியஸ்தம் செய்வதில் முக்கிய பங்காற்றியது.
ஆனால், மக்ரோங் மற்றும் ஸ்டாமர் இருவரும் தங்கள் நாடுகளின் காலனிய வரலாறு குறித்து மத்தியக் கிழக்கில் பேசியுள்ளனர்.
1948 ஆம் ஆண்டு பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலத்தீனத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சர்வதேச சமூகம் இஸ்ரேல் அரசை எவ்வாறு அங்கீகரித்தது என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
தற்போது இருவரும் பாலத்தீனர்களுக்கு தங்களின் சொந்த நாட்டில் சம உரிமைகளை அங்கீகரிப்பதாக கூறுகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளின் அங்கீகாரத்தை வரவேற்கும் பாலத்தீனர்கள், அந்நாடுகள் கடந்த காலத்தில் வல்லரசுகளாக இருந்ததை அறிந்துள்ளனர்.
அவர்களின் முடிவுகள் ஒரு காலத்தில் இருந்ததுபோன்று தற்போது முக்கியத்துவம் பெறுவதில்லை.
மேலும், அதிபர் டிரம்பிடம் வேறு யோசனைகளும் உள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு