பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், அந்தோனி ஸுர்ச்சர்
- பதவி, வட அமெரிக்க செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்காவில் பல மாதங்களாகத் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று, பில்லியன்கணக்கான டாலர்கள் செலவிடப்பட்ட நிலையில், இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் வந்துவிட்டது.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. ஆனால், கருத்துக்கணிப்புகள் எப்போதும் துல்லியமாக இருந்ததில்லை. இந்த ஆண்டும் ஆச்சர்யமூட்டும் முடிவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, அமெரிக்கர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த பிறகு மூன்று விதமான முடிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவை என்னென்ன, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்பக்கட்ட முடிவுகளில் என்னென்ன அறிகுறிகள் தென்படலாம், அவை அமெரிக்காவுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம்.
1. ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான அலை
கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, இடைக்காலத் தேர்தல்கள் பொதுவாக ஆட்சியில் இல்லாத கட்சிக்கே சாதகமாக அமையும்.
கருத்துக் கணிப்புகளின்படி, வரலாறு காணாத அளவுக்கு பதவியில் உள்ள அதிபருக்கு மக்கள் ஆதரவு சரிவு, இரான் போரால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, தீவிரமான குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தரவு மையங்கள் கட்டுமானத்துக்கு ஆதரவளிப்பது போன்ற சர்ச்சைக்குரிய கொள்கைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டால், தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய மாற்றத்தைத்தான் ‘தேர்தல் அலை’ என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த சூழலில், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக மிகப்பெரிய அலை வீசும். பெரும்பான்மைக்குத் தேவையான தேவையான 218 இடங்களையும் விட அதிக இடங்களை பிடித்து பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றக் கூடும்.
தேர்தல் ஆய்வாளர்களால் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்க முடியாத அளவுக்கு நெருக்கமான போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ள சுமார் 12 தொகுதிகளில் மட்டுமின்றி, குடியரசுக் கட்சியினருக்கு வலுவான ஆதரவு உள்ள சில இடங்களையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்ற வாய்ப்புள்ளது.
செனட் சபையிலும் இந்தச் சூழல் ஏற்பட வேண்டுமானால், பாரம்பரியமாகக் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான மாகாணங்கள் உள்பட, தற்போது இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக உள்ள பெரும்பாலான அல்லது அனைத்து இடங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற வேண்டும்.
பல ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெறாத டெக்சாஸ் அல்லது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக ஜனநாயகக் கட்சியினர் வெற்றிபெறாத கன்சாஸ் போன்ற மாகாணங்களில் குறைந்தபட்சம் ஒரு பிரமாண்டமான வெற்றியையாவது அக்கட்சி பெற வேண்டும்.
இத்தகைய முடிவு ஏற்பட்டால், செனட் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றுவது மட்டுமின்றி, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட ஒன்று அல்லது இரண்டு இடங்களைக் கூடுதலாகப் பெறுவார்கள்.
இதன் மூலம், அலாஸ்காவில் குடியரசுக் கட்சியினர் தொடரக்கூடிய சட்டரீதியான சவால்கள் தொடர்பான சர்ச்சைகளையும் தவிர்க்க முடியும். ஒரே பெயரைக் கொண்ட இரண்டு டான் சல்லிவன்கள் (வேட்பாளர் பெயர்) வாக்குச்சீட்டில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை அங்குள்ள நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார்.
ஜனநாயகக் கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களை அதிக அளவில் வாக்களிக்கச் செய்வதன் மூலமும், நடுநிலை வாக்காளர்களின் கணிசமான ஆதரவைப் பெறுவதன் மூலமும் இத்தகைய வெற்றியைப் பெறக்கூடும். இதன்மூலம், ஹிஸ்பானிக் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களிடையே 2024-ல் டிரம்ப் பெற்றிருந்த ஆதரவை ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் தங்கள் பக்கம் திருப்பக்கூடும். குடியரசுக் கட்சியின் சில வாக்காளர்கள்கூட ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்காமல் வீட்டிலேயே தங்கிவிடலாம்.
இத்தகைய தேர்தல் முடிவு டிரம்புக்கும் அவரது குடியரசுக் கட்சிக்கும் மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
சட்டமியற்றும் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றி புத்தெழுச்சி பெறக்கூடிய ஜனநாயகக் கட்சிக்கும், எந்தவொரு மோதலிலிருந்தும் பின்வாங்காத அதிபருக்கும் இடையே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான அரசியல் மோதல் ஏற்படலாம்.
வாக்கு எண்ணிக்கையின் போது கவனிக்க வேண்டிய ஆரம்பக்கட்ட அறிகுறிகள்:
ஜனநாயகக் கட்சி, புளோரிடாவில் இலக்காக வைத்துள்ள பிரதிநிதிகள் சபை இடங்களை தக்க வைத்துக்கொண்டு, வட கரோலினா, மிச்சிகன், நியூயார்க், விர்ஜீனியா, கென்டக்கி போன்ற மாகாணங்களில் குடியரசுக் கட்சியின் இடங்களையும் கைப்பற்றினால், அது அக்கட்சிக்குச் சாதகமான இரவாக அமையும்.
தெற்கு கரோலினாவில் செனட் இடத்தையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றினால், அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.
2. ஜனநாயகக் கட்சிக்கு மிதமான வெற்றி
கருத்துக் கணிப்புகள் முழுமையாகத் தவற வாய்ப்பில்லை. அதேபோல, எப்போதும் கணித்தபடி அப்படியே நடந்துவிடுவதும் இல்லை.
இந்தச் சூழலில், பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் எளிதில் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்று, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றலாம். ஆனால், அந்தப் பெரும்பான்மை பெரிய அளவில் இருக்காது.
இதனால், சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான வாக்குகளைப் பெற, ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சிக்குள் உள்ள இடதுசாரி மற்றும் மிதவாத உறுப்பினர்களுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும்.
செனட் சபையைப் பொறுத்தவரை, இந்தக் கற்பனையான சூழலில் ஜனநாயகக் கட்சி ஓரிரு இடங்களை மட்டுமே கைப்பற்றலாம். உதாரணமாக, வடக்கு கரோலினாவில் அக்கட்சியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், குடியரசுக் கட்சிக்கு வலுவான ஆதரவு உள்ள மாகாணங்களில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கலாம்.
ஒருவேளை, ஜனநாயகக் கட்சியால் மெய்னே மாகாணத்தில் குடியரசுக் கட்சியின் செனட்டர் சூசன் காலின்ஸைத் தோற்கடிக்க முடியாமல் போகலாம். அல்லது ஜனநாயகக் கட்சியின் இடதுசாரி வேட்பாளர் அப்துல் எல்-சயீத்தால், மிச்சிகன் மாகாணத்தை தக்கவைக்க முடியாமல் போகலாம்.
அலாஸ்காவில் ஒரே பெயரைக் கொண்ட இரண்டு வேட்பாளர்கள் தொடர்பான சர்ச்சை, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மேரி பெல்டோலாவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம்.
‘ஜனநாயகக் கட்சிக்கு மிதமான வெற்றி’ என்ற சூழல் உருவாக வேண்டுமானால், முன்கூட்டிய வாக்குப்பதிவில் ஜனநாயகக் கட்சியினருக்குக் கிடைத்த அதிகப்படியான வாக்குப்பதிவுக்கு ஈடாக, தேர்தல் நாளில் குடியரசுக் கட்சியினரின் வாக்குப்பதிவும் அதிகரிக்க வேண்டும்.
குடியரசுக் கட்சிக்கு வலுவான ஆதரவு உள்ள மாகாணங்களில், தனது ஆதரவாளர்களைத் திரட்ட டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், அக்கட்சி மிக மோசமான தேர்தல் முடிவைச் சந்திப்பதைத் தவிர்க்க உதவக்கூடும். கருத்துக்கணிப்புகளில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட இடங்களில், இரு கட்சிகளுக்கும் கலவையான முடிவுகள் கிடைக்கலாம்.
இதன் விளைவாக, நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் வெவ்வேறு கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். இத்தகைய அதிகாரப் பகிர்வு, அரசியல் முட்டுக்கட்டைக்கு வழிவகுக்கக்கூடும்.
வாக்கு எண்ணிக்கையின்போது கவனிக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகள்:
புளோரிடா மாநிலத்தில் குடியரசுக் கட்சி தனது ஆதரவைத் தொடர்ந்து வலுவாகத் தக்கவைத்துக்கொண்டால் அது ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கும்.
விர்ஜீனியா, பென்சில்வேனியா போன்ற இடங்களில் ஜனநாயகக் கட்சி சில பிரதிநிதிகள் சபை இடங்களைக் கைப்பற்றி, நாடு முழுவதும் அரசியல் ரீதியாக வலுவான நிலையில் உள்ள குடியரசுக் கட்சியின் தற்போதைய உறுப்பினர்கள் பெரிய தோல்வியைச் சந்திக்காமல் தப்பினால், அது இந்தச் சூழலுக்கு வலுசேர்க்கும்.
3. குடியரசுக் கட்சிக்கு சாதகமான தேர்தல் முடிவு
பட மூலாதாரம், Reuters
இந்தச் சூழலில், குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளும்.
இது நடக்க வேண்டுமானால், டிரம்புக்கான ஆதரவை குறைத்து மதிப்பிட்டுள்ள கருத்துக்கணிப்புகள் மீண்டும் தவறாக இருக்க வேண்டும். இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக உள்ள இடங்களில் பெரும்பாலானவற்றில் குடியரசுக் கட்சி வெற்றிபெற வேண்டும்.
குடியரசுக் கட்சி வாக்காளர்கள் எதிர்பாராத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். அதேபோல், டிரம்பின் கொள்கைகள் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகக் கருதப்பட்ட நடுநிலை மற்றும் ஹிஸ்பானிக் வாக்காளர்களும் இறுதியில் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
இந்தச் சூழலில், பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றுவது உறுதி என்ற நிலை மாறி, கலிஃபோர்னியா மாகாணத்தையும், அங்குப் பதிவான அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காக நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் நடைமுறையைப் பொறுத்தும் முடிவுகள் அமையலாம்.
இறுதியில், டெக்சாஸ், புளோரிடா மற்றும் வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் குடியரசுக் கட்சிக்குச் சாதகமான வகையில் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்ததன் பலனாக, அக்கட்சி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஒட்டுமொத்தப் பெரும்பான்மையைப் பெறலாம்.
பாரம்பரியமாக குடியரசுக் கட்சிக்கு வலுவான ஆதரவு உள்ள மாகாணங்களில் நடைபெறும் அனைத்து செனட் தேர்தல்களிலும் அக்கட்சி வெற்றிபெறலாம். அதுமட்டுமின்றி, தேர்தலுக்கு முன்பு ஜனநாயகக் கட்சியின் வசம் இருந்த மிச்சிகன் மாகாணத்தையும் கைப்பற்றலாம்.
வடக்கு கரோலினாவிலும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மின்னசோட்டா, நியூ ஹாம்ப்ஷயர் ஆகிய மாகாணங்களிலும் வெற்றிபெறாவிட்டாலும், அங்குள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்தலாம்.
இது நடந்தால், புதன்கிழமை காலை டிரம்ப் மீண்டும் மக்களின் தேர்தல் ஆதரவைப் பெற்றுள்ளதாக அறிவித்து, குடியரசுக் கட்சி கட்டுப்பாட்டில் வரும் நாடாளுமன்றத்தின் ஆதரவுடன் தனது உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கலாம்.
வாக்கு எண்ணிக்கையின் போது கவனிக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகள்:
புளோரிடாவில் செனட்டர் ஆஷ்லே மூடியும், ஒஹாயோவில் செனட்டர் ஜான் ஹஸ்டெடும் எளிதாக வெற்றிபெற்றால் அது குடியரசுக் கட்சிக்குச் சாதகமான அறிகுறியாக இருக்கும்.
பென்சில்வேனியா மற்றும் விர்ஜீனியாவில் பிரதிநிதிகள் சபைத் தேர்தல்களில் குடியரசுக் கட்சி தனது இடங்களைத் தக்க வைத்துக்கொண்டால், வடக்கு கரோலினா, ஒஹாயோ மற்றும் புளோரிடாவில் ஜனநாயகக் கட்சியின் தற்போதைய இடங்களைக் கைப்பற்றினால், அது குடியரசுக் கட்சிக்கு நல்ல முடிவாக அமையும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு