0
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் புதன்கிழமை நடைபெற்ற குடியேற்ற அமலாக்க (ICE) நடவடிக்கையின் போது, 37 வயதுடைய பெண் ஓட்டுநர் ஒருவர் தனது குடும்ப உறுப்பினரின் முன்னிலையில் தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் சூழலில், இந்தத் துப்பாக்கிச் சூடு பெரும் அரசியல் மற்றும் சமூக சர்ச்சையாக மாறியுள்ளது.
2020-ல் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலை நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள பனிமூட்டமான குடியிருப்புப் பகுதியில், காலை 9.30 மணிக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்திய ICE அதிகாரி, தன்னை மற்றும் சுற்றியிருந்தவர்களைப் பாதுகாப்பதற்காக தற்காப்பு நடவடிக்கையாக சுட்டதாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால், மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து, அது முற்றிலும் பொறுப்பற்றதும் தேவையற்றதும் எனக் கூறினார்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், இந்தச் சம்பவத்தை “உள்நாட்டு பயங்கரவாதச் செயல்” என்று வர்ணித்தார். அந்தப் பெண் ICE அதிகாரிகளை ஏமாற்றி, வாகனத்தால் மோத முயன்றதாகவும், அதனால் அதிகாரி தன்னை மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் சமூக ஊடகங்களில் ICE அதிகாரிகளின் செயலை ஆதரித்து, உயிரிழந்த பெண் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆனால், வெளியான வீடியோ காட்சிகள் வேறு ஒரு நிலையை காட்டுகின்றன. ICE அதிகாரிகள், அந்தப் பெண்ணின் ஹோண்டா பைலட் வாகனத்தின் கதவைத் திறக்கக் கோரி கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், வாகனம் மெதுவாக முன்னே நகர்ந்ததும் அருகில் இருந்த அதிகாரி துப்பாக்கியை எடுத்து குறைந்தது இரண்டு முறை சுட்டுள்ளார்.
சாட்சிகளின் கூற்றுப்படி, வாகனம் அதிகாரியை நேரடியாகத் தாக்கியதா என்பது தெளிவாக இல்லை. துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, அந்த SUV அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் மோதி நின்றது. சுற்றியிருந்தவர்கள் அலறி ஓடினர். அவசர மருத்துவக் குழு ஓட்டுநரை மீட்க முயன்ற போதும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
மேயர் ஃப்ரே, உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளரின் விளக்கத்தை கடுமையாக நிராகரித்து, “நான் வீடியோவை பார்த்தேன். இது தற்காப்பு நடவடிக்கையாக இருக்க முடியாது. இது முற்றிலும் முட்டாள்தனம்,” என்று கூறினார். ICE அதிகாரிகள் உடனடியாக மினியாபோலிஸை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “அவர்கள் பாதுகாப்பை வழங்கவில்லை; அவர்கள் பயத்தையும் குழப்பத்தையும் மட்டுமே உருவாக்குகிறார்கள். குடும்பங்களைப் பிரிக்கிறார்கள். இப்போது மக்களைக் கொல்கிறார்கள்,” என அவர் கண்டனம் தெரிவித்தார்.
டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டு ஏற்பட்ட ஐந்தாவது உயிரிழப்பு இதுவாகும். சம்பவம் தொடர்பாக FBI விசாரணை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினியாபோலிஸ் நகரம் முழுவதும் இரங்கல் நிகழ்வுகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.