பட மூலாதாரம், Manjit Kaur
கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்டில் உள்ள மேசா வெர்டே ஐசிஇ செயலாக்க மையத்தின் பார்வையாளர் அறை சிறியதாகவும், சத்தமாகவும், கூட்டமாகவும் உள்ளது.
ஹர்ஜித் கவுரின் குடும்பத்தினர் அவரைப் பார்க்க வந்தபோது, அவர்களால் அவர் சொன்னதை சரியாகக் கேட்க முடியவில்லை. அவர்கள் முதலில் கேட்ட வார்த்தைகள் அவர்களை உலுக்கியது.
“அவர், ‘இந்த இடத்தில் இருப்பதைவிட நான் இறந்துவிடலாம். கடவுள் என்னை இப்போதே அழைத்துச் செல்லட்டும்’ என்று கூறினார்,” என்று துயரத்தில் ஆழ்ந்த மருமகள் மஞ்சித் கவுர் நினைவுகூர்ந்தார்.
அமெரிக்காவில் அடைக்கலம் கோரி தோல்வியடைந்த ஹர்ஜித் கவுர் (73), கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கலிபோர்னியாவில் வசித்து வந்தார். செப்டம்பர் 8 அன்று, அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ஐசிஇ) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
இது மாநிலம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள சீக்கிய சமூகத்தினரிடையே அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹர்ஜித் கவுர் பல ஆண்டுகளாகப் பலமுறை அடைக்கலம் கோரும் மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்திருந்தார். அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. கடைசியாக 2012-ல் நிராகரிக்கப்பட்டது என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.
மூதாட்டிக்கு என்ன குற்றப்பின்னணி இருக்கிறது?
அதன் பிறகு, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை குடிவரவு அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. சான் பிரான்சிஸ்கோவில் ஒருமுறை ஆஜராக சென்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் குடியேற்றம், குறிப்பாக சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று கூறப்படுபவர்கள் மீது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு பரந்த நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் இது நடந்துள்ளது.
இந்த விவகாரம் ஒரு உணர்வுபூர்வமான ஒன்று – ஒவ்வொரு ஆண்டும் அதன் எல்லைகளுக்கு வரும் ஆயிரக்கணக்கான அடைக்கலம் தேடுபவர்களை எவ்வாறு கையாள்வது என்பதில் நாடு போராடி வருகிறது. குடிவரவு நீதிமன்றங்களில் 3.7 மில்லியனுக்கும் அதிகமான அடைக்கலம் கோரும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குடியேற்ற அமலாக்கத்திற்கான அதிகரித்த பட்ஜெட் காரணமாக, ஐசிஇ இப்போது அதிக நிதி பெறும் மத்திய சட்ட அமலாக்க நிறுவனமாக உள்ளது.
“மிக மோசமானவர்களை” நாடுகடத்த விரும்புவதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், குற்றப் பதிவுகள் இல்லாத மற்றும் சரியான செயல்முறைகளைப் பின்பற்றும் குடியேறிகளும் குறிவைக்கப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“ஐசிஇ-யால் கைது செய்யப்பட்டவர்களில் 70% க்கும் அதிகமானவர்களுக்கு எந்தக் குற்றப் பதிவும் இல்லை,” என்று கலிபோர்னியா மாநில செனட்டர் ஜெஸ்ஸி அரேகின், ஹர்ஜித் கவுரை விடுவிக்கக் கோரிய ஒரு அறிக்கையில் தெரிவித்தார். “இப்போது, அவர்கள் அமைதியான மூதாட்டிகளை குறிவைக்கின்றனர். இந்த வெட்கக்கேடான செயல் எங்கள் சமூகங்களுக்குத் தீங்கு விளைவிக்கிறது.”
பட மூலாதாரம், Courtesy Deepak Ahluwalia
ஹர்ஜித் கவுர் வசிக்கும் கலிபோர்னியா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் கரமெண்டி, அவரை விடுவிக்க ஐசிஇ-யிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளார்.
“73 வயதான ஒரு பெண்மணியை – ஒரு மரியாதைக்குரிய சமூக உறுப்பினர், எந்தக் குற்றப் பதிவும் இல்லாதவர், 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை ஐசிஇ-யிடம் தவறாமல் ஆஜராகி வந்தவர் – தடுத்து வைக்கும் இந்த நிர்வாகத்தின் முடிவு, டிரம்ப்-இன் குடியேற்ற அமலாக்கத்தின் தவறான முன்னுரிமைகளுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு,” என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஹர்ஜித் கவுர் “பல தசாப்தங்களாகச செயல் முறைகளை முழுமையாகப் பயன்படுத்திவிட்டார்” என்றும், ஒரு குடிவரவு நீதிபதி 2005-ல் அவரை வெளியேற்ற உத்தரவிட்டதாகவும் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், ஐசிஇ பிபிசியிடம் தெரிவித்தது.
“ஹர்ஜித் கவுர் ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றம் வரை பல மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்தார். ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தார். இப்போது அவர் அனைத்து சட்ட வழிகளையும் தீர்த்துவிட்டார், ஐசிஇ அமெரிக்கச் சட்டம் மற்றும் நீதிபதியின் உத்தரவுகளைச் செயல்படுத்துகிறது; அவர் இனி அமெரிக்க வரிப் பணத்தை வீணாக்கமாட்டார்,” என்றும் அது கூறியது.
ஹர்ஜித் கவுர் 1991-ல் தனது கணவர் இறந்த பிறகு தனது இரண்டு சிறு மகன்களுடன் அமெரிக்காவிற்கு வந்ததாக அவரது வழக்கறிஞர் தீபக் அலுவாலியா பிபிசியிடம் தெரிவித்தார். அந்தக் காலத்தில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நிலவிய அரசியல் கொந்தளிப்பிலிருந்து தனது மகன்களைப் பாதுகாக்க இளம் விதவையான அவர் விரும்பினார் என்று அவரது மருமகள் மஞ்சித் கவுர் கூறினார்.
அடுத்த மூன்று தசாப்தங்களாக, அவர் தனது மகன்களை வளர்க்க சாதாரண வேலைகளைச் செய்தார். அவர்களில் ஒருவர் இப்போது அமெரிக்கக் குடிமகன். அவரது ஐந்து பேரக்குழந்தைகளும் அமெரிக்கக் குடிமக்கள்.
சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் உள்ள ஹெர்குலஸ் நகரில் வசிக்கும் ஹர்ஜித் கவுர், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு சேலை கடையில் தையற்காரராக பணிபுரிந்து வருகிறார். மேலும், அவர் தனது வரிகளைச் செலுத்துகிறார். அமெரிக்கா முழுவதும் உள்ள அடைக்கலம் கோருபவர்கள் தங்கள் கோரிக்கை அதிகாரபூர்வமாகத் தாக்கல் செய்யப்பட்டு செயல்முறையில் இருக்கும்போது, சட்டப்பூர்வமாக வாழவும், வேலை செய்யவும் மற்றும் வரிகளைச் செலுத்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
2012-ல் அவரது இறுதி அடைக்கல மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட பிறகும், அவரது வேலை அனுமதி ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட்டது.
நிராகரிப்புக்குப் பிறகு, அவரது நாடு கடத்தல் உடனடியாக நடக்கும் எனத் தோன்றியது. ஆனால், இந்தியாவிற்குப் பயணிக்க அவருக்குச் சரியான ஆவணங்கள் இல்லை.
இந்தியாவுக்கு திரும்பவும் ஆவணங்கள் இல்லை
அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்கள், செல்லாத நிலையில் உள்ள இந்தியர்கள் திரும்புவதற்கு அவசரகால சான்றிதழ்களை – ஒரு வழி பயண ஆவணம் – வழங்குகின்றன. இதற்கு, ஹர்ஜித் கவுரின் பூர்வீகம் மற்றும் அடையாளத்தை பஞ்சாபில் உள்ள புகைப்படங்கள், உறவினர்கள் அல்லது அறிமுகமானவர்களுடன் சரிபார்ப்பது அல்லது பழைய பதிவுகளைக் கண்டறிவது மூலம் சரிபார்க்க வேண்டும். இதற்கு குறைந்தது சில வாரங்கள் ஆகும்.
நிராகரிக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஹர்ஜித் கவுர் அல்லது அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகளால் அவருக்குப் பயண அனுமதியைப் பெற முடியவில்லை. இதற்காக 2013-ல் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்குச் சென்றதாகவும், ஆனால் அது வெற்றி பெறவில்லை என்றும் மஞ்சித் கவுர் கூறினார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியாவின் துணைத் தூதர் கே. ஸ்ரீகர் ரெட்டி, ஹர்ஜித் கவுர் இந்தியாவிற்குப் பயண ஆவணங்களுக்கு விண்ணப்பித்ததாகத் தங்களிடம் எந்தப் பதிவும் இல்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த 13 ஆண்டுகளில் ஏன் பயண அனுமதியைப் பெறவில்லை என்ற கேள்விக்கு ஐசிஇ பதிலளிக்கவில்லை.
“கடந்த 13 ஆண்டுகளாக ஐசிஇ-யால் பெற முடியாத” ஆவணங்களுக்காக அவர் இந்தியத் துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக அலுவாலியா கூறினார். தேவையான அனைத்து தூதரக உதவிகளையும் தாங்கள் “வழங்கி வருவதாக” தூதரகம் கூறுகிறது.
இதற்கிடையில், ஹர்ஜித் கவுரின் குடும்பத்தினர், அவர் ஒருபோதும் தனது நாடு கடத்தலைக் கேள்வி கேட்கவில்லை என்றும், அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் கூறுகின்றனர்.
“எங்களுக்குப் பயண ஆவணங்களை வழங்குங்கள். அவர் செல்லத் தயாராக இருக்கிறார்,” என்று மஞ்சித் கவுர் கூறினார். “அவர் 2012-லேயே தனது சூட்கேஸ்களை தயாராக வைத்திருந்தார்.”
பட மூலாதாரம், AFP via Getty Images
இப்போது, அவர்களின் உடனடி கவலை அவரைத் தடுப்பு மையத்திலிருந்து வெளியே கொண்டு வருவதுதான்.
“அவர் காலில் ஒரு கண்காணிப்பு சாதனத்தைப் பொருத்தலாம். நீங்கள் விரும்பும்போது நாங்கள் குடிவரவு அதிகாரிகளிடம் ஆஜராகிறோம்,” என்று மஞ்சித் கவுர் கூறினார். “அவரை அந்த சிறையிலிருந்து வெளியே கொண்டு வாருங்கள். நீங்கள் பயண ஆவணங்களை வழங்கும்போது, அவர் தன்னைத் தானே இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொள்வார்.”
செப்டம்பர் 15 அன்று ஹர்ஜித் கவுரைச் சந்தித்தபோது, அவருக்கு வழக்கமான மருந்துகள் வழங்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார். இரட்டை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தும், அவர் “காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும்”, “ஒரு நாற்காலி அல்லது படுக்கை மறுக்கப்பட்டதாகவும்” மற்றும் பல மணிநேரம் ஒரு தடுப்புக் கூண்டில் “தரையில் உட்காரும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்” அவர் குற்றம் சாட்டினார்.
அவருக்கு “வெளிப்படையாகத் தண்ணீர் மறுக்கப்பட்டது” என்றும், முதல் ஆறு நாட்களுக்கு சைவ உணவு வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிட்ட கேள்விகளுக்கு ஐசிஇ பதிலளிக்கவில்லை. ஆனால், யாராவது ஐசிஇ-இன் காவலுக்கு வந்தவுடன், அவர்களுக்கு முழுமையான சுகாதாரப் பராமரிப்பு வழங்கப்படும் என்பது “ஒரு நீண்டகாலக் கொள்கை” என்று முன்பு பிபிசி பஞ்சாபிக்குத் தெரிவித்திருந்தது.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் “மருத்துவர்கள் மற்றும் 24 மணிநேர அவசர சிகிச்சையை” அணுக முடியும் என்றும், தடுப்புக் காவலில் இருக்கும்போது “எவருக்கும் அத்தியாவசிய கவனிப்பு மறுக்கப்படுவதில்லை” என்றும் அது மேலும் கூறியது.
சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா பகுதியில் உள்ள சீக்கிய மையத்தில் உள்ள குருத்வாரா குழுவின் தலைவர் குல்விந்தர் சிங் பன்னு, ‘பிபி ஹர்ஜித்’ (ஒரு வயதான பஞ்சாபிப் பெண்ணை மரியாதையுடன் அழைக்கும் ஒரு முறை) அந்தப் பகுதியில் மிகவும் விரும்பப்படுபவர் என்று கூறுகிறார்.
“அவர் தனது சமூகத்தில் உள்ள மக்களுக்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் நிதியுதவியாக எப்போதும் உதவினார்,” என்று அவர் கூறினார்.
“அவரது கைதுக்கு எதிராகப் போராட இருநூறு பேர் தாங்களாகவே முன்வந்தனர்,” என்று அவர் செப்டம்பர் 12 அன்று கலிபோர்னியாவில் உள்ள சீக்கிய கோவிலுக்கு வெளியே நடந்த போராட்டத்தைக் குறிப்பிட்டார்.
நிச்சயமற்ற நிலை தொடரும் நிலையில், ஹர்ஜித் கவுரின் ஆதரவாளர்கள் மற்ற அமெரிக்க நகரங்களிலும் மேலும் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அவரது அவல நிலை பலரையும் தொட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு தனித்த தாயாக, ஹர்ஜித் கவுர் கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஆழமான உறவுகளையும் பிணைப்புகளையும் ஏற்படுத்திக்கொண்டார். அவரது பெற்றோரும் உடன்பிறந்தவர்களும் இந்தியாவில் இப்போது உயிருடன் இல்லை என்று அலுவாலியா கூறுகிறார்.
“திரும்பிச் செல்ல அவருக்கு யாரும் இல்லை, வீடும் இல்லை, நிலமும் இல்லை.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு