பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோகரன்சி உலகத்தைத் தழுவிட முடிவு செய்துள்ளார். அதற்காக கிரிப்டோகரன்சியை பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றும் புதிய சட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
டிரம்ப் குடும்ப உறுப்பினர்கள் கிரிப்டோகரன்சி அடிப்படையிலான வணிகங்களைத் தொடங்கி, கணிசமான லாபத்தைப் பெற்றுள்ளனர்.
ஆனால், அமெரிக்காவை கிரிப்டோ உலகில் முன்னிலைப்படுத்துவதற்கும், டாலரின் செல்வாக்கை அதிகரிப்பதற்கும் எடுக்கப்படும் இந்த காரியங்களில் ஆபத்துகளும் குறைவாக இல்லை.
பிட்காயின் எவ்வாறு பிறந்தது ?
பட மூலாதாரம், Getty Images
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தபோது இந்தக் கதை தொடங்கியது.
ஒருபுறம், அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தன. மறுபுறம், ஒரு புதிய சிந்தனை எழுந்தது. அரசாங்கத்தின் நிதி அமைப்புக்கு ஒரு மாற்று இருக்க வேண்டும் என்று சிலர் நம்பினர்.
‘சைட்டேஷன் நீடட்’ என்ற செய்திமடலுக்காக எழுதுபவரும் கிரிப்டோகரன்சி குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவருமான மாலி ஒயிட் இது பற்றிக் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, பணத்தின் மீதான கட்டுப்பாடு ஏன் அரசு அமைப்பிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சிலர் நினைத்தனர்.
“2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு 2009-ல் பிட்காயின்கள் உருவாகத் தொடங்கின. இது ஒரு டிஜிட்டல் சொத்து. அந்தக் காலகட்டத்தில் அரசாங்கங்கள் நிதி நெருக்கடியைக் கையாண்ட விதம் பலருக்கு அதிருப்தியை அளித்தது. ஒரு மைய வங்கியால் வெளியிடப்படாத மற்றும் எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு நாணயம் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்ததால், அவர்கள் கிரிப்டோகரன்சியை உருவாக்கினர். இவ்வாறு முதல் கிரிப்டோகரன்சியான பிட்காயின் உருவானது. இப்போது ஆயிரக்கணக்கான வகையான கிரிப்டோகரன்சிகள் வந்துவிட்டன,” என மாலி ஒயிட் கூறுகிறார்.
கிரிப்டோகரன்சியைப் பரிவர்த்தனைக்கு ஒரு பணமாக பயன்படுத்த, அதன் முழுப் பதிவையும் பாதுகாக்கும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அதாவது, அது எந்த மத்திய வங்கி அல்லது ஒற்றை நபரின் கட்டுப்பாட்டிலும் இருக்கக்கூடாது.
இதற்கு பிளாக்செயின் எனப்படும் புதிய தொழில்நுட்பம் தேவைப்பட்டது.
இது ஒரு வகையான டிஜிட்டல் பதிவேடு அல்லது பேரேடு ஆகும், இது கிரிப்டோகிராஃபி மூலம் பாதுகாக்கப்படுகிறது. மக்கள் கிரிப்டோகரன்சியை அனுப்பும் மற்றும் அதன் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் பதிவும் இதில் வைக்கப்படுகிறது, இது பரவலாக்கப்பட்ட (Decentralized) அமைப்பில் உள்ளது, என மாலி ஒயிட் கூறுகிறார்.
இந்த பரவலாக்கல் ஏன் இவ்வளவு முக்கியமானது?
இந்த பரவலாக்கமே கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் பணம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு என்று மாலி ஒயிட் கூறுகிறார்.
மக்கள் வங்கிகள் மூலம் ஒருவருக்கொருவர் அனுப்பும் டிஜிட்டல் பணத்தின் பதிவு வங்கிகளிடம் இருக்கும், ஆனால் கிரிப்டோகரன்சியின் பதிவு எந்த ஒற்றை இடத்திலும் வைக்கப்படுவதில்லை. இந்த தரவு எந்த ஒரு நிறுவனத்தின் அல்லது தனிநபரின் கட்டுப்பாட்டிலும் இல்லை.
ஆரம்பத்தில் கிரிப்டோகரன்சியை வாங்குவது அல்லது விற்பது சிக்கலாக இருந்தது. எனவே, முதலீட்டாளர்கள் எளிதாகப் பணத்தைப் போடவும், பரிவர்த்தனை செய்யவும் கிரிப்டோகரன்சி சந்தைகள் (Exchange) உருவாக்கப்பட்டன.
ஆனால், இந்த சந்தைகள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஜப்பானின் டோக்கியோவில் இருந்த எம்டி காக்ஸ்(MT Gox) அப்படிப்பட்ட ஒரு சந்தை ஆகும். இதன் மூலம் உலகின் பிட்காயின் பரிவர்த்தனையில் சுமார் 70 சதவீதம் நடந்தது.
2014-ல் இந்த எக்ஸ்சேஞ்ச் வீழ்ச்சியடைந்தது, இதனால் முதலீட்டாளர்களுக்குக் கோடிக்கணக்கான டாலர் இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, 2022-ல் FTX என்ற கிரிப்டோகரன்சி சந்தையும் வீழ்ச்சியடைந்தது, இதனால் பில்லியன்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இதில் சாம் பேங்க்மேன் ஃப்ரைட் என்பவர் முக்கியப் பங்கு வகித்தார்.
மாலி ஒயிட் கூறுகையில், FTX சந்தை முதலீட்டாளர்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, இதன் காரணமாக அந்த சந்தை வீழ்ச்சியடைந்தது என்றார்.
இந்த மோசடி குற்றத்திற்காக சாம் பேங்க்மேன் ஃப்ரைடுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மையால், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது ஆபத்தானது என்ற கருத்து உருவானது.
“கிரிப்டோ உலகில் எப்போதும் எந்த விதிகளோ அல்லது கட்டுப்பாடுகளோ இருந்ததில்லை. கட்டுப்படுத்தும் நிதி நிறுவனங்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தவில்லை. தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் விதிகளில் எது கிரிப்டோகரன்சிக்குப் பொருந்தும் என்பதையும் அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. இது தவிர வேறு பல காரணங்களும் உள்ளன,” என மாலி ஒயிட் கூறுகிறார்.
இந்த பல காரணங்களில் ஒன்று பிளாக்செயின் தொழில்நுட்பம். கிரிப்டோ உலகின் ஒரு குறைபாடு என்னவென்றால், அதில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று மாலி ஒயிட் கூறுகிறார்.
யாராவது உங்கள் கிரெடிட் கார்டு எண்ணைத் தவறாகப் பயன்படுத்தினால், அந்தப் பணத்தைத் திரும்பப் பெற வழிகள் உள்ளன. ஆனால், யாராவது உங்கள் பிட்காயின்களைத் திருடினால், அதனைத் திரும்பப் பெறுவது கடினம்.
இந்த ஆண்டு வரை, அமெரிக்காவில் கிரிப்டோ துறைக்குச் சிறப்பான விதிகள் எதுவும் இல்லை. அமெரிக்காவின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பான செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) மற்ற துறைகளுக்குப் பொருந்தும் விதிகளால் கிரிப்டோ துறையைக் கட்டுப்படுத்த முயன்றது, இதனால் நிச்சயமற்ற தன்மையும் குழப்பமும் நிலவியது.
இந்தக் காரணத்தால், முதலீட்டாளர்கள் அமெரிக்க கிரிப்டோ துறையில் முதலீடு செய்யத் தயங்கினர்.
இந்த நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும், இப்போது இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் உள்ளன. கடந்த ஆண்டு அவற்றின் மொத்த மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்து நான்கு டிரில்லியன் டாலர்களை எட்டியது.
இதற்கு காரணம், பல தொழில் அதிபர்கள் ஆவர். இப்போது அமெரிக்க அதிபரே இதில் ஈடுபட்டுள்ளார்.
டிரம்பின் கிரிப்டோ சாம்ராஜ்யம்
பட மூலாதாரம், Getty Images
பல அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் போலவே, தனது முதல் பதவிக் காலத்தில் அதிபர் டிரம்பும் கிரிப்டோகரன்சிக்கு எதிராக இருந்தார் என பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் விரிவுரையாளர் ஃபிரான்சின் மெக்கென்னா நினைவுபடுத்துகிறார்.
ஆனால் நவம்பர் 2024-ல் இரண்டாவது பதவிக் காலத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவரது கருத்து முற்றிலும் மாறியது.
கிரிப்டோ துறையின் பல செல்வாக்கு மிக்கவர்கள் டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்குப் பெருமளவு நன்கொடை அளித்தனர்.
அதே சமயம், கிரிப்டோகரன்சியை ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கும் அவர்கள் நன்கொடை அளித்தனர். “இந்தத் தேர்தல் பிரசாரங்களுக்காகப் பெரிய அளவில் பணம் செலவழிக்கப்பட்டது. டிரம்ப் மீண்டும் அதிபரானால், அவரது அரசு கிரிப்டோ துறை மீதான பைடன் அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் என்பதே இதன் பின்னணியில் உள்ள நோக்கமாக இருந்தது.”
அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்பதற்கு முன்பே, கிரிப்டோ உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் அவரது தேர்தல் பிரசாரத்திற்கு மேலும் அதிக நிதியளித்தனர். அப்படியானால், இந்த நிதி அரசியல் ஆதரவைப் பெறுவதற்கும், கிரிப்டோ உலகிற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதற்கும் ஈடாக வழங்கப்பட்டதா?
ஃபிரான்சின் மெக்கென்னா கூறுகிறார், “இது செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. டிரம்ப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கியவர்களுக்கு இந்தத் தொழிலில் லாபம் ஈட்டவும், அவர்களை இந்தத் துறையில் ஈடுபடுத்தவும் முடிந்தால், தங்களுக்கு அவர்களின் ஆதரவு கிடைக்கும் என கிரிப்டோ துறையைச் சேர்ந்தவர்கள் பார்த்தனர்.”
டிரம்ப் ஜனவரியில் பதவியேற்பதற்கு முன்பே அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்தத் துறையில் ஈடுபட்டிருந்தனர்.
பதவியேற்றவுடன், டிரம்ப் அரசு கிரிப்டோவை ஆதரிக்கும் கொள்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியது. கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் சொத்துகள் அமெரிக்காவின் பொருளாதார எதிர்காலத்தின் ஒரு பகுதி என்று அறிவிக்கத் தொடங்கியது.
டிரம்ப் கிரிப்டோ துறையிலிருந்து லாபம் ஈட்டியதை ஒப்புக்கொண்டார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, டிரம்பின் கிரிப்டோ சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாகும், இது அவருக்கு சொந்தமான மார்-அ-லாகோ ரிசார்ட் மற்றும் டிரம்ப் டவர் ஆகியவற்றின் மொத்த மதிப்பை விட அதிகமாகும்.
இப்போது அவர் இவை அனைத்தையும் பெரிய அளவில் செய்து வருகிறார் என ஃபிரான்சின் மெக்கென்னா கூறுகிறார். அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, அவர் கிரிப்டோ தொடர்பான நடவடிக்கைகளில் விரைவாகப் பங்கேற்கத் தொடங்கினார். புதிய வணிகங்களையும் தொடங்கினார்.
ஸ்டேபிள்காயின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்கன் பிட்காயின் மைனர் (American Bitcoin Miner), வேர்ல்ட் லிபர்ட்டி (World Liberty) உள்ளிட்ட புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“டிரம்பின் மகன்கள் இந்த வணிகத்தில் முதலீடு செய்கிறார்கள். அவரது ஆலோசகர் ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளார். இந்த அரசில் உள்ளவர்களுக்கு இப்போது இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தொழில்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மிகவும் தளர்ந்துவிட்டன,” என அவர் கூறுகிறார்.
டிரம்ப் கிரிப்டோவில் லாபம் ஈட்டும் முதல் அதிபராக இருக்கலாம், ஆனால் இந்தத் துறையால் ஈர்க்கப்பட்ட முதல் அதிபர் அவர் அல்ல.
எல் சால்வடார் நாட்டின் கதை
பட மூலாதாரம், Getty Images
எல் சால்வடார் நாடு அதன் இயற்கை அழகு மற்றும் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால், 2019-ல் நயிப் புகேலே அதிபராகப் பதவியேற்ற பிறகு நிலைமை மாறத் தொடங்கியது.
புகேலே தன்னை உலகின் “மிகவும் கூலான சர்வாதிகாரி” அல்லது “உலகின் மிகச் சரியான சர்வாதிகாரி” என்று கூறிக்கொள்கிறார்.
வன்முறையைக் கட்டுப்படுத்த அவர் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார், அதன் பிறகு எல் சால்வடார் லத்தீன் அமெரிக்காவின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக மாறியது.
2021-ல் பிட்காயினைச் சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும். கிரிப்டோகரன்சி நாட்டின் குடிமக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் நிதிச் சேவைகளைப் பெறுவதற்கு வழிவகுக்கும் என்று அதிபர் புகேலே கூறினார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் எல் சால்வடார் நாட்டவர்கள் குறைந்த செலவில் பணத்தை சொந்த நாட்டிற்கு அனுப்ப முடியும் என்று அவர் நம்பினார்.
பிபிசி மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க செய்தியாளர் வில் கிராண்ட் கூற்றுப்படி, “நாட்டின் மக்கள் அனைவரும் அன்றாட பரிவர்த்தனைகள் மற்றும் கொள்முதல்களுக்கு பிட்காயினைப் பயன்படுத்த வேண்டும். இந்த நாணயம் மத்திய அமெரிக்காவின் பொது நாணயமாக மாற வேண்டும் என்பதே புகேலேயின் திட்டமாக இருந்தது.”
“கிரிப்டோகரன்சி ஆதரவு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எல் சால்வடாரை நோக்கி ஈர்க்கப்படும், இது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்” என்று அவர் நம்பினார்.
இந்த நேரத்தில், புகேலே “சிவோ வாலட்” என்ற டிஜிட்டல் செயலியை அறிமுகப்படுத்தினார். அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க, செயலியைப் பதிவிறக்கும் ஒவ்வொருவரின் வாலட்டிலும் 30 டாலர் டெபாசிட் செய்யப்படும் என்று அவர் அறிவித்தார், இதனால் மக்கள் பிட்காயினைப் பயன்படுத்தத் தூண்டப்படுவார்கள் என நம்பினார்.
பெரும்பாலான மக்கள் அந்தக் கணக்கிலிருந்து 30 டாலரை எடுத்துவிட்டுச் செயலியின் பயன்பாட்டை நிறுத்திவிட்டனர் – இதன் விளைவாகத் திட்டம் தோல்வியடைந்தது என்று வில் கிராண்ட் விளக்குகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் பிட்காயின் பரிவர்த்தனைகள் மொத்தப் பரிவர்த்தனைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தன.
உண்மையில், அதிபர் புகேலே எல் சால்வடமாரைக் கிரிப்டோகரன்சி உலகின் மையமாக மாற்ற விரும்பினார். பிட்காயின் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளும் நடைபெறும் “கிரிப்டோ சிட்டி” என்ற நகரை உருவாக்குவது அவரது கனவாக இருந்தது.
“இந்த நகரத்திற்காக கோன்சாகுவா எரிமலையின் வெப்ப ஆற்றலில் இருந்து மின்சாரம் உருவாக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது. அங்கு வரிகளில் பெரிய தள்ளுபடி வழங்கப்படும் மற்றும் கிரிப்டோகரன்சி உற்பத்தி வசதிகள் உருவாக்கப்படும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நகரத்தின் கட்டுமானப் பணிகள் முறையாகத் தொடங்கப்படவில்லை.” என்கிறார் வில் கிராண்ட்.
எல் சால்வடார் ஒரு ஏழை நாடு, அதன் வருவாயில் கால் பகுதி வெளிநாடுகளில் பணிபுரியும் குடிமக்களிடமிருந்து வருகிறது.
பொருளாதார நிலையை மேம்படுத்த, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அது, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், எல் சால்வடாருக்கு 1.4 பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டது. ஆனால், பிட்காயினைச் சட்டப்பூர்வ நாணயமாக மாற்றும் கொள்கையை அதிபர் புகேலே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தது என்று வில் கிராண்ட் விளக்குகிறார்.
இதன் விளைவாக, இந்தக் கடனுக்கு ஈடாக எல் சால்வடார் தனது கிரிப்டோ கொள்கையிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது.
வில் கிராண்டின் கூற்றுப்படி, நாட்டின் சாதாரண குடிமக்கள் ஒருபோதும் பிட்காயினை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
மக்கள் ரொக்கப் பணம் அல்லது வங்கிக் கணக்கை மிகவும் பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள் – அவர்களுக்கு பிட்காயின் மீது அத்தகைய நம்பிக்கை இல்லை.
கிரிப்டோவின் எதிர்காலம்
பட மூலாதாரம், Getty Images
கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் தலைவராக ஜில்லியன் டெட் இருக்கிறார். “நிதி உலகில் ஒரு புதிய சிந்தனை அல்லது அமைப்பு வரும்போதெல்லாம், மக்கள் ஈர்க்கப்பட்டு அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பல நேரங்களில் அது நடைமுறை ரீதியில் வெற்றியடையவில்லை” என அவர் கூறுகிறார்.
ஆனால், பின்னர் அதே யோசனையை மேம்படுத்தி மீண்டும் முன்வைத்தால், அது வெற்றியடையும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறுகிறார்.
கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் கிரிப்டோகரன்சி துறையில் பல புதிய விஷயங்கள் நடந்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிற்கு வெளியே நடந்தன என்று ஜில்லியன் டெட் கூறினார். இப்போது முதல் முறையாக அது அமெரிக்காவில் செயல்படுத்தப்படுகிறது, இதுவே ஒரு பெரிய மாற்றமாகும்.
“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்க டாலர் உலக வர்த்தகத்தில் முக்கிய நாணயமாக இருந்து வருகிறது, இதன் பலனை அமெரிக்கா தொடர்ந்து அனுபவித்து வருகிறது” என்று அவர் கூறுகிறார். ஆனால், இப்போது கிரிப்டோகரன்சி தொடர்பான நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்க, அமெரிக்கா ஸ்டேபிள்காயின்களின் (Stablecoin) பயன்பாட்டை அதிகரிக்கும் திசையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஸ்டேபிள்காயின்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது, ஆனால் அவை அமெரிக்க டாலருடன் இணைக்கப்படும்.
ஜில்லியன் டெட் கூற்றுப்படி, டாலரின் ஆதிக்கத்தைத் தக்கவைத்து அதை மேலும் வலுப்படுத்த டாலருடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்களைத் தொடங்க டிரம்ப் நினைக்கலாம். ஆனால், சீனா மற்றும் பிற நாடுகள் இதில் திருப்தி அடையாது.
அவர்கள் தங்கள் நாணயத்தின் செல்வாக்கை அதிகரிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இந்த இழுபறி நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் போட்டியின் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்காவை கிரிப்டோகரன்சியின் மையமாக மாற்ற இந்த ஆண்டு ஜூலை மாதம் ‘ஜீனியஸ் சட்டம்’ (Genius Act) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் குறிப்பாக ஸ்டேபிள்காயின்கள் மற்றும் டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சிகளைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்திற்குப் பிறகு, கிரிப்டோகரன்சி இப்போது அமெரிக்காவின் முக்கிய நீரோட்ட பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் ஒரு பெரிய நிதி நிறுவனம் அல்லது முதலீட்டாளர் தோல்வியடைந்தால், அது உலகப் பொருளாதாரத்தில் பெருமளவு நிலையற்ற சூழலை ஏற்படுத்தலாம் என்று ஜில்லியன் டெட் எச்சரிக்கிறார்.
“எதிர்காலத்தில் உடனடியாக இது நடக்காமல் இருக்கலாம், ஆனால் ஆபத்து நிச்சயம் உள்ளது. ஸ்டேபிள்காயின்கள் அல்லது பிற கிரிப்டோகரன்சிகளை டாலருடன் இணைப்பது உலகளவில் பரிவர்த்தனைகளில் டாலரின் பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும். ஆனால், டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி ஏதேனும் மோசடிக்கு பலியானால், அதனால் மோசமான விளைவும் ஏற்படலாம். இதனால் உலகம் ஒரே இரவில் மாறாது, எனவே அதன் பயன்பாடு குறித்து அதிக கவலைப்படுவதும் சரியல்ல” என்று அவர் கூறுகிறார்.
கிரிப்டோகரன்சி ஒரு புதிய விஷயம் அல்ல. பிட்காயின்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டன. ஆனால், கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்தத் துறையில் பல பெரிய மோசடிகள் நடந்ததால், நிதி நிறுவனங்கள் அவற்றை இதுவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், இப்போது டிஜிட்டல் சொத்துகள் உண்மையில் பயனுள்ளவையாக இருக்குமா என்று நாடுகள் புதிய வழிகளில் சிந்திக்க வேண்டிய நேரம் வந்திருக்கலாம்.
அப்படியானால், டிரம்ப் உண்மையில் கிரிப்டோ பொருளாதாரத்தை உருவாக்குகிறாரா என்பதுதான் கேள்வி?
கடந்த ஆண்டு ஐரோப்பாவும் அமெரிக்காவும் கிரிப்டோகரன்சி தொடர்பான விதிகளைச் செயல்படுத்தின, அதன் பிறகு இந்தத் துறையில் முதலீடு அதிகரித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்று தெரிகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு