படக்குறிப்பு, அமெரிக்காவின் எஃப்-15 தெற்கு இரானில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது (விளக்கப் படம்)கட்டுரை தகவல்
இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தெற்கு இரானில் வீழ்ந்ததாகக் கூறப்படும் அந்த அமெரிக்க F-15 போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்த நபர் அமெரிக்க படையினரால் மீட்கப்பட்டார் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்க விமானத்தில் இருந்த இரண்டாவது நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நபரை தேடும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இரான் பாதுகாப்பு படைகளும் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக இரான் அரசு ஊடகம் கூறியுள்ளது
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,
இரானின் அரசு தொலைக்காட்சிகள், ‘அந்த இரண்டாவது விமானியை உருயிடன் பிடிக்க வேண்டும்’ என பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் அதைச் செய்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.
பரவலாக பகிரப்பட்ட தகவல்களின்படி, சுமார் 50,000 பவுண்ட் அளவிலான வெகுமதி அறிவிக்கப்பட்டதாக இரானின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது, அந்த நாட்டின் மாத சராசரி சம்பளமான 150–230 பவுண்டுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமானதாகும்
அதற்கு சில நேரம் கழித்து, தெற்கு பகுதிகளில் உள்ள இரண்டு மாகாணங்களில் ஆயுதங்களுடன் பொதுமக்கள் அந்த நபரை தேடி வருவதாகக் காணப்படும் வீடியோக்கள் பரவத் தொடங்கின.
குஸெஸ்தான் மாகாணத்தில் எடுத்ததாக கூறப்படும், உறுதிப்படுத்தப்படாத ஒரு வீடியோவில், துப்பாக்கிகளும் இஸ்லாமிய குடியரசின் கொடியும் ஏந்திய சிலர் தேடலில் ஈடுபட்டுக் காணப்படுகிறார்கள்.
அதில் ஒருவர், “இறைவன் விரும்பினால், அவரை கண்டுபிடிப்போம்” என்று கூறுகிறார்
இந்தச் சம்பவம் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளின் போது அமெரிக்கக் குழுவினர் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு அமெரிக்க விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
அமெரிக்காவின் ஏ-10 (A10) விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக இரானிய ராணுவம் கூறியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
“அமெரிக்க ஏ-10 விமானம் ஒன்று ராணுவ வான் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அமைப்புகளால் சுடப்பட்டது மற்றும் அது தெற்கு இரானில் உள்ள பாரசீக வளைகுடாவில் விழுந்து நொறுங்கியது” என்று இரானிய ராணுவத்தை மேற்கோள் காட்டி இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த விமானம் சில மணிநேரங்களுக்கு முன்பு ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.
இது, எஃப்-15இ (F-15E) விமானத்திற்கான தேடுதல் மற்றும் மீட்பு முயற்சியின் போது தாக்கப்பட்டதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் தெரிவித்த அதே ஏ-10 வார்தாக் (A-10 Warthog) விமானமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
படக்குறிப்பு, இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்
இரானில் என்ன விவாதிக்கப்படுகிறது?
இரான் வான்வெளியில் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியான பிறகு, இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்காவைக் கேலி செய்து பதிவிட்டுள்ளார்.
“அவர்கள் தொடங்கிய இந்த அற்புதமான வியூகமற்ற போர் இப்போது ‘ஆட்சி மாற்றம்’ என்பதிலிருந்து ‘தயவுசெய்து, எங்கள் விமானிகளை யாராவது கண்டுபிடிக்க முடியுமா?’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” என்று காலிபாஃப்பின் எக்ஸ் கணக்கில் உள்ள ஒரு பதிவு தெரிவிக்கிறது.
இரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மார்ச் 31 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார், புதிய இரானியத் தலைவர்கள் அதிகம் பகுத்தறிவுள்ளவர்கள் என்றும் அவர் கூறினார்.
காலிபாஃப், “வாவ், என்ன ஒரு நம்பமுடியாத முன்னேற்றம். அசல் மேதைகள்,” என்றும் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் கணக்கில் சமீபகாலமாக தொடர்ந்து பதிவுகள் வெளியாகின்றன, அவ்வப்போது மீம்ஸ் பதிவிடப்படுகின்றன. அதே சமயம், காலிபாஃப் கடைசியாக மார்ச் 17 அன்று அரசு தொலைக்காட்சியில் காணப்பட்டார்.
டிரம்ப் நிர்வாகம் காலிபாஃப்பை ஒரு சாத்தியமான கூட்டாளியாகவும், எதிர்காலத் தலைவராகவும் கூட பரிசீலித்து வருவதாக சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், State media
படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்களில் காணப்படும் பாகங்கள், அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் ரக விமானத்தைச் சேர்ந்தவை என்பதை நிபுணர்களிடம் பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ‘விமானியை’ தேடும் இரான்
அமெரிக்கா, தனது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தின் ‘காணாமல் போன விமானியை’ தேடும் பணிகள் இன்னும் முழு வீச்சில் தொடர்வதாக இரானின் தெற்கு கோகிலுயே-போயரஹ்மத் மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இரானின் அரசு ஆதரவு செய்தி முகமையான ஃபார்ஸ் (Fars) செய்தியின்படி, “காணாமல் போன நபரை கண்டுபிடிப்பதற்கான, காவல்துறை, பாதுகாப்புப் படைகள் மற்றும் உள்ளூர் மக்களின் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன” என்று மாகாண துணை ஆளுநர் கூறியதுடன், ‘காணாமல் போன விமானி’ பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு அப்பகுதி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
விமானம் சரியாக எங்கே சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும், இரானின் அரசு ஊடகங்களில் இதுவரை இரண்டு மாகாணங்களின் பெயர்கள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன – அவை கோகிலுயே-போயரஹ்மத் மற்றும் குசெஸ்தான்.