0
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் (Federal Reserve) தனது முக்கிய வட்டி விகிதத்தை 3.50 சதவீதம் முதல் 3.75 சதவீதம் வரையிலான நிலைமையில் தொடர வைத்திருக்க நேற்று முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் போது ஆளுநர்கள் கிறிஸ்டோபர் வாலர் (Christopher Waller) மற்றும் ஸ்டீபன் மிரான் (Stephen Miran) ஆகியோர் கால் சதவீத புள்ளி விகிதக் குறைப்பை ஆதரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கடன் வாங்கும் செலவு எப்போது குறையலாம் என்பதற்கான எந்தத் தெளிவான அறிகுறியையும் பெடரல் ரிசர்வ் வெளியிடவில்லை. இதேவேளை, கடந்த டிசெம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 4.4 சதவீதமாக இருந்த போதிலும், பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்தே இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடன் வாங்கும் செலவைக் குறைக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் நெருக்கடி கொடுத்திருந்த நிலையிலும், மத்திய வங்கி தனது முடிவில் மாற்றம் செய்யவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
முக்கியக் கடன் விகிதம் மூன்றரை சதவீதம் முதல் மூன்றே முக்கால் சதவீதம் வரை தொடரும் என அமெரிக்க மத்திய வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க வேலைச் சந்தை படிப்படியாக நிலைபெறும் அறிகுறிகள் காணப்படுகின்றன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில் பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும், வேலையின்மை விகிதம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஆண்டு மத்திய வங்கி மூன்று முறை வட்டி விகிதத்தைக் குறைத்திருந்த நிலையில், அதன் விளைவுகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை கொள்கை வகுப்பாளர்கள் தற்போது உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.