பட மூலாதாரம், Alex Wong/Getty Images
பிரிட்டன் உட்பட பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அமெரிக்காவில் நுழைவதற்கான நிபந்தனையாக அவர்களின் ஐந்து ஆண்டு சமூக ஊடக வரலாற்றை வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய திட்டம் கூறுகிறது.
இந்த புதிய நிபந்தனை, விசா இல்லாமல் 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குச் செல்லத் தகுதியுள்ள பல நாட்டு மக்களைப் பாதிக்கும்.
ஆனால் அவர்கள் பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு (Electronic System for Travel Authorization – ESTA) படிவத்தை நிரப்பியிருக்க வேண்டும்.
ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து, டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பைக் காரணமாகக் கூறி, அமெரிக்க எல்லைப் பகுதிகளை மேலும் கடுமையாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தத் திட்டம், அங்கு வரக்கூடிய பயணிகளுக்கு ஒரு தடையாக அமையலாம் அல்லது அவர்களின் டிஜிட்டல் உரிமைகளைப் பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தத் திட்டம் அமெரிக்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா என்று கேட்கப்பட்டபோது, டிரம்ப் அதுகுறித்து கவலைப்படவில்லை என்று கூறினார்.
புதன்கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசுகையில், “இல்லை. நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம்”என்றார்.
மேலும், “நாங்கள் மக்கள் இங்கு பாதுகாப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். நாங்கள் பாதுகாப்பை விரும்புகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளை விரும்புகிறோம்” என்றும், “தவறான நபர்கள் எங்களது நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா அடுத்த ஆண்டு கனடா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து ஆண்களுக்கான கால்பந்து உலகக் கோப்பையை நடத்துகிறது, மேலும் 2028-இல் லாஸ் ஏஞ்சலிஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. இதனால் அடுத்த ஆண்டு பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) மற்றும் அதன் அங்கமான சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை (CBP) ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்ட இந்தத் திட்ட ஆவணம், அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
இந்த முன்மொழிவு, “ஈஎஸ்டிஏ (ESTA) விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் சமூக ஊடக விவரங்களை வழங்க வேண்டும்” என்று கூறுகிறது. இருப்பினும், எந்தெந்த குறிப்பிட்ட தகவல்கள் தேவைப்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை அது வழங்கவில்லை.
தற்போதுள்ள ஈஎஸ்டிஏ படிவத்தை நிரப்புவதற்கு, பயணிகள் ஒப்பீட்டளவில் குறைவான தகவல்களையும், ஒருமுறை செலுத்த வேண்டிய கட்டணமாக 40 டாலர் (30 பவுண்டு) கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இது பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உட்பட சுமார் 40 நாடுகளின் குடிமக்களுக்குக் கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட அந்த நாடுகளின் குடிமக்கள், ஈஎஸ்டிஏ மூலம் விண்ணப்பித்து, இரண்டு வருடத்தில் பலமுறை அமெரிக்கா செல்லும் அனுமதியைப் பெற முடியும்.
சமூக ஊடகத் தகவல்களைச் சேகரிப்பதுடன், கடந்த ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளில் விண்ணப்பதாரர் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் சேகரிக்க இந்தப் புதிய திட்டம் முன்மொழிகிறது.
“வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல்,” என்ற தலைப்பில் ஜனவரி மாதம் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவை இந்த திட்டம் மேற்கோள் காட்டுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கான ஈஎஸ்டிஏ தரவு சேகரிப்பு தொடர்பான புதிய திட்டம், 60 நாட்களுக்கு பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கிறது.
இது குறித்து சிபிபி-ன் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், “அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு இந்த விஷயத்தில் எதுவும் மாறவில்லை” என்றும்,
“இது ஒரு இறுதி விதி அல்ல, அமெரிக்க மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க புதிய கொள்கை வாய்ப்புகளைப் பற்றி ஒரு விவாதத்தைத் தொடங்க இது ஒரு முதல் படி மட்டுமே,” என்றும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் உரிமைகள் அமைப்பான எலெக்ட்ரானிக் ஃபிரான்டியர் பவுண்டேஷனைச் (Electronic Frontier Foundation) சேர்ந்த சோபியா கோப், இந்தத் திட்டத்தை விமர்சித்து, இது “சிவில் உரிமைகளுக்கு அதிகத் தீங்கு விளைவிக்கும்” என்று நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், குடியேற்றச் சட்ட நிறுவனமான ஃப்ராகோமன் (Fragomen), விண்ணப்பதாரர்கள் ஈஎஸ்டிஏ அனுமதிக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகக்கூடும் என்பதால், நடைமுறையில் சில தாக்கங்கள் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் நிர்வாகம் இதற்கு முன்னர், மாணவர் விசாக்களுக்கும், திறன்மிகு தொழிலாளர்களுக்கான ஹெச் -1பி விசாக்களுக்கும் விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரை பரிசோதிக்கும்போது அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்யும் என்று அறிவித்தது.
விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் “ஆன்லைன் இருப்பு” (online presence) குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், இந்தச் சோதனை நடைபெறுவதற்காக அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களின் தனியுரிமை அமைப்புகளும் “பொது” (public) நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை கூறியது.
மெக்சிகோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், குறிப்பிட்ட விசா விண்ணப்பதாரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய அனைத்து சமூக ஊடக தளங்களின் பயனர் பெயர்கள் அல்லது ‘ஹேண்டில்களையும்’ (usernames or handles) பட்டியலிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகத் தகவல் ஏதாவது பட்டியலிடப்படாவிட்டால், அது தற்போதைய மற்றும் எதிர்கால விசாக்கள் மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் அது எச்சரிக்கிறது.
மாணவர் விசா கொள்கை குறித்து ஒரு மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி கூறுகையில்: “தங்கள் அரசாங்கம் நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அமெரிக்க குடிமக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதைத்தான் டிரம்ப் நிர்வாகம் ஒவ்வொரு நாளும் செய்து வருகிறது,” என்றார்.
“குறிப்பிட்ட வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான பிற அச்சுறுத்தல்களுக்கு உதவுபவர்கள் அல்லது ஆதரவளிப்பவர்கள், அல்லது சட்டவிரோதமான யூத எதிர்ப்பு துன்புறுத்தல் அல்லது வன்முறையைச் செய்பவர்களை” சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அமெரிக்க நிர்வாகத்தின் எல்லைகளைக் கடுமையாக்கும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கரீபியன் பகுதிகளில் உள்ள 19 நாடுகளைப் பாதிக்கும் தற்போதைய பயணத் தடை விரைவில் விரிவுபடுத்தப்படலாம் என்று அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை, வாஷிங்டன் டி.சி.யில் இரண்டு தேசிய காவல்படை உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு ஆப்கான் நபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
டிரம்பின் பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பயணக் கொள்கை மாற்றங்கள், அமெரிக்கச் சுற்றுலா துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என நிபுணர்கள் முன்பு கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் (World Travel & Tourism Council), தான் ஆய்வு செய்த 184 நாடுகளில், 2025-ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலா வருவாயில் சரிவைக் காணக்கூடிய ஒரே நாடாக அமெரிக்கா இருக்கும் என்று தெரிவித்தது.
டிரம்பின் வரிகள் (tariffs) மீதான எதிர்ப்பின் ஒரு வடிவமாக, கனடாவைச் சேர்ந்த பலரும் அமெரிக்கப் பயணத்தைப் புறக்கணித்தது போன்ற நிர்வாகத்தின் பிற கொள்கைகளும், அமெரிக்காவின் சுற்றுலாவைப் பாதித்ததாகத் தெரிகிறது.
அக்டோபர் மாதம், அமெரிக்காவுக்கு வரும் கனடிய பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 10-வது மாதமாக சரிவைக் கண்டதாகக் குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, கனடாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்த சர்வதேசப் பயணிகளில் சுமார் நான்கில் ஒரு பங்கை கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ளனர் என்று அமெரிக்கப் பயணச் சங்கம் (US Travel Association) தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு