5
நாட்டின் மின்சக்தி துறையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி மற்றும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு 847 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை புதன்கிழமை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் வலுசக்தி துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. தடையற்ற மின் விநியோகம் பெரும் பிரச்சினையாகியுள்ளது. இலங்கையின் மின் சக்தி கட்டமைப்பின் இதயம் போன்றிருப்பது நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையமாகும். இரவில் மின்சாரத்துக்கான அதிக கேள்வி நிலவும் போது, நுரைச்சோலை மின் நிலையத்திலிருந்தே மின்னுற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டுக்கு தேவையான விலைமுறி 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கு 1.2 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும். இந்த நிறுவனமொன்றே மிகக் குறைந்த விலையை முன்வைத்து இந்த விலைமுறியைப் பெற்றுக் கொண்டது. குறைந்த விலையை இந்த நிறுவனம் அறிவித்த போதிலும், எமக்கு வழங்கியுள்ள அனைத்து ஒட்டுமொத்த நிலக்கரி தொகையும் தரம் குறைவானதாகும்.
இது தொடர்பில் பாராளுமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் தெரிவுக்குழுவின் கண்காணிப்பிற்கமைய இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த விசாரணை அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கிடையில் 9 நிலக்கரி கப்பல்கள் வருகை தந்துள்ளன.
இந்த 9 கப்பல்களாலும் 847 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அரிசி இறக்குமதியில் ஏற்பட்ட பிரச்சினைகளால் கருப்பு பட்டியலில் இடப்பட்ட நிறுவனத்துக்கே இந்த அரசாங்கம் மீண்டும் நிலக்கரி இறக்குமதிக்காக விலைமுறியை வழங்கியிருக்கிறது.
தரம் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதோடு மாத்திரமின்றி, எந்தவொரு கப்பலும் உரிய தினத்தில் வந்தடையவுமில்லை. ஆனால் அரசாங்கம் இதுவரையில் இந்த விலைமுறியை இரத்து செய்யவில்லை.
குறித்த நிறுவனத்தின் மீது வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு காணப்படும் தொடர்புகளே இதற்கான காரணமாகும். தரம் குறைவானாலும், கால தாமதமானாலும், நஷ்டம் ஏற்பட்டாலும் அந்த நிறுவனத்துக்கே இதனை வழங்குவோம் என்ற நிலைப்பாட்டிலேயே முழு அரசாங்கமும் இருக்கிறது.
ஆனால் ஊடகங்கள் இது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது, தன்னால் அதற்கு பொறுப்பு கூற முடியாது என்றும், இலங்கை நிலக்கரி நிறுவனத்திடமே அது குறித்து கேட்க வேண்டும் என்றும் வலுசக்தி அமைச்சர் குறிப்பிடுகின்றார். நிலக்கரி நிறுவனம் வலுசக்தி அமைச்சின் கீழுள்ள முற்று முழுதான அரச நிறுவனம் என்பதை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு அமைச்சர் எவ்வாறு அமைச்சரவையில் தொடர்ந்தும் அங்கத்துவம் வகிக்க முடியும்?
கடந்த ஆட்சியில் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களால் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அவர் பதவி நீக்கப்பட்டார். அவ்வாறிருக்கையில் தற்போதைய ஜனாதிபதியால் ஏன் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க முடியாது? ஜனாதிபதியிடமிருந்து இதற்கான பதிலை எதிர்பார்க்க முடியாது என்பதால், எதிர்வரும் 18ஆம் திகதி எதிர்க்கட்சிகளால் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளோம்.
இது குறித்து ஏனைய கட்சிகளுடனும் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடவுள்ளது. செவ்வாய்கிழமை (17) அதில் கையெழுத்திட்டு புதனன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். நிலக்கரி மாத்திரமின்றி, எரிபொருள் விடயத்திலும் குமார ஜயக்கொடியின் இயலாமை வெளிப்பட்டுள்ளது. அவர் இந்த பதவியை வகிப்பதற்கு சற்றும் தகுதியற்றவாராவார். எனவே அவர் பதவி நீக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.