சென்னை: “இந்துக்கள் நலனில் அக்கறை இல்லாத, இந்து கோயில்களின் நலனில் அக்கறை காட்டாமல், பொறுப்பற்ற முறையில் பேசி வரும் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க சற்றும் தகுதி இல்லாதவர். அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்,” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலையைக் காக்க நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் மக்கள், பக்தர்கள் பெருந்திரளாக கட்சி பாரபட்சம் இன்றி கலந்து கொண்டனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவின் கைக்கூலி அமைச்சர் சேகர்பாபு போராட்டத்தில் கலந்து கொண்ட இந்துக்களையும் முருக பக்தர்களையும், இந்து முன்னணியினரையும் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார்.
சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து அரசியல் ஆதாயம் கருதி முருகபக்தர்களுக்கு எதிராகப் பேசி வருகிறார். திமுகவை சேர்ந்த நவாஸ் கனி, மற்றும் அப்துல் சமது ஆகியோர் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் இந்துக்களின் புனித தலமாக இருந்தபோதும் தன் சகாக்களுடன் வந்து அசைவ உணவை சாப்பிட்டு மதமோதல் ஏற்படுத்தும் வேலைகளைச் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து மதப்பற்றாளராக இல்லையென்றாலும் கூட , அறநிலையத்துறையின் அமைச்சர் என்ற வகையில் நவாஸ் கனியின் செயலை கண்டித்தாரா?
இதுவரை அந்த திருப்பரங்குன்றத்தின் புனிதத்தைக் காக்க ஏதாவது குரல் கொடுத்தாரா? அல்லது இந்து உணர்வுடன் வேறு அமைச்சர்கள் யாராவது குரல் கொடுத்தனரா? இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் மட்டுமே இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர். மக்களும் விழிப்புணர்வு பெற்று இச்செயலுக்கு மிகப் பெரிய அளவில் தங்களது எதிர்ப்பைக் காட்டினர். திமுகவுக்கு தற்போது வயிறு எரிகின்றது.
அதன் வெளிப்பாடாக சேகர்பாபு கதறுகிறார். இவரின் கருத்தும், கதறலும் இனி இந்துக்கள் மத்தியில் ஜெயிக்காது என்பதற்கு நேற்று நடந்த இந்து எழுச்சி ஆர்ப்பாட்டமே சாட்சி. இந்துக்களின் நலனில் அக்கறை இல்லாத, இந்து கோயில்களின் நலனில் அக்கரை காட்டாமல், பொறுப்பற்ற முறையில் பேசி வரும் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க சற்றும் தகுதி இல்லாதவர். அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.