• Thu. Oct 23rd, 2025

24×7 Live News

Apdin News

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: காவல் துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு | Accumulation of assets case against Minister Durai Murugan HC orders police

Byadmin

Oct 22, 2025


சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக 2011 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என, விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், இந்த வழக்கின் விசாரணையை வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கை வேலூருக்கு மாற்ற மறுத்ததை எதிர்த்து, துரைமுருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, துரைமுருகன் தரப்பில், சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மனுவுக்கு பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் என விரிவாக பதில்மனு தாக்கல் செய்யும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.



By admin