• Fri. Apr 4th, 2025

24×7 Live News

Apdin News

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு | High Court refuses to quash land grabbing case against Minister M Subramanian

Byadmin

Mar 28, 2025


சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டி சிட்கோ பகுதியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு மனையிடத்தை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கெனவே சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்தபோது போலி ஆவணங்கள் தயாரித்து தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின்பேரில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தற்போது அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பில், “கடந்த 1998-ம் ஆண்டு அந்த இடம் வாங்கப்பட்ட நிலையில் 20 ஆண்டுகள் கழித்து எனக்கு எதிராக இந்த வழக்கை போலீஸார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவு செய்திருந்தனர். அந்த காலகட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தேன். அந்த இடத்தை நான் வாங்கியதன் மூலம் சிட்கோவுக்கோ அல்லது அரசுக்கோ எந்த இழப்பும் ஏற்படவில்லை. இதில் மோசடி என்ற பேச்சுக்கும் இடமில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், “இந்த வழக்கின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும்” என தெரிவிக்கப்பட்டது. “அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது” என புகார்தாரரான பார்த்திபன் தரப்பிலும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (மார்ச் 28) தீர்ப்பளித்த நீதிபதி பி.வேல்முருகன், தனக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



By admin