1
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமைதிக் குழுவில் சேருமாறு கனடாவுக்கு விடுத்திருந்த அழைப்பை திரும்பப் பெற்றுள்ளார். இதனால் அமெரிக்கா–கனடா உறவுகளில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் பேசிய டிரம்ப், கனடா இன்றும் நிலைத்து வாழ்வதற்குக் காரணம் அமெரிக்காவே எனக் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பதிலளித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, கனடாவின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் கனடியர்களின் உழைப்பே முக்கிய காரணம்; அதற்கு அமெரிக்கா காரணமல்ல என்று தெளிவுபடுத்தினார்.
இந்தப் பதிலுக்கு எதிர்வினையாக, கனடாவை அமைதிக் குழுவில் சேர அழைத்திருந்த அழைப்பை டிரம்ப் மீட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, அந்த அழைப்பை மார்க் கார்னி ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அதற்காக பணம் செலுத்த விருப்பமில்லை என்றும் செய்திகள் தெரிவித்தன.
அமைதிக் குழுவில் உறுப்பினராக சேர நாடுகள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி – காசாவுக்கான “அமைதி வாரியம்” தொடக்கம்: டாவோஸில் ட்ரம்ப் அறிவிப்பு, உலக நாடுகளிடையே சர்ச்சை!