பட மூலாதாரம், Getty Images
சச்சின் டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் மும்பையின் சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளி அணிக்காக விளையாடி 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து உலக சாதனை படைத்தபோது, ஒரு பேட்ஸ்மேன் நாள் முழுவதும் கால்களில் பேட்களைக் கட்டிக்கொண்டு தன் முறைக்காகக் காத்திருந்தார்.
பள்ளியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளியுடன் படித்த அந்த மாணவரின் பெயர் அமோல் மஜும்தார்.
அந்தப் போட்டியில் அவருக்கு ஒரு பந்து கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தச் சம்பவம் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு புதிய வழியில் வரையறுத்தது, அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படத் தொடங்கினார்.
அமோல் மஜும்தார் முதல் தர கிரிக்கெட்டில் 30 சதங்களுடன் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். ஒரு காலத்தில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்பட்டார், ஆனால் அவருக்கு ஒருபோதும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
தனது 21 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், அமோல் மஜும்தார் ஒருபோதும் இந்தியாவின் தேசிய அணிக்காக விளையாடவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இப்போது ஒரு பயிற்சியாளராக அவர் மகளிர் அணியை உலக சாம்பியனாக்கி உள்ளார்.
இந்திய அணி பெண்கள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பயிற்சியாளர் அமோல் மஜும்தாரை நோக்கி ஓடி, அவருடைய கால்களில் விழுந்தார், பின்னர் கட்டிப்பிடித்து விம்மி அழுதுவிட்டார்.
அவரும் இந்த வெற்றியைக் கண்டு மனம் திறந்து சிரித்தார், ஹர்மன்பிரீத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். போட்டிக்குப் பிறகு, அவர் உற்சாகமான வார்த்தைகளில் மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றதில் மிகுந்த பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.
இந்திய அணி கோப்பையை வென்றது அவருக்கு ஒருவேளை ‘சக் தே இந்தியா’ திரைப்படத்தின் ‘கபீர் கான்’ தருணம் போல இருந்திருக்கலாம்.
மும்பையில் ஒரு அற்புதமான ஆரம்பம்
பட மூலாதாரம், Getty Images
அமோல் மஜும்தார் மும்பைக்காக விளையாடி தனது முதல் தர கிரிக்கெட்டைத் தொடங்கினார். ஃபரிதாபாத்தில் ஹரியாணாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டி அவருடைய முதல் ரஞ்சி போட்டியாகும்.
இந்தப் போட்டியில், அவர் ஒரு இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்து, தனது அறிமுகப் போட்டியிலேயே அனைவரையும் கவர்ந்தார்.
இந்தச் செயல்திறன் காரணமாக, அவர் ‘பம்பாய் பேட்டிங் பள்ளியில்’ இருந்து வெளிவந்த மற்றொரு ‘பெரிய சாதனை’ என்று பாராட்டப்பட்டார்.
எனினும், ‘ஸ்போர்ட்ஸ்ஸ்டார்’ விளையாட்டுப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சலில் அன்கோலா மற்றும் வினோத் காம்ப்ளி போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட நியூசிலாந்து சென்றபோதுதான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று அமோல் மஜும்தார் கூறியிருந்தார்.
ரஞ்சி கோப்பையில் விளையாட இந்த வாய்ப்பை மும்பை கேப்டன் ரவி சாஸ்திரி தனக்கு வழங்கினார் என்று மஜும்தார் கூறினார்.
மஜும்தார் 1994 இல் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். அவர் சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் உடன் இந்தியா-ஏ அணிக்காகவும் விளையாடினார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்கள் எடுத்த போதிலும், அவருக்குத் தேசிய அணியில் ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான பயணம்
பட மூலாதாரம், Getty Images
அமோல் மஜும்தார் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்துள்ளார். உண்மையில், அவர் இத்தகைய கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
மஜும்தார் தனது வாழ்க்கையில் 171 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் 48.13 என்ற சராசரியுடன் 11,167 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 30 சதங்கள் மற்றும் 60 அரைசதங்கள் அடங்கும்.
அவர் இருந்த காலத்தில் மும்பை எட்டு முறை ரஞ்சி டிராபியை வென்றது.
2006-07 ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணி தொடக்கத்தில் மிக மோசமாக விளையாடிய போது அவர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அந்த விளையாட்டைப் பார்த்து அணி வெற்றி பெறும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் கேப்டனாக அவர் அணியை முன்னின்று வழிநடத்தினார், மேலும் ரஞ்சி டிராபி பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தார்.
மும்பை அணியுடன் 17 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பிறகு, அவர் 2009-இல் அசாம் அணிக்காக விளையாடினார். பின்னர் ஆந்திரப் பிரதேச அணியுடன் இணைந்தார். அவர் 2014 இல் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
பயிற்சியாளராக ஒரு புதிய அவதாரம்
உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் பயிற்சியாளராக தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார்.
அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அணிகளுக்குப் பயிற்சி அளித்தார், மேலும் மும்பை அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி குழுவிலும் இருந்துள்ளார்.
அக்டோபர் 2023 இல், அமோல் மஜும்தார் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த உலகக் கோப்பையில் நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டியில் தோல்வியடைந்தது, இதனால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு குறைவாக இருந்தது.
இந்தூரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் தோல்விக்குப் பிறகு, இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ஒரு சம்பவம் நடந்தது. இந்தியா ஆஸ்திரேலியாவை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்தபோது, ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் இந்தத் தகவல் கிடைத்தது.
அதில், இந்திய அணி தொடர்ந்து மூன்று தோல்விகளுக்குப் பிறகு எப்படி மீண்டு வர முடிந்தது என்று கேப்டன் ஹர்மன்பிரீத்திடம் கேட்கப்பட்டது?
ஹர்மன்பிரீத் தனது அருகில் நின்று கொண்டிருந்த பயிற்சியாளர் அமோலைக் கை காட்டி, “இங்கிலாந்திடம் தோற்ற பிறகு நான் டிரஸ்ஸிங் ரூமில் எதுவும் சொல்லவில்லை. அவர்தான் எல்லாவற்றையும் பேசினார். ‘நீங்கள் இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும்’ என்று அவர் கத்தினார்” என்று கூறினார்.
அவர் அருகில் நின்று கொண்டிருந்த அமோல், “ஆமாம், நான் டிரஸ்ஸிங் ரூமில் சில விஷயங்களைப் பேசினேன். ஆனால் நான் இவை அனைத்தையும் அணியின் நலனுக்காக மட்டுமே கூறினேன்” என்று உடனடியாகக் கூறினார்.

பின்னர் ஹர்மன்பிரீத் புன்னகையுடன், “அன்று சார் (அமோல் மஜும்தார்) கொஞ்சம் கோபமாகப் பேசினார். ஆனால் அனைவரும் அந்த வார்த்தைகளை நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள். ஏனென்றால் அவர் அணியின் நலனைப் பற்றி மட்டுமே பேசுகிறார். எங்களுக்கு அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் நேர்மையாகப் பேசுவார்” என்று கூறினார்.
“எங்களிடம் இருந்து சார் என்ன எதிர்பார்க்கிறார் என்று எங்களுக்குத் தெரியும். இந்த நாட்டிற்கு எங்கள் செயல்திறன் இப்படி இருக்கக் கூடாது. எல்லா வீரர்களும் அந்தக் கருத்தை நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள். எங்கள் செயல்திறனிலிருந்து நீங்கள் அதைப் புரிந்து கொள்ளலாம்.”
கேப்டன் ஹர்மன்பிரீத் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டிக்குப் பிறகு ஊடகங்களிடம், “சார் பயிற்சியாளரான பிறகு விஷயங்கள் முற்றிலும் மாறிவிட்டன. இதற்கு முன்பு பயிற்சியாளர்கள் வந்து சென்றார்கள். ஒரு நிலையான பயிற்சியாளர் வந்தது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்று கூறினார்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்திய அணியின் ஜெர்சியை அணியாத அமோல் மஜும்தார், இப்போது ஒரு பயிற்சியாளராகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
அவருடைய அணி உலக சாம்பியன் ஆகிவிட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு