• Fri. Dec 20th, 2024

24×7 Live News

Apdin News

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் | DMK and allied parties protest across Tamil Nadu

Byadmin

Dec 20, 2024


அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் 2 நாட்களாக கடும் அமளி நிலவியது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு திமுக நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் பகுதிவாரியாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ-க்கள் த.வேலு, கருணாநிதி, எழிலன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், மாவட்டச் செயலாளர் சிற்றரசு, முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அவர் பதவி விலகவும் வலியுறுத்தினர். மேலும், பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவையும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

கூட்டணி கட்சிகள்: தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில், சென்னை, அண்ணாசாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு பேசும்போது, “காங்கிரஸுக்கு எதிராக தவறான தகவல்களை பாஜக தலைவர்கள் பேசுவது கண்ணியக் குறைவானது. அம்பேத்கர் புகழுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் காங்கிரஸ் அனுமதிக்காது. அமித் ஷா பதவி விலக வேண்டும்” என்றார். இதில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விசிகவினர் ஆம்பூர், திண்டிவனம், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியல், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். அம்பேத்கரின் சிலைக்கு அருகே திரண்டு, அமித் ஷா மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டங்களை அப்பகுதியில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.

நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அமித் ஷாவின் உருவப் படம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் பரபரப்பு நிலவியது. சென்னையில், மயிலாப்பூர், வில்லிவாக்கம், பேசின்பாலம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மாவட்டச் செயலாளர்கள் அப்புன், உஷா ராணி, வேலுமணி, சாரநாத் உள்ளிட்டோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

சென்னை சென்ட்ரல் அருகில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அவர் பேசும்போது, “அம்பேத்கரை அமித் ஷா இழிவுபடுத்தியதை ஒப்புக்கொள்ள மறுத்து அதற்கு பொழிப்புரை எழுதும் அண்ணாமலையை கண்டிக்கிறோம். அம்பேத்கரை புரியாதவர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. அவர் என்றைக்காவது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்திருக்கிறாரா” என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்த அறிக்கையில், “அமைச்சரவையில் இருந்து அமித் ஷாவை நீக்க வலியுறுத்தி மாவட்ட, மாநகர, நகர, பேரூர் மற்றும் ஒன்றியத் தலைநகரங்களில் நாளை (இன்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை, நந்தனம், மாநிலக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.



By admin