தமிழக பாஜக சார்பில், அம்பேத்கர் ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் ஏப்.14-ம் தேதி முதல் ஏப்.25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நவீன இந்தியாவின் சிற்பி, அரசமைப்பின் தந்தை என அனைவராலும் போற்றப்படும் அம்பேத்கரின் பிறந்தநாள், ஏப்.14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் தொடர்பான 5 இடங்களை மேம்படுத்தியவர் நமது பிரதமர் நரேந்திர மோடி என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், தமிழக பாஜக சார்பில் அம்பேத்கர் ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடும் விதமாக மாநில பொதுச்செயலாளர் பி.கார்த்தியாயினி தலைமையில் குழு அமைக்கப்பட்டுளளது. இதில், செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், மகளிரணி பொதுச்செயலாளர் கே.நெல்லையம்மாள் உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஏப்.14 தொடங்கி ஏப்.25-ம் தேதி வரை அம்பேத்கர் ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.