• Mon. May 26th, 2025

24×7 Live News

Apdin News

அம்மாவின் ஆசையை நிறைவேற்ற பெலாரஸுக்குச் சென்ற தம்பிக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை

Byadmin

May 26, 2025


எனது தம்பி வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும்,  எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் எனது தம்பி தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற எனது தம்பியான விநாயகமூர்த்தி பகிரதனுக்கு  என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என அவரது சகோதரன் விநாயகமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில்  ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எனது தம்பி விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் எனது வீட்டில் இருந்து கடந்த 2025.01.07 ஆம் திகதி  பெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காகச் சென்றார்.

சட்டரீதியாகவே தொழில் வாய்ப்புக்காகத்தான் அவர் பயணமானார்.  அவர் திருகோணமலையைச் சேர்ந்த ஓர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஊடாகவே சென்றிருந்தார்.

எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் சிரமத்தின் மத்தியிலே தான் எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார்.

அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும்,  எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் அவர் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார்.

எனது தம்பி  பெலாரஸ் நாட்டிற்குச் சென்று பின்னர் அவர் அங்கு மரணமடைந்துள்ளதாக தெரிவித்தும், அவர் தொடர்பில் இதுவரையில் எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவர் அங்கு சென்று மூன்று மாதமான நிலையில் கடந்த 2025.04.06 ஆம் திகதி எமக்கு ஓர் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது.

அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்தாக  எனக்கு தகவல் கிடைத்திருந்தது. இச்செய்தி கேள்விப்பட்ட உடனேயே நாம் செய்வதறியாது திகைத்துப் போனோம்.

இது உண்மையானதா பொய்யானதா என நாம் தெரியாது இருக்கின்றோம். அந்த அதிர்ச்சியில் இருந்து எம்மால் இன்றும் மீள முடியாமல் இருக்கின்றது.

எது நடந்தாலும் அதற்குரிய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நான் எனது தம்பி வெளிநாடு சென்ற ஆவணங்கள் அனைத்தையும் பிரதி செய்து கொண்டு பிரதேச செயலகத்திலே கடமையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு உத்தியோகத்தரிடம் வழங்கியிருந்தேன்.

இவ்வாறு எனது சகோதரன் மரணம் அடைந்திருந்தால் அவருடைய சடலத்தை எனக்கு கொண்டு வந்து தருமாறு உரிய நாட்டிடம் தெரிவிக்குமாறு நான் அந்த உத்தியோதரிடம் தெரிவித்திருந்தேன்.

பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் அவர்கள் வெளிநாட்டு தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

இதற்கு மேலாக எனது தம்பிக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் பல அரசியல்வாதிகளிடமும்  தெரிவித்து இருந்தேன்.

கடந்த 2025.04.06 ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக அறிந்தோம்.  இன்று மே 25ஆம் திகதி ஆகிறது இரு மாதங்கள் ஆகின்றன. இதுவரைக்கும் எனது தம்பியின் தகவல்கள் எதுவும் தெரியாது.

தம்பி பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பிய  முகவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதாக எனக்கு குறுஞ் செய்தி ஒன்றை மாத்திரம் அனுப்பி உள்ளார்.

மீண்டும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற போது அவர் எமது அழைப்புக்கு பதில் அளிக்கின்றார் இல்லை. இவ்வாறான நிலைக்கு மத்தியிலும் மிகுந்த வேதனைக்கு மத்தியிலும் எமது வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது.

மேலும் பெலாரஸ் நாட்டுடன் தொடர்புடைய ஏனைய நாடுகளின்  தூதரகங்களும், இதனை கருத்தில் கொண்டு எனது சகோதரனுக்கு என்ன நடைபெற்றது என்பதை அறிந்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனது சகோதரன் உயிரோடு இருக்கிறாரா? உண்மையிலேயே மரணித்து விட்டாரா? அவர் மரணித்தால் அவருடைய உடலை எங்களது வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு உதவி செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

By admin