படக்குறிப்பு, நாம் உணராத அளவிற்கு அல்காரிதம்கள் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று லாரா ஜி. டி ரிவேரா கூறுகிறார்.கட்டுரை தகவல்
நீங்கள் இரவு உணவு சாப்பிட வெளியே செல்ல முடிவு செய்கிறீர்கள். நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று உங்கள் துணையால் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கு அது தெரியும்: மாலையில் நீங்கள் ‘டாக்கோஸ்’ (Tacos) பற்றிய வீடியோக்களை பார்ப்பதைக் கண்டது, அதனால் இப்போது நீங்கள் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது என்பதை அது தெளிவாக உணர்ந்துள்ளது.
“நாம் முடிவுகளை எடுக்காவிட்டால், மற்றவர்கள் நமக்காக அதைச் செய்வார்கள்,” என்று ஸ்பானிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லாரா ஜி. டி ரிவேரா, பல ஆண்டுக்கால ஆராய்ச்சியின் விளைவாக வெளிவந்த தனது “அல்காரிதம்களின் அடிமைகள்: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எதிர்ப்புக்கான கையேடு” (Slaves of the Algorithm: A Manual of Resistance in the Age of Artificial Intelligence) என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
“மனிதர்கள் மிகவும் கணிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் நாம் வெளியிலிருந்து திணிக்கப்பட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் உணர்வுகளில் மூழ்கி வாழ்கிறோம். நமது கடந்த கால செயல்களில் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவது போதுமானது, அது யாரோ ஒருவர் நம் மனதைப் படித்தது போலாகிவிடும்,” என்று அவர் கூறுகிறார்.
நமது தேவைகள் அல்லது விருப்பங்களைக் கணிப்பதில் துல்லியம் மிக அதிகமாக உள்ளது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட அல்காரிதத்திற்கு போதுமான டிஜிட்டல் தரவுகள் அளிக்கப்பட்டால் நீங்கள் விரும்புவதையோ அல்லது விரும்பும் விஷயங்களையோ உங்கள் தாயைவிட மிகச் சிறப்பாக அதனால் கணிக்க முடியும் என்று ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக உளவியலாளர் மற்றும் பேராசிரியர் மைக்கேல் கோசின்ஸ்கி தனது சோதனைகளில் நிரூபித்தார்.
செயற்கை நுண்ணறிவால் ஒருவரின் ஆர்வங்களை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பது கொள்கையளவில், நல்லதாகத் தோன்றுகிறது. ஆனால் அதற்கு ஒரு விலை உண்டு, அது மிக அதிகம் என்று டி ரிவேரா கூறுகிறார்: “சுதந்திரத்தை இழக்கிறோம், நாம் நாமாக இருக்கும் திறனை இழக்கிறோம், கற்பனையை இழக்கிறோம்.”
“சமூக வலையமைப்பு (Social Network) இருக்கவும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் நாமெல்லாம் நம் புகைப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் இன்ஸ்டாகிராமுக்கு இலவசமாக வேலை செய்கிறோம். விழிப்புடன் இருந்து, அபாயங்கள் உங்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டு தளங்களின் நன்மைகளைப் பயன்படுத்துவது அவசியம்,” என்று அவர் கூறுகிறார்.
பெரு நாட்டின் அரெகுய்பா நகரில் நவம்பர் 6 முதல் 9 வரை நடைபெறவுள்ள 15 நாடுகளில் இருந்து 130 பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் ஹே விழாவின் (Hay Festival) பின்புலத்தில் டி ரிவேராவுடன் நாங்கள் பேசினோம்.
பட மூலாதாரம், Penguin Random House
படக்குறிப்பு, “தகவல்தான் அதிகாரம். அதைப் பெறுவதற்கான போட்டி கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது,” என்று புத்தக ஆசிரியர் எழுதுகிறார்.
அல்காரிதத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? என்ன தீர்வு?
நான் காணும் தீர்வு மிகவும் எளிமையானது, யாருக்கும் சாத்தியமானது, இலவசமானது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாதது. அதுதான் சிந்திப்பது. அதாவது, நமது மூளையைப் பயன்படுத்துவது. இது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்ட ஒரு மனிதத் திறன்.
நாம் வேலை செய்யாத அல்லது மக்களுடன் இல்லாத ஒவ்வொரு தருணத்திலும், நாம் தொலைபேசியை எடுத்துத் திரையில் கவனம் செலுத்தி நம்மை திசை திருப்புகிறோம். இப்போது மருத்துவரின் காத்திருப்பு அறையிலோ அல்லது வீட்டில் சலிப்படையும்போதோ நாம் சிந்திப்பதில்லை.
நாம் சிந்திக்க வைத்திருந்த அந்த இடங்கள் இப்போது தொடர்ச்சியான திசை திருப்பலால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நமது ஸ்மார்ட்ஃபோன் மூலம், நம்மால் சிந்திக்க முடியாத அளவுக்குத் தொடர்ந்து தூண்டுதல்களைப் பெறுகிறோம்.
நாம் செய்யக்கூடிய வேறு சில விஷயங்களும் உள்ளன, ஆனால் இதுதான் மிக அடிப்படையானதாகவும் எளிதானதாகவும் நான் கருதுகிறேன். அல்காரிதத்தின் கட்டுப்பாடு மற்றும் மூன்றாம் தரப்பினரின் விருப்பத்திற்கு எதிராக விமர்சனப் பார்வையால் மட்டுமே தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும்.
நீங்கள் ஒரு தளத்தில் பதிவு செய்யும்போது உங்கள் தரவை வழங்காமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு சேவையின் அனைத்து நுணுக்கமான விஷயங்களையும் படிப்பது அல்லது ஒவ்வொரு முறை ஒரு வலைதளத்திற்குள் நுழையும்போதும் “குக்கீகளை” (cookies) நிராகரிப்பது இன்னும் சிக்கலானது. நாம் என்ன சோம்பேறிகளாகிவிட்டோமா?
நாம் கொஞ்சம் சோம்பேறிகளாகவும், கொஞ்சம் கைப்பாவைகளாகவும் இருக்கிறோம், ஆனால் நமக்குத் தகவல் இல்லாமலும் இருக்கிறோம்.
டிக் டோக் தளத்தில் பல மணிநேரம் செலவிடும்போது, அந்தத் தளத்திற்கு இலவசமாக வேலை செய்கிறோம் என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. தங்கள் ஆன்லைன் நடத்தையைப் பற்றிய எல்லா தகவல்களையும் அவர்கள் கொடுக்கிறார்கள், மேலும் அந்தத் தகவலுக்கு மதிப்பு இருக்கிறது.
அதனால்தான் கல்வி முக்கியமானது, இந்தப் பெரிய தளங்களின் வணிக மாதிரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குவதே அது.
நமக்கு கூகுள் இலவசமாக சேவை செய்கிறது என்றால், உலகின் பணக்கார நிறுவனங்களில் ஒன்றாக அது இருப்பது எப்படிச் சாத்தியம்? இதைப் பற்றிச் சிந்திப்பது மிகவும் முக்கியம், அப்போதுதான் தங்களைப் பற்றி அளிக்கக்கூடிய அனைத்துத் தகவல்களும் எவ்வளவு மதிப்பு மிக்கவை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, “முடிவெடுப்பது நமக்கு பயத்தை தருகிறது, மேலும் ரோபோக்களை போல் இருந்துகொண்டு, என்ன செய்ய வேண்டுமென்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமென நாம் விரும்புகிறோம்,” என்று பத்திரிகையாளர் கூறுகிறார்.
செயற்கை நுண்ணறிவின் ஆபத்து என்ன?
உண்மையான ஆபத்து மனிதர்களின் மடமைதான். ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு உங்களுக்குத் தீங்கு செய்ய வேண்டியதில்லை, அவை பூஜ்ஜியங்களும் ஒன்றுகளும் (zeros and ones) மட்டுமே.
ஆனால், நம்முடைய சோம்பல் மிக அதிகமாக இருப்பதால், விஷயங்கள் நமக்குச் செய்து முடிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டால், அது மிகவும் நல்லது என ஏற்றுக்கொள்கிறோம். இதெல்லாம் நாம் இன்னும் அதிக அளவில் கையாளப்படக் கூடிய சூழ்நிலையில் நம்மை வைக்கிறது.
நாம் மன விருப்பம் மரத்துப் போய்விட்ட நிலையில் வாழ்கிறோம். சுகாதார அமைப்பின் டிஜிட்டல்மயமாக்கல், பாரிய கண்காணிப்பு மற்றும் நமது குழந்தைகளின் ஆன்லைன் கல்வி ஆகியவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்கிறோம். அநீதிகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அறியாமையை நாம் தவிர்க்க முடியாத விஷயங்களாக ஏற்றுக் கொள்கிறோம், நாம் மிகவும் சோம்பலாக இருப்பதால் அவற்றுக்கு எதிராக நம்மால் கிளர்ச்சி செய்ய முடியாது.
ஒரு அல்காரிதம் அமைப்பில் தன்னியக்கத்தின் பேரில் செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளும் கணிப்புகளை முழுமையாக நம்புவதால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும்?
நமது கருத்து வேறாக இருந்தாலும்கூட, ஒரு கணினி சொன்னால், அது உண்மையாக இருக்கும் என்று மனிதர்கள் நம்பத் தலைப்படுகிறார்கள் என ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால், வாழ்வா, சாவா முடிவுகள் உள்பட முக்கியமான முடிவுகளை நாம் பிறரிடம் ஒப்படைக்கும்போது அபாயம் மிக அதிகமாக உள்ளது.
அப்படியானால், யார் முடிவெடுக்க நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்கள்? உங்கள் அம்மா, உங்கள் ஆசிரியர், உங்கள் முதலாளி, அல்லது செயற்கை நுண்ணறிவு?
இது மனிதர்களுக்கு மிகவும் பழமையான ஒரு பிரச்னை. மேலும் உளவியலாளர், சமூகவியலாளர் மற்றும் பிராங்பேர்ட் பள்ளியின் உறுப்பினரான எரிக் ஃப்ரோமின் “சுதந்திரத்தைப் பற்றிய பயம்” (fear of freedom) என்ற புத்தகத்தை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தப் புத்தகம் இதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் நமக்குச் சொல்வதையே மனிதர்கள் விரும்புகிறார்கள் என்று ஃப்ரோம் வாதிடுகிறார். ஏனென்றால் அது நம்மைச் சார்ந்தது என்று நினைப்பது நமக்குப் பயங்கரமான பீதியைக் கொடுக்கிறது. முடிவெடுப்பது நமக்கு மிகவும் பயமாக இருக்கிறது, மேலும் ரோபோக்களை போல் இருந்து என்ன செய்ய வேண்டுமென மற்றவர்கள் சொல்ல வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இதை ஃப்ரோம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவுக்காக மிகப்பெரிய தரவு மையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன
நமது தரவை ஆன்லைனில் கொடுக்காமல் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது. உங்கள் தரவை வழங்காமல் இருக்க வழிகள் உள்ளன. தேவையானதை மட்டும் கொடுக்க வழிகள் உள்ளன. ஆனால் முக்கியமானது, தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவதுதான். அப்போதுதான் நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
உங்கள் வாழ்க்கையையும் தரவையும் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அதைச் சற்றுக் கடினமாக்குவதற்காக மட்டுமே என்றாலும்கூட ஒரு பக்கத்திற்குள் நுழையும்போது குக்கீகளை நிராகரிப்பது போன்ற சிறிய செயல்களுக்கு நீங்கள் பழகிக் கொள்ளலாம்.
வேறு என்ன செய்ய முடியும்?
நம்மைப் பாதுகாக்க ஓர் ஒழுங்குமுறை தேவைப்படுவதைப் பற்றிப் பேசலாம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் நெறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேசலாம்.
விசில்ப்ளோயர்கள் (Whistleblowers – கூகுள் அல்லது மெட்டா போன்ற நிறுவனங்களுக்குள் பணிபுரியும் மற்றும் அமைப்பு பற்றித் தெரிந்தவர்கள்) கூறும் விஷயங்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசலாம். அவர்கள் பேச முடிவு செய்யும்போது அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதுடன் அவர்களைப் பாதுகாப்பதும் முக்கியம்.
அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு அமைப்புகளை வெளிப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனின் வழக்கைக் குறிப்பிடுகிறீர்களா?
ஆம், ஸ்னோடன் எனக்கு இந்த நூற்றாண்டின் ஹீரோக்களில் ஒருவர். ஆனால் மேலும் பலர் இருக்கிறார்கள். அவருடையதுதான் மிகவும் அறியப்பட்ட வழக்கு.
சோஃபி ஜாங் (Sophie Zhang) என்ற ஃபேஸ்புக்கின் தரவு விஞ்ஞானியும் உள்ளார். பொதுக் கருத்தைத் திரட்டுவதற்காகவும் வெறுப்பைத் தூண்டுவதற்காகவும் அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளால் போலிக் கணக்குகள் மற்றும் போட்களை (bots) திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுவது குறித்து அவர் நிறுவனத்திற்கு உள்ளேயே எச்சரித்த பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவின் சில இடங்கள் உள்பட உலகின் பல பகுதிகளில், அரசியல்வாதிகள் போலிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். நிஜத்தில் இல்லாத பின்தொடர்பவர்கள்(Followers), நிறுத்த முடியாத விருப்பங்கள் மற்றும் மறுபதிவுகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உண்மையான ஆதரவும் மக்கள் ஏற்பும் இல்லாதபோதுகூட தங்களிடம் அது இருப்பதாக நம்ப வைக்கிறார்கள் என்பதை ஜாங் உணர்ந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய சிக்கலான தகவல்களின் முழுத் தொகுப்பும் பெரிய தரவு மையங்களில் சேமிக்கப்படுகின்றன.
பிரச்னை குறித்துத் தனது உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தபோது, யாரும் அதைச் சரிசெய்ய விரும்பவில்லை என்பதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்.
உதாரணமாக, ஹோண்டுராஸின் அப்போதைய அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸின் போலியான பின்தொடர்பவர்கள் வலையமைப்பை நீக்க ஒரு வருடம் பிடித்தது. இவர் அமெரிக்காவுக்கு கொகைன் இறக்குமதி செய்வதற்கான சதியில் ஈடுபட்டது மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக நியூயார்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
உங்கள் புத்தகத்தில், கூகுளின் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைக் குழுவின் இணை இயக்குநராக இருந்த கணினிப் பொறியாளர் டிம்னிட் கெப்ருவின் (Timnit Gebru) வழக்கையும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஆம், அல்காரிதம்கள் இனம் மற்றும் பாலின பாகுபாட்டிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியதற்காக (பணி நீக்கம் செய்யப்பட்டார்). பெரிய மொழி மாதிரிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், மக்கள் அவற்றை மனிதர்கள் என்று நம்பக்கூடும் என்றும், அவற்றால் பிறரைக் கையாள முடியும் என்றும் அவர் எச்சரித்தார். அவருடைய பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுவனத்தின் 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்ட கடிதம் இருந்தபோதிலும், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
யூட்யூப்பின் முன்னாள் ஊழியரான கியோம் சாஸ்லோட் (Guillaume Chaslot) மற்றொரு “விசில்ப்ளோயிங் ஹீரோ”. பரிந்துரை அல்காரிதம் பயனர்களைப் பரபரப்பான, சதிக் கோட்பாடு மற்றும் பிளவுபடுத்தும் உள்ளடக்கங்களை நோக்கித் தள்ளுவதை அவர் கண்டுபிடித்தார்.
நமக்கு எஞ்சியிருக்கும் நம்பிக்கை என்ன?
உறுதியாக நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு மென்பொருள் நிரல் (Software Program) என்ன செய்தாலும், அது புதிய விருப்பங்களைக் கண்டுபிடிப்பதற்கான மிகச் சிறிய அளவிலான படைப்பாற்றலைக்கூட அளிக்க முடியாது, அதாவது கடந்த கால தரவுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இல்லாத படைப்பாற்றலை அதனால் கொடுக்க முடியாது.
அதனால் மற்றவரின் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் பச்சாதாபத்தின் (empathy) அடிப்படையிலான தீர்வுகளையும் அளிக்க முடியாது, அல்லது மற்றவர்களின் மகிழ்ச்சியில் தனது சொந்த மகிழ்ச்சியைத் தேடும் ஒற்றுமையின் (solidarity) அடிப்படையிலான தீர்வுகளையும் அளிக்க முடியாது.
இந்த மூன்று குணங்களும் வரையறையின்படி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானவை.