சென்னை: பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அரக்கோணம் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் குறித்த புகாரை தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், ‘ திமுக நிர்வாகி தெய்வச்செயல் சிறுமிகளை அரசியல்வாதிகளுடன் பாலியல் தொடர்பில் இருக்கக் கட்டாயப்படுத்தியதாக அவரின் மனைவி கூறிய தகவல்கள் குறித்து வெளியான ஊடக செய்தியை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதில் திமுக இளைஞர் பிரிவு நிர்வாகியின் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வற்புறுத்தல் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கும்.
குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அரசியல் தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் தமிழக டிஜிபிக்கு உடனடியாக, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்தல், ஒரு சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைத்தல், எந்தவொரு அரசியல் தலையீட்டையும் தடுப்பது மற்றும் பிஎன்எஸ் 2023 இன் தொடர்புடைய விதிகளின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாட்களுக்குள் எப்ஐஆரின் நகலுடன் நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையையும் ஆணையம் கோரியுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்த தெய்வச்செயல் என்பவர் மீது பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மேலும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வருவதாக அதிர்ச்சியை கிளப்பினார்.
இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், “அரக்கோணம் காவனூர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் தெய்வச்செயல். இருபது வயது பெண்களை குறிவைத்து காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள். அவர் பல இளம் பெண்களை தேடித் தேடி காதலித்து துன்புறுத்தியுள்ளார். இது எனக்கு தெரியாது. என்னைச் சுற்றி வழக்கு ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதைத் தெரிந்து கொண்டு வழக்கறிஞர் எனச் சொல்லி என்னிடம் வந்து தொந்தரவு செய்தார். திமுகவில் இருக்கிறேன். நீ என்னை கல்யாணம் செய்துகொள் இல்லையென்றால் உங்கள் அப்பா, அம்மாவை கொலை பண்ணி விடுவேன் என்று மிரட்டி வலுக்கட்டாயமாக திருமணம் செய்தார்” என்றார். இதுபோல தெய்வச்செயலால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இச்சம்பவத்தை கண்டித்து அரக்கோணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட விரிவான அறிக்கையில், ‘ பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கெனவே பலருடன் திருமணம் செய்துகொண்ட நிலையில், தன்னையும் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தவறான வழியில் ஈடுபடுத்த துன்புறுத்துவதாகவும், உரிய ஆதாரங்களுடன் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாகவும், கடும் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை, தான் கூறிய முழு விபரங்களையும் எப்ஐஆரில் குறிப்பிடாமல் பதிவு செய்ததால், அறிக்கையை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தி உள்ளார்.
இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியின் பேட்டியை அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் விரிவாக வெளியிட்டுள்ளன. திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற `சார்’களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்த தெய்வச்செயலை அப்பொறுப்பில் இருந்து நீக்கி திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.