5
சுகாதார அமைச்சராக நளிந்த ஜயதிஸ்ஸ அங்கம் வகிக்கும் தற்போதைய அரசாங்கம், வைத்தியர்களை, அவர்களது விருப்பத்துக்கு மாறாக பணியாற்றுவதற்கு கட்டாயப்படுத்த முயற்சிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சுமத்தியுள்ளது.
புதன்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உபசெயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய, குறித்த சங்கத்துடன் இணைந்த 23,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இவ்வாறான கட்டாயத்தின் கீழ் பணியாற்றத் தயாராக இல்லை எனத் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ஆண்டுதோறும் நடைபெறும் வைத்தியர்களுக்கான இடமாற்றச் செயற்பாடுகளை நியாயப்படுத்தினார்.
பெப்ரவரி தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இடமாற்ற செயற்பாட்டுப் பணிகள், மே 10ஆம் திகதிக்குள் சுமார் 6,000 இடமாற்றங்கள் நிறைவு செய்யப்படும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கடந்த 13 ஆண்டுகளாக ஒரு முறையான இடமாற்ற முறைமை திறம்பட நடைமுறைப்படுத்தப்படவில்லை, சிலர் 13 முதல் 17 ஆண்டுகள் வரை ஒரே பதவியில் நீடித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாறான முறைகேடுகளை நீக்கி, முன்னர் பாதிக்கப்பட்ட வைத்தியர்களுக்கு நீதியை உறுதி செய்வதே இந்தப் புதிய இடமாற்ற முறைமையின் இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அவரை பொறுத்தவரை, கடந்தகால முறைகேடான நடைமுறைகளால் பயனடைந்த தனிநபர்களிடமிருந்தே இந்த இடமாற்ற செயல்முறைக்கு எதிர்ப்பு வெளிக்கிளம்பியிருக்கிறது என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்துரைத்த ஹன்சமால் வீரசூரிய, அமைச்சர் தவறான தகவல்களை கூறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர், “2019ஆம் ஆண்டில் இடமாற்ற செயல்முறைகளை எமது சங்கமே 98 சதவீதம் வெற்றிகரமாக பூர்த்தி செய்தது.
2026ஆம் ஆண்டின் இடமாற்றங்கள் பெப்ரவரியில் தொடங்கப்பட்ட போதிலும் திட்டமிடப்பட்ட 6000 இடமாற்றங்களில் 5இல் ஒரு பங்குக்கும் குறைவானவர்களையே கடந்த இரண்டு மாதங்களில் இடமாற்ற முடிந்துள்ளது என குறிப்பிட்டார்.
இந்த இடமாற்றத் திட்டத்தை செயற்படுத்துவதில் சுகாதார அமைச்சின் செயல்திறனையும் இதன்போது அவர் விமர்சித்தார்.
மருத்துவர்கள் அரசியல் அதிகாரத்துக்கு அடிபணிந்தவர்கள் அல்லர். அவர்கள் யாருக்கும் கடன்பட்டவர்கள் அல்லர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் அழுத்தத்தின் கீழ் பணியாற்ற ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.