• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும்: தமிழ் வளர்ச்சித் துறை செயலர் உத்தரவு | Government orders should be published only in Tamil language

Byadmin

Apr 17, 2025


சென்னை: அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத்துறை செயலாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன் அரசு துறைகளின் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்மொழியை பயன்படுத்தவும், அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அதேபோல், சிற்றாணை குறிப்புகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். துறை தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.

வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை (விலக்கு அளிக்கப்பட்ட இனங்கள் தவிர) தமிழில்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் எழுதுவதோடு அவை பற்றிய குறிப்புகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். அரசு பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் வெளியிட விலக்கு அளிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கு ஏற்ப தலைமைச் செயலக துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகள் தமிழில் வெளியிடுவதற்கு வசதியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்ய அனுப்ப வேண்டும். அல்லது அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைப்பட்டால் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



By admin