• Sun. Aug 17th, 2025

24×7 Live News

Apdin News

“அரசால் தொழிலாளர் நலன் பாதித்தால் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பர்” – சேலம் மாநாட்டில் பெ.சண்முகம் பேச்சு | Communists will oppose if the government harms workers welfare – P. Shanmugam

Byadmin

Aug 16, 2025


சேலம்: “தூய்மைப் பணி என்பது நிரந்தரமானது என்று சொன்னால், அவர்களுடைய பணியும் நிரந்தரமாகவே இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கையும் 100 சதவீதம் நியாயமானது. தொழிலாளர்களின் நலனை பாதிக்கக் கூடிய வகையில் அரசு செயல்படுமானால், அதை கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள். அதுதான் எங்களுடைய கடமை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசினார்.

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியது: “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அனைத்து தொந்தரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். மாநில உரிமைப் பறிப்பு, நிதி ஒதுக்கிட்டு பாரபட்சம், வரியில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

மாநில உரிமைகளை பாதுகாக்கும் முயற்சியில் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டுவது மூலமாகவே பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்துகின்ற முயற்சி கம்யூனிஸ்ட் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு கடைபிடிக்கின்ற பொருளாதார கொள்கையின் மூலமாக நாடு முழுவதும் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். நவீன தாராளமயத்துக்கு எதிராக இடதுசாரிகள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். மக்களுக்கு விரோதமான பொருளாதார கொள்கைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. மாற்று பொருளாதார கொள்கை என்பதை முன்வைக்க முடியாத நிலையை ஏற்படுத்தி விடுவார்கள். சாதி ஆணவப் படுகொலை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

தூய்மைப் பணி என்பது நிரந்தரமானது என்று சொன்னால், அவர்களுடைய பணியும் நிரந்தரமாகவே இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கையும் 100 சதவீதம் நியாயமானது. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை சம்பந்தமாக முதல்வரிடம், அமைச்சரிடமும் கோரிக்கை வைத்தோம். எந்த ஒரு தொழிலாளர்கள் பிரச்சனையாக இருந்தாலும், தொழிலாளர்களின் நலனை பாதிக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயல்படுமானால், அதை கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பார்கள். அதுதான் எங்களுடைய கடமை. எங்களுடைய கடமையை விட்டுக் கொடுத்துவிட்டு அரசியல் உறவு என்பது எப்படி சாத்தியமாகும்.

தமிழ்நாடு அரசுடன் கம்யூனிஸ்டுகள் ஒத்தக்கருத்துடன் ஒத்துப் போகிறோம். தொழிலாளர் வர்க்கத்தின் நலனை பாதுகாக்கின்ற விஷயங்களில் முரண்படுகிறோம். இவை தெரிந்தேதான் தமிழக முதல்வர் எங்களுடன் பயணிக்கிறார். இந்த முரண்பாடுகள் வரும்போது அணி உடைய போகிறது, கூட்டணி மாற போகிறது என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அது அவ்வாறு அல்ல. கம்யூனிஸ்டுகள் கூட்டணி சேர்ந்துள்ளது.

பாஜகவின் மதவெறி அஜெண்டாவுக்கு எதிராக களத்தில் இருப்போம், கழகத்துடன் சேர்ந்து நிற்போம். தொழிலாளர் வர்க்கத்தின் நலன் பாதிக்கின்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நின்று தமிழ்நாடு அரசின் அணுகுமுறை தவறு என்று தைரியமாக சொல்லக் கூடியவைகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்து வருகிறது. முரண்படுவதும் உடன்படுவதும் சேர்த்ததுதான் கூட்டணியே தவிர, அனைத்தையும் ஆதரித்து உடன்பட்டுபோவது அல்ல கூட்டணியின் நிலைப்பாடு” என்று பெ.சண்முகம் பேசினார்.

ஈஸ்வரன் பேச்சு: இந்த மாநாட்டில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பேசும்போது, “தமிழகத்தில் ஆளுகின்ற கட்சியை எதிர்த்து, எதிர்க்கட்சி மட்டுமல்ல, ஆளுங்கட்சியில் உள்ள கூட்டணி கட்சிகளும் போராடும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டிக் செயல்படுத்தி கொண்டிருக்கிறார். இதுபோன்ற ஜனநாயகம் டெல்லியில் உள்ளதா என்பது தான் கேள்வி.

டெல்லியில் உள்ள ஆளுங்கட்சியை எதிர்த்து, மற்ற கட்சிகள் போராட்டம் செய்துவிட முடியுமா? அவ்வாறு கேட்டால் என்ன நடக்கும். இதுதான் ஜனநாயகமா? ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற கடமை இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் இருக்கும் நிலையில், அதிக கடமை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உள்ளது. இந்தியாவை அமெரிக்கா மிரட்டுகிறது. இந்தியாவை பொருளாதார அடிமைகளாக மாற்ற முயற்சியை கொண்டு வருகிறார்கள். தேசத்தை காப்பாற்ற வேண்டும், இதனை மீட்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போராடுகின்ற அரசியல் கடமை நம்மிடம் உள்ளது.

ஐவுளி துறையில் 2014-ம் ஆண்டு வங்கதேசத்தின் நிலைமை என்ன? தற்போது, இந்தியாவைப் போல 3 மடங்கு ஏற்றுமதி செய்கிறார்கள. இந்த வளர்ச்சியை டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் கொடுப்பதற்கு முன்வருவார்களா? தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகம் எவ்வளவோ மேல். தமிழகத்தில் பாஜகவை காலூன்ற முடியாமல் விரட்டி அடித்து வருகிறோம். தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டால், மற்ற மாநிலங்களைபோல், தமிழகமும் மாறிபோகும், வளர்ச்சி பாதிக்கப்படும்.

இந்த நிலையை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில், எத்தனையோ ஏமாற்று வேலை, சதித்திட்டங்களை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியை அதிக தொகுதிகளுடன் தமிழகத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆளுநர் மூலம் அதிக தொல்லைகளை கொடுக்கலாம் என்று டெல்லியில் இருந்து நினைக்கிறார்கள். எவ்வளவு தொல்லைகளை கொடுக்க முடியுமோ அனைத்து தொல்லைகளையும் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று அவர் பேசினார்.

வேல்முருகன் பேச்சு: இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியது, “தமிழகத்தில் சங்பரிவார அமைப்பு காலூன்ற பார்க்கிறது. தமிழகத்தில் திட்டமிட்டு இந்தி சூழ்ச்சியின் மூலம் திணிக்க பாஜக முயற்சிக்கிறது. வடமாநில தொழிலாளருக்கு எதிரானவன் அல்ல. திட்டமிட்டு தமிழகத்தில் வட மாநிலத்தவர்களை அழைத்து வந்து வாக்காளர்களாக மாற்ற தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தமிழக தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது. தமிழகத்தில் திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம் சங்பரிவார அமைப்பினர்தான்.

வேல்முருகன், ஈஸ்வரன்

தமிழகத்தில் திமுக தலைமையில் இருக்கும் கூட்டணியை முறியடிக்க எல்லாம் தில்லாலங்கடி வேலைகளையும் பாஜக மேற்கொண்டுள்ளது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சியின் மூலம், குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைத்து வெளியே கொண்டு வர முடியாது. சீட்டுக்காகவோ, பிரதிபலனுக்காகவோ இந்த கூட்டணி கட்சிகள் அணி மாறாது.

தொழிலாளர்களுக்கு எதிரான திட்டங்கள் கொண்டுவரபோதும் முரண்படலாம். எது முரண்பட்டாலும் பாஜக உடன் கூட்டணி சேரும் கட்சிகளுடன் ஒருபோதும் சேர மாட்டோம். அனைத்து கட்சிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தாக்கம் இருக்கும். ஆனால் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது. கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டமன்றங்கள், சுவாரசியமாக இருக்காது” என்று அவர் பேசினார்.



By admin