• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

“அரசின் செயலற்றதன்மையை காட்டுகிறது” – விமான சாகச நிகழ்ச்சி குறித்து இபிஎஸ் விமர்சனம் | EPS condemns Chennai Air Show mismanagement

Byadmin

Oct 7, 2024


சென்னை: “முதலமைச்சர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன. இது அரசின் செயலற்றதன்மை, கையாலாகாத தன்மையை காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: “முதலமைச்சரின் அறிவிப்பு காரணமாகத்தான் விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடினர். இத்தனை லட்சம் மக்கள் அங்கு கூடுவார்கள் என்பதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டு அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்திருந்தால் உயிரிழப்புகளை அரசு தடுத்திருக்கலாம்.

ஆனால் முதலமைச்சர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன. இது அரசின் செயலற்றதன்மை, கையாலாகாத தன்மையை காட்டுகிறது. இதே விமான சாகச நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆண்டுகொண்டிருப்பதால் மக்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இனியாவது திமுக அரசு இப்படிப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற நிகழ்ச்சியை நடத்தும்போது முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்கான முழு பொறுப்பையும் ஸ்டாலின்தான் ஏற்கவேண்டும்” இவ்வாறு இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



By admin